நிதர்சனின் கோல் மழையால் FA கிண்ணத்தின் யாழ் லீக் சம்பியனானது சென். மேரிஸ்

1643
FA Cup Jaffna League

FA கிண்ணத்தின் யாழ் லீக் சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டியில், இரண்டாம் பாதியில் முழு ஆதிக்கத்தை செலுத்திய நாவாந்துறை சென். மேரிஸ் அணி 5-1 என்ற கோல்கள் கணக்கில் பாஷையூர் சென் அன்ரனீஸ் அணியை வென்றது.

அரையிறுதியில் ஆனைக்கோட்டை யூனியன் அணியை வீழ்த்தி நாவாந்துறை சென். மேரிஸ் அணியும், கலைவாணி அணியை வீழ்த்திய பாஷையூர் சென் அன்ரனீஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. இந்நிலையில் தீர்மானம் மிக்க இறுதிப் போட்டி அரியாலை உதைப்பந்தாட்டப் பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.  

போட்டி ஆரம்பமாகி 4ஆவது நிமிடத்தில், சென் அன்ரனிஸ் அணியின் முன்கள வீரர் மிகவும் லாவகமாக மேரிஸின் பின்கள விரர்கள் அனைவரும் முன்னேறியிருந்த வேளையிலே, பெனால்டி எல்லை வரை மிக வேகமாக பந்தைக் எடுத்துச் சென்றார்.

கோல் காப்பாளரை ஏமாற்றி இலகுவாக அவர் கோல் பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், இறுதி நேரத்தில் நேரடியாகப் பந்தை கோல் காப்பாளரின் கைக்குள்ளேயே உதைந்து சிறந்த முயற்சியை வீணடித்தார்.

தொடர்ந்து ஆட்டத்தின்போது மழைத்தூறல் இருந்தாலும் ஆட்டத்தின் விறுவிறுப்பில் எந்த குறையும் இருக்கவில்லை. பந்தைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த சென் மேரிஸின் நிதர்சன், 18ஆவது நிமிடத்தில் அன்ரனிஸின் கோல் காப்பளரை நோக்கிப் பந்தை உதைய பந்து அவரின் கைகளினூடாகவே கோல் கம்பங்களுக்குள் நுழைய,  இறுதிப் போட்டியின் முதல் கோலைப் பெற்றது சென் மேரிஸ்.

அதே உத்வேகத்துடனே நிதர்சன் 22ஆவது நிமிடத்தில் ஹெடர் மூலம் மேலும் ஒரு கோலினைப் பெற்றார்.

தமது ஆட்டத்தை வேகப்படுத்தி சென் மேரிஸின் கோல் பரப்பை ஆக்கிரமித்த அன்ரனிஸிற்கு,  மதுசன் 25ஆவது நிமிடத்தில் கோல் பெற்று அன்ரனிஸின் கோல் கணக்கை ஆரம்பித்தார்.

30ஆவது நிமிடத்தில் நடுவரால் மேரிஸின் பின்கள விரர் யுனிட்டனுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்தும் இரு அணிகளும் கோல் பெற முனைந்த போதும் பின்களம் பலமாய் இருக்க கோல்பெறும் முயற்சிகள் தடுக்கப்பட்டன.

முதல் பாதி: சென் மேரில் விளையாட்டுக் கழகம் 02 – 01 சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் போட்டி விறுவிறுப்படையும் என எதிர்பார்த்த போதும் சென் மேரிஸின் ஆதிக்கமே தொடர்ந்தது. 55ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி எல்லைக்கு சற்று வெளியே கிடைந்த ப்ரீ கிக்கினை நிறோஜன், கோலை நோக்கி உருட்டி அடித்த போது, மீண்டும் ஒரு முறை பந்தை தனது கைகளினூடே கோலிற்கு நழுவ விட்டார் அன்ரனிஸின் கோல் காப்பாளர்.

ஆட்டத்தின் 60ஆவது  நிமிடத்தில் தவறாக ஆடிய மேரிஸின் ஜக்சனிற்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே அன்ரனிஸிற்குக் கிடைத்த ப்ரீ கிக்கை  இலகுவாகத் தடுத்தனர் மேரிஸ் பின்கள விரர்கள். அதேவேளை, பின் களம் வரை பந்தைக் காவிச் சென்ற அன்ரனிஸ் வீரர்களுக்கும் கோல் பெறும் வாய்ப்பு எதனையும் மேரிஸின் பின் கள வீரர்கள் வழங்கவில்லை.

தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திய மேரிஸிற்கு நிதர்சன் 75ஆவது நிமிடத்தில் ஹெடர் மூலம் ஒரு கோலையும், அதே வேகத்தில் 80ஆவது நிமிடத்தில் தனது நான்காவது கோலாக மேலும் ஒரு கோலையும் பெற்றார்.  

அதன் பின்னர் 83ஆம் மற்றும் 84ஆம் நிமிடங்களில் முறையே அன்ரனிஸின் ஸ்பென்ஸர் மற்றும் றஜித் ஆகியோரிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

போட்டியில் இரண்டாம் பாதியின் முழு ஆதிக்கத்துடனும் நிதர்சனின் முன்கள செயற்பாட்டாலும் இறுதிப் போட்டியின் நிறைவில் 5-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது நாவாந்துறை சென் மேரிஸ் அணி.

இவ்வணி கடந்த வருடம் தேசிய ரீதியாக முதல் 16 அணிகளுள் அங்கம் பெற்றது. இந்நிலையில் இம்முறையும் லீக் சம்பியனாகத் தெரிவாகியுள்ள இவ்வணி அடுத்த கட்டங்களில் தேசிய மட்டத்தில் உள்ள பலம் பொருந்திய அணிகளுடன் மோதவுள்ளது.

முழு நேரம்: சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் 05 – 01 சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றோர்

சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்

நிதர்சன் 18′,22′,75′,80′, நிறோஜன்  55′

சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம்

மதுசன் 25′

மஞ்சள் அட்டை

சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்

யுனிற்றன் 30′, ஜக்சன்  60′

சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம்

ஸ்பென்ஸர்  83′, றஜித்         84′