பெண்களிற்கான டிவிஷன்-I வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டித்தொடரின் பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற  போட்டியொன்றில் இராணுவ விளையாட்டு கழகத்தை எதிர்த்து பொலிஸ் விளையாட்டு கழகம் மோதியது. இப்போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை விட மூன்று கோல்களால் இராணுவ விளையாட்டுக் கழகம் முன்னிலை பெற்றிருந்த போதும், இரண்டாம் பாதி ஆட்ட வேளையின் போதான மழை காரணமாக போட்டி பிற்போடப்பட்டுள்ளது.

போட்டியில் மோதிய இரு அணிகளும் ஒன்றை ஒன்று வெல்லத்தக்க வல்லமை படைத்தவை என்ற நிலையிலேயே களமிறங்கின.

போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் இரு அணிகளும் பந்துப்பரிமாற்றங்களை மிகவும் லாவகமாக மேற்கொண்டு தமது அணியை முன்னிலைப்படுத்த முற்பட்டன. எவ்வாறாயினும், போட்டியின் 10ஆவது நிமிடத்தில் இராணுவ அணியின் k.லியனகே, S.குணவர்தன, C.கருணாரத்ன ஆகியோர் மத்திய களத்தை ஆக்கிரமிக்க அந்நிலை மாறியது. அவ்வேளை வலது பக்கத்திலிருந்து மிகவும் துல்லியமாக கோல்பரப்பை நோக்கி S.குணவர்தன பந்தை நகர்த்த அதனை இலகுவாக கோலாக்கினார் K.லியனகே.

பொலிஸ் அணியின் பின்கள வீராங்கனைகளான ராதிகா சஜீவனி, ஷானிகா தில்றுக்ஷி ஆகியோரால் இராணுவ அணியின் முன்கள வீராங்கனைகளது ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தந்திரமாகச் செயற்பட்ட பொலிஸ் அணியின் லக்ஷானி அனுருத்திகா இராணுவ அணியின் பின்கள வீராங்கனைகளை ஏமாற்றிப் பந்தைக் கடத்திச் சென்ற போதிலிலும், சகவீராங்கனைகள் அவரது வேகத்திற்கு ஈடுகொடுத்து விவேகமாகச் செயற்படாததால் அம்முயற்சியும் பலனளிக்கவில்லை.

தொடர்ந்தும் விவேகமாகச் செயற்பட்ட இராணுவ அணி வீராங்கனை குணவர்தன சரியான உயரத்தில் நேர்த்தியாக உயர்த்தி கோல் கம்பத்தை நோக்கி செலுத்த, அப்பந்தை இலகுவாக தலையால் முட்டி கோலாக்கினார் N.மதுஷானி.

இராணுவ விளையாட்டுக் கழகத்தின் முழுமையான ஆதிக்கத்தில், அவர்கள் பெற்ற இரு கோல்களுடன் நிறைவிற்கு வந்தது முதலாம் பாதி.

முதல் பாதி : பொலிஸ் விளையாட்டு கழகம் 0 – 2 இராணுவ விளையாட்டு கழகம்

இரண்டாவது பாதி ஆட்டத்திற்காக போட்டி ஆரம்பமான வேளையில் சாதுவான மழைத்தூறல் இருந்தபோதும் போட்டியைப்பாதிக்கும் அளவிற்கு அதன் தாக்கம் இருக்கவில்லை.

தொடர்ந்த போட்டியில் இராணுவ அணிக்காக முதற்பாதியில் அசத்திய, அதே மூன்று முன்கள வீராங்கனைகளும் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டி தமக்கான வாய்ப்புக்களை உருவாக்கத் தொடங்கினர்.

இராணுவ அணிக்குக் கிடைத்த கோணர் உதையை லாவகமாகப் பயன்படுத்தி குணவர்தன கோல் கம்பத்தை நோக்கி கோல்பெற சாதகமான உயரத்தில் உதைய, அதனை பொலிஸ் அணியின் சத்துரிக்கா மதுஷானி தடுக்க முற்பட்டவேளை அது ஓன் கோலாக மாற, இராணுவ அணிக்கு மூன்றாவது கோல் கிடைத்தது.

மழை அதிகரித்ததனால் 63 நிமிட ஆட்டம் நிறைவடைந்திருந்த வேளையில் போட்டியைப் பிற்போடுவதற்கு மத்தியஸ்தர்கள் தீர்மானித்தனர்.

இரண்டாவது பாதி (நிறுத்தப்பட்ட வேளை) : பொலிஸ் விளையாட்டு கழகம் 0 – 3 இராணுவ விளையாட்டு கழகம்

கோல் போட்டவர்கள்

இராணுவ விளையாட்டு கழகம் – K.லியனகே 14′, N.மதுஷானி 47′, சத்துரிகா மதுஷானி (ஓன் கோல்) 50’

ThePapare.com போட்டியின் இறுதிமுடிவு குறித்து போட்டி ஆணையாளரிடம் வினவுகையில்;

போட்டியானது தற்போதைக்குப் பிற்போடப்பட்டுள்ளது அதேவேளை பொருத்தமான ஒரு நாளில் எஞ்சியிருக்கும் 23 நிமிட போட்டி நடாத்தப்படும்” என்றார்.