NCC அணிக்கு அதிர்ச்சியளித்தது ராகம அணி: தமிழ் யூனியனை வீழ்த்தியது கொழும்பு கிரிக்கெட் கழகம்

215
Premier League - Tier A Roundup

கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘A’ மட்டத்திற்கான இரண்டு சுப்பர் 8 போட்டிகள் இன்று நிறைவுபெற்றன. இப்போட்டிகளில் ராகம கிரிக்கெட் கழகம் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழக அணிகள் வெற்றிகளை சுவீகரித்தன.

NCC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராகம அணி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

சதுரங்க டி சில்வா (83) மற்றும் அஞ்சலோ பெரேரா (59) ஆகியோரின் சிறப்பான பங்களிப்புக்கள் அணியை வலுப்படுத்திய போதிலும், சதுர பீரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்த NCC கழகம் 265 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து களமிறங்கிய ராகம கிரிக்கெட் கழகம் சார்பில் தனித்து போராடிய சமீர டி சொய்சா 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதிலும் அவ்வணி 127 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் தொடர்ந்து அசத்தி வரும் சதுரங்க டி சில்வா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அணித்தலைவர் பர்வீஸ் மஹ்ரூப் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

138 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட NCC அணி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்தது. தொடர்ந்து துடுப்பாட்டத்திலும் தன் கைவரிசையை காட்டிய சதுரங்க டி சில்வா 78 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், ஜெஹான் முபாரக் 49 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்படி அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் ராகம அணியின் திலக்ஷ சுமனசிறி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 352 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராகம கிரிக்கெட் கழகம், முதல் இன்னிங்சை போல் அல்லாமல் இம்முறை பொறுப்பான, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் ஜனித் லியனகே 87 ஓட்டங்கள் குவித்து சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்ததுடன், அதனை தொடர்ந்து லஹிரு மிலந்த 59 ஓட்டங்களையும், சமீர டி சொய்சா 56 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு நம்பிக்கையளித்தனர்.

எவ்வாறாயினும் திறமையாக பந்து வீசிய சதுரங்க டி சில்வா மற்றும் தரிந்து கௌஷால் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்த, ராகம அணி ஒரு கட்டத்தில் 304 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

எனினும் இறுதி வீரர் நிலங்க பிரேமரத்னவுடன் இணைந்து சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடி 48 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட சதுர பீரிஸ், தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சதுர பீரிஸ் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை குவித்தார்.

இதன்படி விறுவிறுப்பான இந்தப் போட்டியில் ராகம கிரிக்கெட் கழகம் 1 விக்கெட்டினால் வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 265 (62) – சதுரங்க டி சில்வா 83, அஞ்சலோ பெரேரா 59, சதுர பீரிஸ் 4/60

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 127 (47.3) – சமீர டி சொய்சா 57, சதுரங்க டி சில்வா 4/21, பர்வீஸ் மஹ்ரூப் 3/28

NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 213 (53.5) – சதுரங்க டி சில்வா 78, ஜெஹான் முபாரக் 49, திலக்ஷ சுமனசிறி 3/28

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 352/9 (136.3) – ஜனித் லியனகே 87, லஹிரு மிலந்த 59, சமீர டி சொய்சா 56, சதுர பீரிஸ் 51*, சதுரங்க டி சில்வா 3/84, தரிந்து கௌஷால் 3/103

முடிவு: ராகம கிரிக்கெட் கழகம் 1 விக்கெட்டினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

ராகம கிரிக்கெட் கழகம் – 17.4

NCC கழகம்  – 5.24


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கழக மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கழகத்தின் அணித்தலைவர் கித்ருவன் விதானகே 130 ஓட்டங்களை குவித்தார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய மனோஜ் சரத்சந்திர 63 ஓட்டங்களையும் சாமிக கருணாரத்ன 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அதன்படி தமிழ் யூனியன் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 87.3 ஓவர்களில் 377 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பாக பந்து வீச்சில் லஹிரு மதுஷங்க 4 விக்கெட்டுகளையும் லஹிரு கமகே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பில் கடந்த போட்டிகளை போன்றே துடுப்பாட்டத்தில் அசத்திய ரொன் சந்திரகுப்த 157 ஓட்டங்களையும், லஹிரு மதுஷங்க 164 ஓட்டங்களையும் விளாசினர்.

அத்துடன் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய கீழ்வரிசை வீரர் ஷாலுக சில்வா 63 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க, கொழும்பு கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 497 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. தமிழ் யூனியன் அணி சார்பில் சாமிக கருணாரத்ன 4 விக்கெட்டுக்களையும் லஹிரு சமரகோன் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

120 ஓட்டங்கள் பின்னிலையில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. அபாரமாக பந்து வீசி அவ்வணியை துவம்சம் செய்த லஹிரு கமகே 51 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன் காரணமாக தமிழ் யூனியன் அணி 149 ஓட்டங்களுக்கே சுருண்டது.

முதல் இன்னிங்சினை போன்றே திறமையாக பந்து வீசிய லஹிரு மதுஷங்க 3 விக்கெட்டுகளை சாய்த்தார். துடுப்பாட்டத்தில் தமிழ் யூனியன் அணி சார்பாக ரமித் ரம்புக்வெல்ல அதிகபட்சமாக 33 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி 30 ஓட்டங்கள் sஎன்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழகம் 2.3 ஓவர்களில் விக்கெட் இழப்பேதுமின்றி இலக்கைக் கடந்து வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 377 (87.3) – கித்ருவன் விதானகே 130, மனோஜ் சரத்சந்திர 63, சாமிக கருணாரத்ன 50, ஜீவன் மெண்டிஸ் 40, லஹிரு மதுஷங்க 4/77, லஹிரு கமகே 3/83

கொழும்பு கிரிக்கெட் கழகம்  (முதல் இன்னிங்ஸ்) – 497 (112.1) – ரொன் சந்திரகுப்த 157, லஹிரு மதுஷங்க 164, ஷாலுக சில்வா 63, சாமிக கருணாரத்ன 4/128, லஹிரு சமரகோன் 3/102

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 149 (46.1) – ரமித் ரம்புக்வெல்ல 33, லஹிரு கமகே 5/51, லஹிரு மதுஷங்க 3/68

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 30/0 (2.3) – வனிது ஹசரங்க 22*

முடிவு: கொழும்பு கிரிக்கெட் கழகம் 10 விக்கெட்டுகளினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 17.15

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 4.13