களனி கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற DCL 2016 சுபர் 8 சுற்றின் 3ஆவது வார இறுதிப் போட்டியில் விமானப்படை விளையாட்டுக் கழக அணியை நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்துக் கழக அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது.  

விமானப்படை விளையாட்டுக் கழகம், ராணுவப்படை மற்றும் புளு ஸ்டார் ஆகிய அணிகளுடனான போட்டிகளை சமநிலையில் முடித்தது. இதனால் இரண்டு புள்ளிகளுடன் தரப்படுத்தலில் காணப்பட்டது. அதேவேளை, கடந்த வருட சம்பியனான கொழும்பு கால்பந்துக் கழகம் முதலாவது போட்டியை சமநிலையில் முடித்தாலும் அடுத்து சொலிட் அணியுடனான போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றியீட்டியது.

எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக முடிவடைந்த புளு ஸ்டார், விமானப்படை இடையிலான போட்டி

இந்நிலையில் இன்றைய போட்டியின் ஆரம்பம் முதல் விமானப்படை அணி சிறப்பாக செயற்பட்டு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. ஆரம்பத்தில் கொழும்பு அணி வீரர்கள் பந்தினை கைப்பற்ற தடுமாறினர்.

அதன் பலனாக போட்டியின் பத்தாவது நிமிடத்தில் விமானப்படை அணி கோலொன்றைப் பெற்றது. கோர்னர் கிக் வாய்ப்பின் மூலம் கவிந்து இஷான் உள்ளனுப்பிய பந்தை நுவன் வெல்கமகே அதிரடி ஹெடர் மூலம் கோலாக மாற்றினார்.

தொடர்ந்து கொழும்பு அணி வாய்ப்புகளை உருவாக்க முனைந்தாலும் அவ்வணி வீரர்களால் விமானப்படை அணியின் பாதியில் சிறப்பாக செயற்பட முடியாமல் போனது.

போட்டியை தொடர்ந்தும் விமானப்படை அணியினர் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

இரண்டாவது பாதி கோலினால் போட்டியை சமப்படுத்திய சொலிட் கழகம் 

திடீரென, 39ஆவது நிமிடத்தில் கொழும்பு கழகத்திற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின் மூலம் அணித்தலைவர் ரௌமி முஹிதீனால் உள்ளனுப்பப்பட்ட பந்தை மோமாஸ் யாப்போ லாவகமாக கோலாக்கினார்.

அதனைத் தொடர்ந்து கொழும்பு அணியின் நட்சத்திர வீரர் சர்வானை உட்கொண்டுவர போட்டியில் மேலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது கொழும்பு கால்பந்துக் கழகம்.

ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் கொழும்பு அணிக்கு மற்றொரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, சர்வான் உள்ளனுப்பிய பந்தை தனுஷ்க மதுஷங்க கோலாக்கினார்.

இதனால் முதல் பாதியின் இறுதித் தருவாயில் பெற்ற இரு கோல்களினால் கொழும்பு கழகம் முன்னிலை பெற்றது.

முதல் பாதி: விமானப்படை விளையாட்டுக் கழகம் 01 – 02 கொழும்பு கால்பந்துக் கழகம்  

இரண்டாவது பாதியில் எதிர்பார்த்தது போன்றே கொழும்பு கழகம் தமது வழமையான அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தது.

எனினும் அவர்களால் தொடர்ந்து வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியாமல் போக, விமானப்படை போட்டிக்குள் ஊடுருவத் தொடங்கியது.  இரு அணிகளும் ஒருகட்டத்தில் சம பலத்துடன் விளையாட போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியது.

சொலிடிடம் குழு நிலையில் பெற்ற தோல்விக்கு பதில் கொடுத்த கொழும்பு கழகம்

போட்டியின் 65ஆவது நிமிடத்தில் விமானப்படை அணிக்கு வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்ற போதிலும் கொழும்பு கழகத்தின் பின்களத் தடுப்பாளர் ரமீஸ் அந்த வாய்ப்பை அற்புதமாகத் தடுத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கு முகமாக கொழும்பு அணி விளையாட, ஆபிஸ் ஓலயேமிக்கு கிடைத்த வாய்ப்பை அவர் கோல் கம்பங்களுக்கு மேலே அடித்ததன் காரணமாக, தனது அணியின் மூன்றாவது கோல் வாய்ப்பைத் தவறவிட்டார்.

அதன் பின்னரும் போட்டியில் மேலும் ஒரு கோலுடன் வெற்றிபெறும் வாய்ப்பு கொழும்பு அணிக்கு கிடைத்த போதிலும், அவ்வணிக்கு எதிரணியின் இறுதி களத்தடுப்பாளரான ரொஹான் பெர்னாண்டோவைத் தாண்டி அதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியாமல் போனது.

இறுதி நேரத்தில் தேசிய அணி வீரர் கவிந்து இஷான் கோல் அடிக்க முயற்சித்த போதிலும் அவரால் அதனை நிறைவு செய்ய முடியாமல் போக, கொழும்பு கால்பந்துக் கழகம் வெற்றியை சுவீகரித்தது.

முழு நேரம்: விமானப்படை விளையாட்டுக் கழகம் 01 – 02 கொழும்பு கால்பந்துக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் சர்வான் ஜோஹர் (கொழும்பு கால்பந்துக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

விமானப்படை விளையாட்டுக் கழகம்நுவன் வெல்கமகே 10’

கொழும்பு கால்பந்துக் கழகம்மோமாஸ் யாப்போ 39’, தனுஷ்க மதுஷங்க 45’

மஞ்சள் அட்டை

விமானப்படை விளையாட்டுக் கழகம்துமிந்த 43’, கவிந்து இஷான் 44’, லக்மால் குணசிங்க 45’

கொழும்பு கால்பந்துத் கழகம்துவான் ரிஸ்னி   63’, சர்வான் ஜோஹர் 90’