தென்னாபிரிக்க T-20 குழாத்தில் இணைக்கப்பட்டுள்ள ஏபி.டி வில்லியர்ஸ்

2591
AB De Villiers
during the 2015 ICC Cricket World Cup match between South Africa and Ireland at Manuka Oval on March 3, 2015 in Canberra, Australia.

உபாதையில் இருந்து மீண்டு வந்து உள்ளூர் போட்டியொன்றில் அபார சதம் அடித்திருக்கும் தென்னாபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஏபி.டி வில்லியர்ஸ், வரும் புதன்கிழமை (25) கேப்டவுன் நிவ்லன்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறும் இலங்கை அணியுடனான மூன்றாவது T-20 போட்டிக்கான தென்னாபிரிக்க குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

32 வயதாகும் டி வில்லியர்ஸ், உபாதைக்கு முன்னதாக கடந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் கிரிக்கெட் போட்டியொன்றில் இறுதியாக விளையாடி இருந்தார். தென்னாபிரிக்க அணியின் ஒரு நாள் குழாத்தின் தலைவரான அவர், அதன் பின்னர் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் எதிலும் பங்குபற்றவில்லை.

தற்பொழுது உபாதையில் இருந்து மீண்டிருக்கும் அவர், நேற்று பெனோனி நகரில் நடைபெற்ற தென்னாபிரிக்க உள்ளூர் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் (Provincial One Day Challenge) கிழக்கு பிராந்தியத்திற்கு எதிரான போட்டியொன்றில், வடக்கு பிராந்திய அணி சார்பாக விளையாடி, வெறும் 103 பந்துகளில் 134 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

எனினும், நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அவர், இவ்வருடம் முழுவதும் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இதனால் இலங்கையுடனான தொடரினை அடுத்து இடம்பெற இருக்கும் நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணி அவர் இல்லாமலேயே விளையாடும்.

T-20 குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ள வலது கை துடுப்பாட்ட வீரரான டி வில்லியர்ஸ், இலங்கை அணியுடனான இரண்டாவது T-20 போட்டியில் தென்னாபிரிக்கா தோல்வியுற்றுள்ள நிலையில் அடுத்து இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியினை அவரது அணிக்கு சாதமாகமாக்கி, தென்னாபிரிக்கா T-20   தொடரை கைப்பற்றும் வகையில் செயற்படுவார் என நம்பப்படுகின்றது.

எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாக இருக்கும் இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் முதல் போட்டிக்கு ஆயத்தப்படுத்தும் போட்டிகளில் ஒன்றாக டி வில்லியர்ஸ் கடைசி T-20 போட்டியினை பயன்படுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.