இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் B மட்ட கழக அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் இன்று ஆரம்பமாகியிருந்தன. இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவில் தமது துடுப்பாட்ட வலிமையினை காட்டியிருந்த விமானப்படை அணி மற்றும் லங்கன் கிரிக்கெட் கழகம் ஆகியவை வலுப்பெற்றுள்ளன.

இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை பெளதீக கலாசார கழகம்

மக்கோன சர்ரேய் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சி காரணமாக எதிரணியினால் முதலில் துடுப்பாட வைக்கப்பட்ட விமானப்படை, ஆரம்பத்தில் துடுப்பாட்டத்தில் தடுமாறி இருந்தது. இருப்பினும்  பொறுப்பாக ஆடிய மத்திய வரிசை வீரர்களான ரொஸ்கோ தட்டில் (175), லஹிரு சிறி லக்மல்(115) ஆகியோர் சதங்களைக் குவித்தனர்.

இதனால், வெறும் 79.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 426 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டபோது, விமானப்படை அணி தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது.

விமானப்படை அணியினை கட்டுப்படுத்த, பத்து பந்து வீச்சாளர்கள் வரையில் உபயோகித்த களுத்துறை பெளதீக கலாசார அணியில் இடது கை சுழல்பந்து வீச்சாளர் ருச்சிர தரிந்த  நான்கு விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

பின்னர், துடுப்பாடிய களுத்துறை பெளதீக கலாசார அணி, ஒரு விக்கெட்டினை பறிகொடுத்து 7 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக இன்றைய ஆட்டநேர நிறைவு வரை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் : 426/9d (79.2) ரொஸ்கோ தட்டில் 175, லஹிரு சிறி லக்மல் 115, ஹஷான் ஹர்சன ஜேம்ஸ் 33, ருச்சிர தரிந்த 98/4

களுத்துறை பெளதீக கலாசார கழகம் : 7/1 (5)  


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்

கொழும்பு சோனகர் கழக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சி முடிவுகளிற்கு அமைவாக முதலில் துடுப்பாடிய லங்கன் கிரிக்கெட் கழக அணியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த லக்ஷன் ரொட்ரிகோ ஆக்ரோசமாக அடி, 113 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளை விளாசி 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

மறுமுனையில் சஷீன் பெர்னாந்து 96 ஓட்டங்களை விளாச, முதல் நாள் நிறைவில் லங்கன் கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 364 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

ஆட்ட நிறைவின்போது, சாணக்க ருவன்சிரி 65 ஓட்டங்களுடன் களத்தில் நின்றதுடன், மதுர மதுசங்க கடற்படை அணிக்காக இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் : 364/5 (90) லக்ஷன் ரொட்ரிகோ 133, சஷீன் பெர்னாந்து 96, சாணக்க ருவன்சிரி 65*, மதுர மதுசங்க 33/2


களுத்துறை நகர கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இப்போட்டியில், பொலிஸ் விளையாட்டு கழகம் நாணய சுழற்சிக்கு அமைவாக களுத்துறை நகர கழகத்தினை துடுப்பாட பணித்தது.

இதற்கமைவாக அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தரிந்து சிறிவர்தன அரைச்சதம் கடந்து 58 ஓட்டங்களை குவித்தார். இவரின் விக்கெட்டினை தொடர்ந்து நிலைமையை உணர்ந்து ஆடத் தொடங்கிய சுலான் ஜயவர்தன ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 76 ஓட்டங்களின் துணையுடன், மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில், களுத்துறை நகர கழகம் 5 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் முன்னணி சுழல் பந்து வீச்சாளரான சுவஞ்சி மதநாயக்க இன்று பறிபோன விக்கெட்டுக்களில் மூன்றினை தன்வசமாக்கியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம் : 238/5 (90) சுலான் ஜயவர்தன 76*, தரிந்து சிறிவர்தன 58, நிப்புன கமகே 43, சுவஞ்சி மதநாயக்க 45/3


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்

குருநாகல் வெலகெதர மைதானத்தில் மழை காரணமாக, தாமதித்து ஆரம்பமான இப்போட்டியில், இலங்கை துறைமுக அதிகார சபை அணி சொந்த மைதான அணியான குருநாகல் இளையோர் அணியினை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி களமிறங்கிய அவ்வணி, 23 ஓவர்களே வீசப்பட்ட இன்றைய நாளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவர் உட்பட 3 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  

சாணக்க கோமசரு, 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகத்திற்காக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் : 63/3 (23) கல்ப பண்டாரநாயக்க 17, சாணக்க கோமசரு 22/2

இன்று ஆரம்பமாகிய அனைத்து போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்