இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்கா கனிஷ்ட அணிகள் மோதிக்கொள்ளும் முக்கோண ஒரு நாள் தொடர் நேற்று(14) ஆரம்பமாகியிருந்தது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை கனிஷ்ட அணியினை 128 ஓட்டங்களால் தென்னாபிரிக்க கனிஷ்ட அணி வீழ்த்தி இத்தொடரில் தமது இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்து கொண்டுள்ளது.

இன்று கேப்டவுன் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுக்கொண்ட தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் தலைவர் வில்லேம் முல்டர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இலங்கை கனிஷ்ட அணியின் சார்பாக ரஷ்மிக்க தில்ஷான், மனேல்கர் டி சில்வா ஆகியோருக்கு இது முதலாவது இளையோர் சர்வதேச ஒரு நாள் போட்டியாகும்.

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைவாக துடுப்பாட களமிறங்கிய தென்னாபிரிக்க கனிஷ்ட அணியானது தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் 25 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், முறையே ரஷ்மிக்க தில்ஷான், நிப்புன ரன்சிக்க ஆகியோரின் பந்து வீச்சு மூலம் இலங்கை கனிஷ்ட அணி ஓய்வறை நோக்கி அனுப்பியிருந்தது. இத்தொடரில் இலங்கை 19  வயதுக்கு உட்பட்டோர் அணிக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக இருந்திருப்பினும், ஜெஸ்ஸி கிறிஸ்டென்சன், ரெய்னாட் வேன் டொன்டர் ஆகியோர் நிதானமாக துடுப்பாடி மூன்றாவது விக்கெட்டுக்காக 141 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்தனர். இதனால், தென்னாபிரிக்க கனிஷ்ட அணி 150 ஓட்டங்களை கடந்து வலுவான நிலைக்குச் சென்றது. பின்னர் ரெய்னாட் வேன் டொன்டரின் விக்கெட்டினை தொடர்ந்து புதிதாக வந்த தென்னாபிரிக்க அணியின் தலைவர் வில்லேம் முல்டரின் அதிரடி ஆட்டத்துடன், தென்னாபிரிக்க கனிஷ்ட அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த ஜெஸ்ஸே கிறிஸ்டென்சன் சதம் கடந்து, 133 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகளை விளாசி 101 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, ரெய்னாட் வேன் டோன்டர் 79 ஓட்டங்களை 87 பந்துகளில் குவித்தார்.

பந்து வீச்சில், இலங்கை கனிஷ்ட அணி தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் துடுப்பாட்டத்தின் முற்பகுதியிலும், இறுதிப் பகுதியிலுமே விக்கெட்டுகளை கைப்பற்றியது. இதில், பி டி எஸ் குலரத்ன கல்லூரி மாணவரான வலதுகை சுழற்பந்து வீச்சாளர் நிப்புன் ரன்சிக்க 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜோசப் கல்லூரியின் ஜெஹான் டேனியல் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், தமக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 284 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை கனிஷ்ட அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான விஷ்வ சத்துரங்க, இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் அவிஷ்க பெர்னாந்து ஆகியோரை இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரிலேயே பறிகொடுத்தது. இதனால் இருவரும் முறையே 9 மற்றும் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இது மோசமான ஆரம்பம் என்ற காரணத்தினால், சற்று நிதானமாக ஓட்டங்கள் சேர்க்க ஆரம்பித்த, இலங்கை கனிஷ்ட அணியின் அடுத்த விக்கெட்டும் 40 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், தென்னாபிரிக்க அணித்தலைவர் முல்டரின் பந்து வீச்சில் பறிபோக இலங்கை கனிஷ்ட அணி தடுமாற ஆரம்பித்தது. மூன்றாவது விக்கெட்டாக கமிந்து மெண்டிஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார்.

இன்னும் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்ததன் காரணமாக, ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை பெற்று இலங்கை கனிஷ்ட அணி பாரிய நெருக்கடிக்கு ஆளாகியது. எனினும் இறுதி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரஷ்மிக்க தில்ஷானின் துடுப்பாட்டம் காரணமாக இலங்கை கனிஷ்ட அணி, 40.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்கள் வரை பெற்றது. இதனால் மேலதிக 128 ஓட்டங்களினால், தென்னாபிரிக்க கனிஷ்ட அணியிடம் இலங்கை படுதோல்வி அடைந்தது.

இலங்கை அணி சார்பாக, துடுப்பாட்டத்தில் இருவர் மாத்திரமே இருபது ஓட்டங்களையேனும் தாண்டினர். 24 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹசித்த போயகொட மற்றும் ரஷ்மிக்க தில்ஷான் ஆகியோரே அந்த இரு வீரர்களும் ஆவார்கள்.

பந்து வீச்சில், தென்னாபிரிக்க கனிஷ்ட அணி சார்பாக வலது கை சுழல் பந்து வீச்சாளர் ஜேட் டி கிளேர்க், மற்றும் தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் தலைவர் வில்லேம் முல்டர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த வெற்றிக்கு வழிவகுத்திருந்தனர்.

இப்போட்டியின் வெற்றி காரணமாக, தென்னாபிரிக்க கனிஷ்ட அணியானது 5 புள்ளிகளை பெற்று புள்ளி அட்டவணையில் முதல் இடத்தில்  தொடர்ந்து நிலைத்திருக்கின்றது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக, சதம் கடந்த ஜெஸ்ஸே கிரிஸ்டென்சன் தெரிவு செய்யப்பட்டார்.

இத்தொடரில், அடுத்ததாக இலங்கை கனிஷ்ட அணி ஜிம்பாப்வே கனிஷ்ட அணியுடன் நாளை இதே கேப் டவுன் மைதானத்தில் மோதவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்க கனிஷ்ட அணி:  283/6 (50) – ஜெஸ்ஸே கிரிஸ்டென்சன் 101(133), ரெய்னாட் வேன்  டொன்டர் 79(87), வில்லேம் முல்லர் 44(36), நிப்புன் ரன்சிக்க 45/3(10), ஜெஹான் டேனியல் 59/2(8)

இலங்கை கனிஷ்ட அணி: 155 (40.5) – ஹஸித்த போயகொட 24(25), ரஷ்மிக்க தில்ஷான் 24(52), ஜேட் டி கிளேர்க் 28/3 (8.5), வில்லேம் முல்டர் 42/3(8), கீனன் ஸ்மித் 32/2(8)

போட்டி முடிவு – தென்னாபிரிக்க கனிஷ்ட அணி 128 ஓட்டங்களால் வெற்றி