நடைபெற்று வரும் டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றுத் தொடரின் சுப்பர் 8 சுற்றின் நான்காவது வாரப் போட்டியில், விமானப்படை அணியை வீழ்த்தியதன் மூலம், இச்சுற்றின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது கடற்படை விளையாட்டுக் கழக அணி.

இத்தொடரின் சுப்பர் 8 சுற்றின் முதல் 3 வாரப் போட்டிகள் நிறைவடைந்திருந்த நிலையில், தரப்படுத்தலில் விமானப்படை அணி 2 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும், கடற்படை அணி எந்தவித புள்ளிகளும் இன்றி இறுதி இடத்திலும் இருந்தன.

இந்நிலையில், ஏற்கனவே முன்னைய போட்டிகள் இடம்பெற்ற களனிய விளையாட்டு மைதானத்தில் இன்றைய போட்டியும் இடம்பெற்றது. சுப்பர் 8 சுற்றின் முதல் வெற்றியைப் பெறுவதற்காகவே இரு அணிகளும் இன்றைய போட்டியில் களமிறங்கின.

இரண்டாவது வெற்றியின் மூலம் தமக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது புளு ஸ்டார்

போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே, கடற்படை அணியின் முன்கள வீரர்களுக்கு கிடைக்கப்பெற்ற கோலுக்கான சிறந்த வாய்ப்பு, இறுதி நேரத்தில் கோல் காப்பாளர் ருவன் அருனசிறியினால் தடுக்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் முதல் 10 நிமிடங்களும் கடற்படை அணியினரின் ஆதிக்கத்திலேயே இருந்தது. எனினும் இரு தரப்பினராலும் பல தவறுகள் விடப்பட்டன.

12 நமிடங்கள் கடந்த நிலையில் பெனால்டி எல்லையினுள் கவிந்து இஷானுக்கு கிடைத்த பந்தின் மூலம் முதல் கோலைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு அவருக்கு இருந்தது. எனினும் அவர் உதைந்த பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

மீண்டும், 23ஆவது நிமிடத்தில் நிபுன பன்டாரவிடம் இருந்து வழங்கப்பட்ட பந்தைப் பெற்ற கவிந்து இஷான், சிறந்த முறையில் கோலுக்கு அருகில் சென்று, ஒரு திசையில் இருந்து கோலுக்குள் உதைந்த பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது. மற்றொரு வீரர் அந்தப் பந்தை தலையால் முட்டி கோலாக்க முயற்சித்தும், அது பலனைக் கொடுக்கவில்லை.

அதே போன்று, 28ஆவது நிமிடத்திலும் இஷானுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பை அவர் உரிய முறையில் நிறைவு செய்யத் தவறினார்.  

பின்னர் 38 நிமிடங்கள் கடந்த நிலையில், கடற்படை வீரர் ஷதுரங்க சன்ஞீவ பந்தை பெனால்டி எல்லையினுள் கொண்டுசென்றபோது, ருவன் அருனசிறி முறையற்ற விதத்தில் அதைத் தடுக்க முற்பட்டமையினால் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதோடு, எதிரணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இதன்போது தம்மிக்க ரத்னாயக்க பெனால்டி உதையைப் பெற்று, அதனை சிறந்த முறையில் கோலாக்கினார்.

அதனைத் தொடர்ந்து முதல் பாதியின் இறுதி வாய்ப்பாக 45 நிமிடங்கள் கடந்த நிலையில் விமானப்படை அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும் அந்த உதையை கடற்படையின் பின்கள தடுப்பாளர் சிறப்பாக திசை திருப்பினார்.

முதல் பாதி: கடற்படை விளையாட்டுக் கழகம் 01 – 00 விமானப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியை மிகவும் வேகமாக ஆரம்பித்த விமானப்படை அணியினர், முதல் நிமிடத்திலேயே சிறந்த முயற்சி ஒன்றை மேற்கொண்டனர்.

தொடர்ந்து 46ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையில் வைத்து, கடற்படை வீரர் ஷலன சமீரவின் கைகளில் பந்து பட்டமையினால் எதிரணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று வழங்கப்பட்டது. இதன்போது கவிந்து இஷான் உதைந்த பந்தை கோல் காப்பாளர் உதயங்க ரெஜினோல் பாய்ந்து தடுத்து அணியை தொடர்ந்தும் முன்னிலையில் வைக்க உதவினார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும் தமக்கிடையிலான பந்துப் பரிமாற்றங்களின் மூலம் சம அளவில் நிண்ட நேரத்திற்கு விளையாடியது. எனினும் இரு தரப்பினராலும் சொல்லும் அளவிலான கோல் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

63ஆவது நிமிடத்தில் கவிந்து இஷான் நீண்ட தூரத்தில் இருந்து கோலை நோக்கி உதைந்த போது, பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது. நீண்ட நேர இடைவெளியின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக அது இருந்தது.

சொலிட் அணியை வீழ்த்தி வெற்றியை சுவைத்தது ரினௌன் : தொடரும் சொலிடின் சோகம்

அதற்கு இரண்டு நிமிடங்களின் பின்னர் விமானப்படை அணியினரும் தமது பங்கிற்கு மேற்கொண்ட கோல் முயற்சியின்போது, இறுதி நேரத்தில் உதயங்கவின் தடுப்பினால் பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் கோலித லன்கேஷரவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

85ஆவது நிமிடத்தில் விமானப்படை அணிக்கு பெனால்டி எல்லைக்கு சற்று தொலைவில் இருந்து ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. அதன்போது உதைந்த பந்து எதிரணியின் பின்கள வீரர்கள் மூலம் கோல் பகுதியில் இருந்து திசை திருப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 88ஆவது நிமிடம் கடற்படை வீரர் ஷலன சமீரவுக்கு போட்டியின் இரண்டாவது மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட, அது அவருக்கான சிவப்பு அட்டையாக மாற்றம் பெற்றது. எனவே, அவர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர் 10 வீரர்களுடன் விளையாடும் கடற்படை அணிக்கு எதிராக முதல் கோலைப் பெறுவதற்கு விமானப்படை இறுதி நிமிடங்களை முழுமையாகப் பயன்படுத்தியது. எனினும் அவர்களது அனைத்து முயற்சிகளும் தோல்விலேயே முடிந்தன.

முழு நேரம்: கடற்படை விளையாட்டுக் கழகம் 01 – 00 விமானப்படை விளையாட்டுக் கழகம்

போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்த கடற்படை அணியின் பயிற்றுவிப்பாளர் தம்மிக அதுகொரல, ”இது எமக்கு முக்கியமான, அதேபோன்று அவசியமான ஒரு வெற்றியாகும். இன்று நாம் குறைந்த அளவிலான தவறுகளையே விட்டோம் அல்லது தவறுகளை விடவில்லை என்றும் கூறலாம். சில வீரர்கள் இன்றி சிறந்த ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தோம். இது எமது அடுத்த போட்டிகளுக்கும் சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என்றார்.

கோல் பெற்றவர்கள்

கடற்படை விளையாட்டுக் கழகம் – தம்மிக்க ரத்னாயக்க 41’

மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டவர்கள்

கடற்படை விளையாட்டுக் கழகம் – தம்மிக்க ரத்னாயக்க 24’, ஷலன சமீர 47’ & 88’

விமானப்படை விளையாட்டுக் கழகம் – திமுது லக்மால் 29’, ருவன் அருனசிறி 39’, கோலித லன்கேஷர 70’

சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டவர்கள்

கடற்படை விளையாட்டுக் கழகம் – ஷலன சமீர 88’

தொடரின் புள்ளிப் பட்டியல் மற்றும் அட்டவணைகள்