அழுத்தங்களுக்கு மத்தியில் T-20 தொடரை எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி

4446

தென்னாபிரிக்காவுடனான மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் படுதோல்வியடைந்து வெகுவாகப் பாதிக்கப்பட்ட பின்னர், பல அழுத்தங்களுடன் இன்று  அவ்வணியுடனான T-20 தொடரில் மோதவுள்ளது இலங்கை கிரிக்கெட் அணி.

ஒரு காலத்தில் T-20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி, இன்று ஆரம்பமாகும் T-20 போட்டித் தொடரில் களமிறங்குவது குறித்து சிலர் மகிழ்ச்சியடையலாம். எனினும், கடந்த சில போட்டிகளில் இலங்கை அணி வெளிப்படுத்தியிருக்கும் முடிவுகளை உற்று நோக்கும்போது குறித்த போட்டிகளில் இலங்கை அணியின் வெற்றி குறித்து ஊகிக்க முடியாமலே இருக்கிறது.

பர்ஹான் பெஹர்டீனின் தலைமையில் இலங்கையுடன் மோதவுள்ள தென்னாபிரிக்க T-20 அணி

மூன்று சர்வதேச T-20 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று செஞ்சுரியனில் ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கை T-20 குழாமிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களில் பாரியதொரு மாற்றத்தைக் காணக்கூடியதாக உள்ளது.

அவுஸ்திரேலியாவுடனான கடந்த T-20 போட்டிகளில் இடம்பெற்றிருந்த 14 வீரர்களில், வெறும் 6 வீரர்களே இந்த தொடரில் இலங்கைக் குமாழில் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துள்ளனர்.

அதே நேரம், காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியாளித்தாலும், புதிய குழாத்துடன் தென்னாபிரிக்காவின் சொந்த மண்ணில் அவ்வணியை எவ்வாறு இலங்கை எதிர்கொள்ளும் என்பது அனைவரதும் கேள்வியாக உள்ளது.  

அதிரடி துடுப்பாட்ட வீரர் திலக்கரத்ன டில்ஷானின் ஓய்வுக்கு பின்னர் இலங்கை அணி பங்குபற்றும் முதலாவது T-20 போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யார் என்பது மற்றொரு கேள்வியாக உள்ளது.

அத்துடன், புதிய வரவான சகலதுறை ஆட்டக்காரர் திக்ஷில டி சில்வா மற்றும் இடது கை சுழல்பந்து வீச்சாளர் லக்க்ஷான் சந்தகன் ஆகியோருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்த போட்டித் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை இலங்கை அணிக்கு பாரிய இழப்பாகும்.

அதேநேரம், இவ்விரு அணிகளுக்கு இடையிலான T-20 போட்டிகளில் இதுவரை ஆதிக்கம் செலுத்தியிருக்கும் தென்னாபிரிக்க அணியிலும் பாரிய மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது. எதிர்வரும் கிரிக்கெட் போட்டித் தொடர்களை கருத்தில் கொண்டு அவ்வணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆச்சரியம் தரும் வகையில் 25 T-20 போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள பர்ஹான் பெஹர்டீன் தென்னாபிரிக்க அணியை வழிநடாத்தவுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் புதிய ஆறு வீரர்கள் அறிமுகமாக உள்ளனர். அத்துடன், உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி கூடிய ஓட்டங்களைப் பதிவு செய்துள்ள ஜான்ஜான் ஸ்மட்ஸ், மூத்த வீரரான ஹைனோ குன்னுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.

இலங்கை அணியில் அறிமுகமாகும் திக்ஷில டி சில்வா : அணிக்கு திரும்பிய திக்வெல்ல, தனுஷ்க

டேவிட் மில்லர் முன் வரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்த உள்ள அதேநேரம், பர்ஹான் பெஹர்டீன், தியனஸ் டி பிரய்ன் மற்றும் ரிசா ஹென்ரிக்ஸ் நடுநிலை துடுப்பாட்டத்தை வலுப்படுத்தவுள்ளனர். மேலும் மன்கலிசோ மொசெலா விக்கெட் காப்பாளராக செயல்படவுள்ளார். பந்து வீச்சில் சில புதிய வீரர்கள் இடம்பெறவுள்ள நிலையில், இம்ரான் தாஹிர் மற்றும் ஆரோன் ப்ஹன்கிசோ ஆகியோர் சுழல் பந்து வீச்சாளர்களாக களமிறங்க உள்ளனர்.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

கடந்தாண்டு 16 T-20 போட்டிகளில் பங்குபற்றியுள்ள இலங்கை அணி, அவற்றில் வெறும் மூன்று போட்டிகளில் மாத்திரமே வென்றுள்ளது. அதிலும் ஐக்கிய அரபு ராட்சியம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய பலவீனமான அணிகளுடனேயே இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

புதிய வரவான ஜான்ஜான் ஸ்மட்ஸ் 23 உள்ளூர் T-20 போட்டிகளில் பங்குபற்றி 733 ஓட்டங்களையும் 25.64 என்ற சராசரியில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். எனவே, அவரது சகல துறை ஆட்டம் அணிக்கு பக்க பலமாய் அமையலாம்.

T-20 போட்டிகளில் இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் 1000 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள இன்னும் 13 ஓட்டங்களை பெற வேண்டும். எனவே, அவருக்கு தனது T-20 வரலாற்றில் ஒரு முக்கிய தொடராக இந்த தொடர் அமையவுள்ளது.SriLanka vs South Africa T-20 Preview

கடந்த ஐந்து போட்டிகளில் முடிவுகள்

இலங்கை : தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி,
தென்னாபிரிக்கா : வெற்றி, தோல்வி, வெற்றி, தோல்வி, தோல்வி,

இரு அணிகளின் குழாம்

இலங்கை : அஞ்சலோ மெதிவ்ஸ் (தலைவர்), தினேஷ் சந்திமால் (துணைத் தலைவர்), குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, அசேல குணரத்ன, சீக்குகே பிரசன்ன, சஜித் பத்திரன, லக்ஷான் சந்தகன், திக்ஷில டி சில்வா, நுவான் குலசேகர, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், இசுரு உதான

தென்னாபிரிக்கா : பார்ஹான் பெஹர்டீன் (தலைவர்), தியனஸ் டி பிரய்ன், ரிசா ஹென்ரிக்ஸ், இம்ரான் தாஹிர், ஹைனோ குன், டேவிட் மில்லர், மன்கலிசோ மொசெலா, லுங்கி நிகிடி, வெய்ன் பார்னெல், டேன் பேட்டர்சன், ஆரோன் ப்ஹன்கிசோ, ஜான்ஜான் ஸ்மட்ஸ்