சகல துறையிலும் அசத்திய சதுரங்க டி சில்வா: வெற்றிப்பாதையில் NCC அணி

359
Tamil - Club Cricket - Tier A - Day 2

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டத்திற்கான இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றன.

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

நேற்றைய தினம் முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 377 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இன்று பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழகம் ரொன் சந்திரகுப்த மற்றும் லஹிரு மதுஷங்கவின் அபார சதங்களின் உதவியுடன் 86 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 406 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

கடந்த போட்டிகளை போன்றே துடுப்பாட்டத்தில் அசத்திய ரொன் சந்திரகுப்த 157 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். லஹிரு மதுஷங்க ஆட்டமிழக்காது 151 ஓட்டங்களுடன் களத்திலுள்ளார். பந்துவீச்சில் தமிழ் யூனியன் அணியின் இளம் வீரர் சாமிக கருணாரத்ன 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 377 (87.3) – கித்ருவன் விதானகே 130, மனோஜ் சரத்சந்திர 63, சாமிக கருணாரத்ன 50, ஜீவன் மெண்டிஸ் 40, லஹிரு மதுஷங்க 4/77, லஹிரு கமகே 3/83

கொழும்பு கிரிக்கெட் கழகம்  (முதல் இன்னிங்ஸ்) – 406/8 (86) – ரொன் சந்திரகுப்த 157, லஹிரு மதுஷங்க 151*, லசித் அபேரத்ன 30, சாமிக கருணாரத்ன 4/98


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

முதல் நாள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்றிருந்த SSC கழகம் இன்று தொடர்ந்து முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 293 ஓட்டங்களை குவித்தது.

அணித்தலைவர் திமுத் கருணாரத்ன நேற்று சதம் கடந்த நிலையில் 125 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தசுன் ஷாணக 59 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சார்பாக பந்துவீச்சில் தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுகளையும் இஷான் ஜயரத்ன 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக் கொண்டனர்.

அடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிரணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 100 ஒட்டங்களுக்கே சுருண்டது. அவ்வணியின் தொடக்க வீரர் சதீர சமரவிக்ரம அதிகபட்சமாக 22 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட சச்சித்ர சேனநாயக்க 4 விக்கெட்டுகளையும் கசுன் மதுஷங்க மற்றும் விமுக்தி பெரேரா தலா மூன்று விக்கெட்டுகள் வீதமும் பதம்பார்த்தனர்.

இதன்படி 193 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த SSC கழகம், இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 7 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றிருந்தது. கவிந்து குலசேகர ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றுள்ளார். கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சார்பாக பந்துவீச்சில் பிரகாசித்த நிசல தாரக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 293 (85) – திமுத் கருணாரத்ன 125, தசுன் ஷானக 59, கவிந்து குலசேகர 44*, தில்ருவன் பெரேரா 4/75, இஷான் ஜயரத்ன 3/64

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 100 (31) – சதீர சமரவிக்ரம 22, சச்சித்ர சேனநாயக்க 4/31, விமுக்தி பெரேரா 3/20, கசுன் மதுஷங்க 3/49

SSC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 124/7 (35.3) – கவிந்து குலசேகர 33*, நிசல தாரக 3/24


NCC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

NCC கழகம் பெற்றுக் கொண்ட 265 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக களமிறங்கிய ராகம கிரிக்கெட் கழகம் நேற்றைய தினம் 43 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

தனித்து போராடிய சமீர டி சொய்சா 57 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட போதிலும் அவ்வணி 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் தொடர்ந்து அசத்தி வரும் சதுரங்க டி சில்வா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அணித்தலைவர் பர்வீஸ் மஹ்ரூப் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

138 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட NCC அணி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்தது. துடுப்பாட்டத்திலும் தன் கைவரிசையை காட்டிய சதுரங்க டி சில்வா 78 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், ஜெஹான் முபாரக் 49 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்படி NCC அணி 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ராகம அணியின் திலக்ஷ சுமனசிறி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 265 (62) – சதுரங்க டி சில்வா 83, எஞ்சலோ பெரேரா 59, சதுர பீரிஸ் 4/60

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 127 (47.3) – சமீர டி சொய்சா 57, சதுரங்க டி சில்வா 4/21, பர்வீஸ் மஹ்ரூப் 3/28

NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 209/9 (53) – சதுரங்க டி சில்வா 78, ஜெகன் முபாரக் 49, திலக்ஷ சுமனசிறி 3/28


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம்

நேற்றைய தினம் 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இராணுவ விளையாட்டுக் கழகம், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 126 ஓட்டங்கள் தேவையான நிலையில் இன்று ஆட்டத்தை தொடர்ந்தது.

எனினும் சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேரசிங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்த, அவ்வணி 183 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்து 7 ஓட்டங்களினால் பின்னிலை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இராணுவ அணியின் டில்ஷான் டி சொய்சா அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

எவ்வாறாயினும் திறமையான பந்துவீச்சின் மூலம் தமது அணிக்கு நம்பிக்கையளித்த நளின் பிரியதர்ஷன (5/68) மற்றும் விமுக்தி துஷான் (4/37) சிலாபம் மேரியன்ஸ் அணியை 148 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர். சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் சார்பில்  தொடக்க வீரர் ஷெஹான் ஜயசூரிய அதிகபட்சமாக 38 ஓட்டங்களை குவித்தார்.

இதன்படி இராணுவ அணிக்கு 156 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டதுடன், அவ்வணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 24 ஓட்டங்களை பெற்று சற்று தடுமாற்றமான நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 190 (61.2) – மஹேல உடவத்த 52,  அஷென் சில்வா 52, தனுசிக பண்டார 5/36, நளின் பிரியதர்ஷன 4/61

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 183 (74.2) –  டில்ஷான் டி சொய்சா 47, ஹிமாஷ லியனகே 32, சச்சித்ர சேரசிங்க 4/29, மலிந்த புஷ்பகுமார 3/46

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 148 (36.4) – ஷெஹான் ஜயசூரிய 38, நளின் பிரியதர்ஷன 5/68, விமுக்தி துஷான் 4/37

இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 24/2 (10)


பதுரேலிய விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

முதலில் துடுப்பெடுத்தாடிய பதுரேலிய விளையாட்டுக் கழகம் 300 ஓட்டங்களை குவித்ததுடன், அத்தோடு முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இன்றைய தினம் தமது இன்னிங்சை ஆரம்பித்த சோனகர் விளையாட்டுக்கு கழகம், பபசார வடுகே பெற்றுக் கொடுத்த 71 ஓட்டங்கள் உதவியுடன் 214 ஓட்டங்களை குவித்தது. பதுரேலிய விளையாட்டுக் கழகம் சார்பாக பந்துவீச்சில் அசத்திய டிலேஷ் குணரத்ன மற்றும் அலங்கார அசங்க 4 விக்கெட்டுகள் வீதம் பதம்பார்த்தனர்.

86 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பதுரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களை பெற்றிருந்தது. பந்துவீச்சில் பிரமோத் மதுவந்த 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 300 (88.1) – சஹன் விஜேரத்ன 102, சாலிய சமன் 38, நிலங்க சந்தகன் 5/52

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 214 (68.5) – பபசார வடுகே 71, ப்ரிமோஷ் பெரேரா 46, டிலேஷ் குணரத்ன 4/54, அலங்கார அசங்க 4/70

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 91/4 (19) – நதீர நாவல 26*, பிரமோத் மதுவந்த 3/23


BRC கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

நேற்றைய தினம் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களை பெற்றிருந்த புளூம்பீல்ட் அணி, இன்று 317 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடக்க வீரர் நிசல் பிரான்சிஸ்கோ 79 ஓட்டங்களை குவித்ததுடன், அணித்தலைவர் நிபுன் கருணாநாயக்க 98 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அசத்திய BRC அணியின் தினுக ஹெட்டியாரச்சி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து துடுப்பெடுத்தாடிய BRC அணி பானுக ராஜபக்ஷவின் அரைச்சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ஓட்டங்களை குவித்திருந்தது. புளூம்பீல்ட் அணியின் மலித் டி சில்வா 4 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 317 (99.2) – நிபுன் கருணாநாயக்க 98, நிசல் பிரான்சிஸ்கோ 79, தினுக ஹெட்டியாரச்சி 6/103

BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 236/6 (76) – பானுக ராஜபக்ஷ 52, மலித் டி சில்வா 4/64


காலி கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

காலி கிரிக்கெட் கழகம் பெற்றுக் கொண்ட 301 ஓட்டங்களை எதிர்த்து களமிறங்கிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 315 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டது.

சதம் குவித்த மிலிந்த சிறிவர்தன (115) மற்றும் அரைச்சதம் கடந்த உமேஷ் கருணாரத்ன (57) அணிக்கு வலுவளித்தனர். பந்துவீச்சில் காலி கிரிக்கெட் கழகத்தின் சஜீவ வீரகோன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய காலி கிரிக்கெட் கழகம், இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 301 (86.3) – தமித ஹுனுகும்புர 97, நிலூஷன் நோனிஸ் 65, மின்ஹாஜ் ஜலீல் 40, கசுன் ராஜித 5/57, சதுர ரந்துனு 3/85

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 315 (82.4) – மிலிந்த சிறிவர்தன 115, உமேஷ் கருணாரத்ன 57, சஜீவ வீரகோன் 4/121

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 15/0 (6)

நாளை போட்டிகளின் இறுதி நாளாகும்.