மகளிர் உலகக் கிண்ண தகுதி காண் போட்டிகளின் அடுத்த கட்டமான, சுப்பர் 6 போட்டிகள் இன்று ஆரம்பமாகின. இன்று நடைபெற்று முடிந்த சுப்பர் 6 போட்டியொன்றில் இலங்கை மகளிர் அணி, 5 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி, வெற்றிகரமாக இத்தொடரின் அடுத்த கட்டத்தினை ஆரம்பித்துள்ளது.  

தொடர் வெற்றிகளுடன் மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்த இலங்கை

NCC மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட இலங்கை மகளிர் அணித் தலைவி இனோக்கா ரணவீர முதலில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கினார்.

இதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணியில், முக்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான ஆயெஷா ஷபர், சிரிபாலி வீரக்கொடியின் துல்லியமான வேகப்பந்து வீச்சில் சிக்கி ஒரு ஓட்டத்துடன் போட்டியின் ஆரம்பத்திலேயே போல்ட் செய்யப்பட்டார்.

எனினும், மோசமான ஆரம்பத்தினால் தடுமாறாத பாகிஸ்தான் மங்கைகளான, நஹிதா கான் மற்றும் ஜவேரியா கான் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக 119 ஓட்டங்களினைப் பகிர்ந்து அணிக்கு வலுச் சேர்த்தனர்.

இரு வீராங்கனைகளும் அரைச் சதங்கள் கடந்த நிலையில் ஆட்டமிழக்க, புதிதாக வந்த பாகிஸ்தான் மகளிர் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீராங்கனைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக இலங்கை மகளிர் அணி தமது பந்து வீச்சினை தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டது.

இதனால் இலங்கை தரப்பு ஏனைய துடுப்பாட்ட வீராங்கனைகளில் எவரையேனும் 20 ஓட்டங்களைக் கூட தாண்ட விடவில்லை. எனவே, பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்த நஹிதா கான் பாகிஸ்தானுக்காக 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 64 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஜவேரியா கான் 63 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இலங்கை சார்பாக பந்து வீச்சில், பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் கொடுத்த அணித் தலைவி இனோக்கா ரணவீர மற்றும் சாமரி பொல்கம்பொல ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை தமதாக்கிக் கொண்டனர்.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 213 ஓட்டங்களைப் பெறுவதற்கு மைதானம் வந்த இலங்கை மகளிர் அணி, தமது முதல் விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களினைப் பகிர்ந்து கொண்டது. அணியின் முதல் விக்கெட்டாக சாமரி அத்தபத்து 35 ஓட்டங்களுடன் இளம் வீராங்கனை நஷ்ரா சந்துவின் சுழலிற்கு இரையானர்.

இவரின் விக்கெட்டினை தொடர்ந்து குறுகிய நேரத்தில் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான நிப்புனி ஹன்சிக்காவும் ஆட்டமிழக்க, போட்டி மெதுவாக பாகிஸ்தான் மகளிர் அணியின் பக்கம் சாயத் தொடங்கியது.

எனினும், மத்திய வரிசை வீராங்கனைகளான பிரசாதினி வீரக்கொடி மற்றும் எஷானி லொக்குசூரியகே ஆகியோரின் நிதானமான ஆட்டத்தின் காரணமாக, 47.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை மகளிர் அணி 216 ஓட்டங்களினைப் பெற்று வெற்றியிலக்கினை அடைந்தது.

வெற்றியிலக்கினை தொடுவதற்கான பவுண்டரியை விளாசிய எஷானி, 75 பந்துகளிற்கு 8 பவுண்டரிகள் உள்ளடங்களாக ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு, தனது சிறப்பான ஒரு நாள் துடுப்பாட்டத்தினை பதிவு செய்து கொண்டார்.

இலங்கை அணியின் வெற்றிக்கு பங்காற்றிய மற்றைய வீராங்கனையான பிரசாதினி வீரக்கொடி 45 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில், நஷ்ரா சந்து மற்றும் குலாம் படிமா ஆகியோர் இரண்டு விக்கெட்டுக்களை தம்மிடையே பங்கிட்டுக்கொண்டனர்.

தனது துடுப்பாட்டம் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியினைப் பெற உதவிய எஷானி லொக்குசூரியகே போட்டியின் சிறப்பாட்ட நாயகியாக தெரிவானர்

போட்டியின் சுருக்கம்  

பாகிஸ்தான் மகளிர் அணி : 212/7 (50) – நஹிதா கான் 64(92), ஜவேரியா கான் 63(105), இனோக்கா ரணவீர 33/2 (8), சாமரி பொல்கம்பொல 34/2

இலங்கை மகளிர் அணி : 216/5 (47.4) – எஷானி லொக்குசூரியகே 65(75)*, பிரசாதினி வீரக்கொடி 45(71), நிப்புனி ஹன்சிக்கா 37(61), சாமரி அத்தபத்து 35(43), நஷ்ரா சந்து 37/2(10),  குலாம் படிமா 28/2(6)

போட்டி முடிவு இலங்கை மகளிர் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி