பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான இறுதி வார போட்டிகள் நேற்று ஆரம்பமாகிய நிலையில், கொழும்பு கிரிக்கெட் கழகத்தை வீழ்த்திய SSC அணி சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்புக்களை அதிகரித்துக் கொண்டது.

பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக அமைந்த ஆடுகளத்தில் இப்போட்டி இடம்பெற்றதுடன், வெறும் இரண்டே நாட்களில் போட்டி நிறைவடைந்தது. இதேவேளை சிலாபம் மேரியன்ஸ் மற்றும் ராகம அணிகளுக்கிடையிலான மற்றுமொரு தீர்க்கமான போட்டி இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

SSC கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

நேற்றைய தினம் முதலில் துடுப்பெடுத்தாடிய SSC அணியானது கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அபாரமாக பந்துவீசிய இளம் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க 15 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் SSC அணியும் சிறப்பாக பந்துவீசி முதல் நாள் நிறைவில் 89 ஓட்டங்களுக்கு கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். இன்றும் தொடர்ந்து பந்துவீச்சில் அசத்திய SSC கழகம் எதிரணியை 101 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.

சுழற்பந்துவீச்சாளர் சச்சித்ர சேனநாயக்க அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், தனது கன்னி முதல்தர போட்டியில் விளையாடிய டில்ஷான் அபேசிங்க 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன்படி SSC அணி முதல் இன்னிங்சில் 46 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டது.

போட்டியில் தொடர்ந்தும் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதுடன், SSC அணி தனது இரண்டாவது இன்னிங்சிற்காக 155 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது. முதல் இன்னிங்சை போன்றே நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியை வழிநடத்திய அணித்தலைவர் கௌஷால் சில்வா 43 ஓட்டங்களை குவித்தார்.

கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பில் அஷான் ப்ரியஞ்சன் 4 விக்கெட்டுக்களையும் வனிது ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர். அதன்படி கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு 202  என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அசத்தலாக பந்துவீசி எதிரணியை துவம்சம் செய்த சச்சித்ர சேனநாயக்க மற்றும் ஜெப்ரி வெண்டர்சே 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த, கொழும்பு கிரிக்கெட் கழகம் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இவ்வெற்றியுடன் SSC கழகம் புள்ளி அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறியதுடன், சம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புக்களையும் அதிகரித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 147 (47) – கௌஷால் சில்வா 47, கவிந்து குலசேகர 43*, வனிது ஹசரங்க 5/15

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 101 (25.2) – ரொஷான் அனுருத்த 27, சச்சித்ர சேனநாயக்க 4/15, டில்ஷான் அபேசிங்க 3/44

SSC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 155 (40.4) – கௌஷால் சில்வா 43, அஷான் ப்ரியஞ்சன் 4/14, வனிது ஹசரங்க 3/49

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 117 (33.4) – லஹிரு மதுஷங்க 35*, சச்சித்ர சேனநாயக்க 4/30, ஜெப்ரி வெண்டர்சே 4/46

முடிவு: SSC கழகம் 84 ஓட்டங்களினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • SSC கழகம் – 16.51
  • கொழும்பு கிரிக்கெட் கழகம் – 4.09

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் ராகம கிரிக்கெட் கழகம்

SSC அணி வெற்றியை சுவீகரித்ததன் காரணமாக, முதலிடத்தில் காணப்பட்ட சிலாபம் மேரியன்ஸ் அணியானது சம்பியன் பட்டத்தை வெற்றி கொள்ள இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முதல் தினம் மோசமான துடுப்பாட்டம் காரணமாக சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் 168 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு களமிறங்கிய ராகம கிரிக்கெட் கழகம் நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 86 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவ்வணி, சமிந்த பெர்னாண்டோ பெற்றுக் கொடுத்த 93 ஓட்டங்களின் உதவியுடன் 276 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. மேலும் கோஷான் தனுஷ்க அரைச்சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட அரோஷ் ஜனோத 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

108 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் அணியானது இம்முறை சற்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணித்தலைவர் மஹேல உடவத்த ஆட்டமிழக்காது 42 ஓட்டங்கள் குவிக்க, அவ்வணி இன்று ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 168 (41.4) – மஹேல உடவத்த 41, நிலங்க பிரேமரத்ன 5/41

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 276 (85) – சமிந்த பெர்னாண்டோ 93, கோஷான் தனுஷ்க 50, அரோஷ் ஜனோத 5/45, ஷெஹான் ஜயசூரிய 3/50

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 116/2 (37) – மஹேல உடவத்த 42*


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

சூப்பர் 8 புள்ளி அட்டவணையில் இறுதி இடத்தை தீர்மானிக்கும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 218 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அடுத்து துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் அணியினர் நேற்று 6 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

இன்று காலை அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்த கோல்ட்ஸ் பந்துவீச்சாளர்கள் எதிரணியை 168 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சித்தர கிம்ஹான் அதிகபட்சமாக 43 ஓட்டங்கள் குவித்தார். பந்துவீச்சில் அசத்திய இஷான் ஜயரத்ன 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

50 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சார்பில் மீண்டும் சதீர சமரவிக்ரம சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக் கொடுத்தார். அவர் 93 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்த போதிலும், தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.

இதன்படி அவ்வணியானது இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது. அஞ்சலோ ஜயசிங்க 76 ஓட்டங்களுடனும் விஷாத் ரந்திக 60 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218 (52.2) – சதீர சமரவிக்ரம 52, அகில தனஞ்சய 52, பிரியமல் பெரேரா 47, துலாஞ்சன மெண்டிஸ் 5/71, ரமித் ரம்புக்வெல்ல 5/75

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 168 (45.2) – சித்தர கிம்ஹான் 43, இஷான் ஜயரத்ன 5/40

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 248/3 (77) – சதீர சமரவிக்ரம 93, அஞ்சலோ ஜயசிங்க 76*, விஷாத் ரந்திக 60*, பிரமோத் மதுஷான் 2/56


NCC கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

முதல் நாள் ஆட்டத்தின் போது NCC அணி 268 ஓட்டங்களை குவித்ததுடன், அடுத்து துடுப்பெடுத்தாடிய இராணுவ விளையாட்டுக் கழகம் விக்கெட் இழப்பேதுமின்றி 23 ஓட்டங்களை பெற்றிருந்தது. தொடக்க வீரரான லக்ஷித மதுஷான் அரைச்சதம் ஒன்றினை பெற்றுக் கொண்ட போதிலும், பந்துவீச்சில் பிரகாசித்த சச்சிந்த பீரிஸ் மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த, இராணுவ அணி 227 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

41 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த NCC கழகம், இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றிருந்தது. அணித்தலைவர் அஞ்சலோ பெரேரா ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

சர்வதேச போட்டிகளில் சோபிக்கத் தவறியதன் காரணமாக கழக மட்டத்திற்கு திரும்பிய தினேஷ் சந்திமால் 41 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் துஷான் விமுக்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 268 (68.2) – அஞ்சலோ பெரேரா 53, திமிர ஜயசிங்க 53, சதுரங்க டி சில்வா 42, யசோத மெண்டிஸ் 4/65, துஷான் விமுக்தி 3/64

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 227 (70.3) – லக்ஷித மதுஷான் 54, சச்சிந்த பீரிஸ் 4/43, சதுரங்க டி சில்வா 4/63

NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 139/4 (33) – அஞ்சலோ பெரேரா 55*, தினேஷ் சந்திமால் 41, துஷான் விமுக்தி 2/39

நாளை போட்டிகளின் மூன்றாவது நாளாகும்.