சம்பியன்ஸ் லீக் நொக் அவுட் சுற்றில் மன்செஸ்டர் சிட்டி மற்றும் அட்லெடிகோ மெட்ரிட் அணிகள் வெற்றி

207
Champions League

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் சுற்றில் 16 அணிகள் மோதும் முதலாவது நொக் அவுட் சுற்றுப் போட்டிகளில் ஏற்கனவே நான்கு முதல்கட்டப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், காலிறுதிக்கான மேலும் இரண்டு அணிகளைத் தெரிவு செய்வதற்கான மற்றும் இரண்டு போட்டிகளின் முதல் கட்ட ஆட்டம் நேற்று  நடைபெற்றன.

அதில், மன்செஸ்டர் சிட்டி மற்றும் மொனாக்கோ அணிகளுக்கிடையிலான போட்டியில் இறுதி நேர அதிரடியினால் மன்செஸ்டர் சிட்டி 5-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது. மற்றைய போட்டியில் பயர் லெவிர்குசன் அணியை 4-2 என்ற கோல்கள் கணக்கில் அட்லெடிகோ மெட்ரிட் அணி வெற்றிகொண்டது.

மன்செஸ்டர் சிட்டி எதிர் மொனாக்கோ

இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் 26ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் முதல் கோலை அடித்து மன்செஸ்டர் சிட்டி அணியை முன்னிலைப் படுத்தினார்.

எனினும், அடுத்த 10 நிமிடங்களுக்குள் பாபினியோ குறுக்காக உள்ளனுப்பிய பந்தை ராடமேல் பால்கோ ஹெடர் மூலம் கோல் அடித்து ஆட்டத்தை சமப்படுத்தினார்.

அதன் பின்னர் போட்டியின் 40ஆவது நிமிடம் கைலியன்  மத்தபி கோல் அடித்து மொனாக்கோ அணியை முன்னிலைப் படுத்தினார். அந்த வகையில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் முதல் பாதி நேரம் நிறைவு பெற்றிருந்தது.

எனினும், இரண்டாம் பாதி நேரத்தில் மொனாக்கோ அணி மீண்டும் ஒரு கோலை போட்டு முன்னிலை பெற்றது. அதன் பின்னர் மீண்டெழுந்த மன்செஸ்டர் சிட்டி, அதிரடியாக நான்கு கோள்களை சீரான இடைவெளிகளில் அடித்து போட்டியில் வெற்றியீட்டியது.

செர்ஜியோ ஆகாரோ போட்டியின் 58ஆவது நிமிடம் கோல் அடித்து கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். அதற்குப் பதிலாக அடுத்த மூன்றாவது நிமிடம் மற்றுமொரு கோலை அடித்து ராடமேல் பால்கோ மீண்டும் மொனாக்கோ அணியை முன்னிலைப் படுத்தினார்.

எனினும், இரண்டாவது பாதியில் தமக்கு கிடைத்த பெனால்டி மூலம் கோலைப் பெற்றுக்கொள்ளவிருந்த சிறந்த வாய்ப்பை மொனாக்கோ அணி வீணடித்தது. தொடர்ந்தும் போராடிய செர்ஜியோ ஆகாரோ 71ஆவது நிமிடம் தனது இரண்டாவது கோலின் மூலம் போட்டியை மீண்டும் சமப்படுத்தினார்.

அத்துடன், கிடைக்கப் பெற்ற கோணர் உதை மூலம் உள்வந்த பந்தை 77ஆவது நிமிடம் ஜான் ஸ்டோன் கோலாக மாற்றினார். அதனைத் தொடர்ந்து,  லிரோய் சனே  82ஆவது நிமிடம் ஆட்டத்தின் இறுதி கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாம் கட்டப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி மொனாக்கோவில் நடைபெறவுள்ளது.


பயர் லெவிர்குசன் எதிர் அட்லெடிகோ மெட்ரிட்

இந்தப் போட்டியில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் அட்லெடிகோ மெட்ரிட் வெற்றி கொண்டது. போட்டியின் முதல் பாதியில் அதிரடியாக விளையாடிய அட்லெடிகோ மெட்ரிட் 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

போட்டியின் 17ஆவது மற்றும் 25ஆவது நிமிடங்களில் முறையே சவுல் நிகஸ், பெர்னாண்டோ டோரஸ் ஆகியோர் கோல் அடித்திருந்தனர். எனினும், இரண்டாம் பாதி நேரத்தின் ஆரம்பத்தில் (48ஆவது நிமிடம்) கரீம் பெல்லராபி, பயர் லெவிர்குசன் அணிக்கான முதல் கோலை அடித்தார்.

அதனைத் தொடர்ந்து 10 நிமிடங்களில் கெவின் கேமிரியோ பெனால்டி வாய்ப்பின்போது கோல் அடித்து அட்லெடிகோ மெட்ரிட் அணியை இரண்டு கோள்களால் முன்னிலைப்படுத்தினார்.

ஆட்டத்தின் 68ஆவது நிமிடம் ஸ்டேவன் சாவிக் மூலம் ஒரு ஒவ்ன் கோல் செல்ல அது, பயர் அணியின் கோல் எண்ணிக்கையை அதிகரித்தது. எனினும், போட்டியின் 86ஆவது நிமிடம் பெர்னாண்டோ டோரஸ் கோல் ஒன்றை அடித்து அட்லெடிகோ மெட்ரிட் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாம் கட்டப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி மட்ரிட் எஸ்டாடியோ விசெண்டி கால்டெரான் கால்பந்து அரங்கில் நடைபெறவுள்ளது.