நடைபெற்று முடிந்திருக்கும், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது மூன்றாவது நாளிலேயே இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது. இதற்கு முழுக்காரணம் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களே என்று தனது ஆதங்கத்தினை இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் வெளியிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த இத்தொடரினை, இலங்கை அணி 3-0 என பறிகொடுத்து வைட் வொஷ் செய்யப்பட்டிருக்கின்ற இவ்வேளையில், இது வரலாற்றில் இலங்கை அணி சந்தித்த இரண்டாவது மோசமான டெஸ்ட் தொடர் தோல்வியாகும். இதற்கு முன்னர், இந்தியாவில் இலங்கை அணி அனைத்து போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவி அத்தொடரினை 3-0 என பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை(14), இரண்டாவது நாள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த இலங்கை அணி, அன்றைய நாளின் மதிய போசண இடைவேளையின் முன்னரே, 131 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தமது முதல் இன்னிங்சினை முடித்துக் கொண்டிருந்தது. இலங்கை அணி சார்பாக, துடுப்பாட்டத்தில் ஒரு வீரரேனும் கூட அரைச்சதம் தாண்டவில்லை.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட குறைவான ஓட்டங்கள் காரணமாக, தென்னாபிரிக்காவினால், பலோவ் ஒன் (Follow On) முறையில் மீண்டும் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கை அணி, தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் அதி திறமையான பந்து வீச்சு மூலம், 177 ஓட்டங்களிற்குள் மூன்றாவது நாளுக்குரிய 30 ஓவர்கள் மீதமாக இருந்த நிலையில் மடக்கப்பட்டது.

“இத்தொடரிற்கு முன்னதாக நாங்கள் அதற்காக தயரான விதம் சரியாகவே இருந்திருந்தது. நாங்கள் இலங்கையில் புற்தரை மேல் விக்கெட்டுகளை வைத்து பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தோம். அப்படியாக சுமார் 6 தொடக்கம் 8 வாரங்கள் வரை இச்சுற்றுத்தொடருக்கு முன்னதாக இவ்வாறான பயிற்சிகளை மேற்கொண்டிருந்தோம். எங்களது பயிற்சிகளும் மோசமானதாக இருக்கவில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக இத்தொடரில் விளையாடும் அளவிற்கு அவை போதுமானதாக எங்களுக்கு இருந்திருக்கவில்லை” என்று மெத்திவ்ஸ் தெரிவித்தார்.

மேலும்

“அங்கே பங்களிப்பு தரவேண்டியவர்களாக, துடுப்பாட்ட வீரர்களே இருக்கின்றனர். ஆனால், அவற்றை (கற்றுகொண்டதை) அவர்கள் பிரயோகிப்பதிலும் ஒருமுகப்படுத்தி செயற்படுவதிலும் தளர்வு காணப்பட்டது. இந்த மாதிரியான (வேக) பந்து வீச்சிற்கு முகம் கொடுக்க நாங்கள் அதிக நேரம் ஒருநிலைப்படுத்தி செயற்பட வேண்டி இருந்தது. அவர்கள் குறைவாகவே இலகுவான பந்துகளை தந்ததுடன், எப்போதும் பந்துகளை குறிப்பிட்ட புள்ளியை நோக்கியே போட்டனர். இந்த தருணத்தில் கவனமாகவும், நேர்த்தியான அணுகுமுறைகளை கொண்டவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாங்கள் அதனை அதிகமாக செய்திடவில்லை” என்று மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கை அணிக்கு இது, ஐந்தாவது வைட் வொஷ் தோல்வி என்பதோடு, இலங்கை அணி இறுதியாக 2012-2013 இல் அவுஸ்திரேலியா உடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்றிருந்தது. அத்தொடரில் இலங்கை அணியின் எஞ்சலோ மெத்திவ்சும் விளையாடி  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொடர் இலங்கை அணிக்கு மிகவும் மோசமானது என்பதோடு, இதில் இலங்கையை சேர்ந்த மூன்று வீரர்கள் மாத்திரமே அரைச்சதம் கடந்திருந்தனர். ஆனால், அப்போதைய அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஹோபார்ட் டெஸ்ட்டை இலங்கை சமநிலைப்படுத்தும் நிலையில் இருந்ததோடு, சிட்னி டெஸ்ட்டில் வெற்றியிலக்கினை கிட்டத்தட்ட நெருங்கியும் இருந்தது.

“இலங்கை அணி தோல்வியடைந்த பல போட்டிகளில் நான் அங்கம் வகித்திருந்த போதும், ஒரு அணித்தலைவராக இலங்கையை வழிநடாத்தி பெற்ற இத்தோல்வியானது மிகவும் மோசமானது. நாங்கள் முன்னர் செய்ததை விட சிறப்பாக செயற்படவே எதிர்பார்த்திருந்தோம். ஆனால், எங்களில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை“ என்று இலங்கை அணியின் தலைவர் கூறியிருந்தார்.

இன்னும்,

”துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றம் அளிக்கும் முறையில் செயற்பட்டிருந்தனர். அதில் என்னோடு சேர்த்து அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் உள்ளடங்குவர். எங்களில் அனைவரும் நன்றாக ஆட ஆரம்பித்து இருப்பினும், அதனை பெரிய ஓட்டங்களாக மாற்றுவதற்கு தவறிவிட்டனர். அதுவும் ஏமாற்றம் தரும் ஒன்று. பந்து வீச்சாளர்களிற்கு வாய்ப்பு அளிக்கும் போது எங்களுக்கு ஓட்டங்களை சேர்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.“  என்றும் கூறியிருந்தார்.

இத்தொடரின் கசப்பான விடயங்கள் மூலம் இலங்கை அணி பெற்றுக்கொண்ட படிப்பினை, இலங்கை அணியின் இளம் வீரர்களிற்கு சிறந்த பாடமாக இருக்கும் என மெத்திவ்ஸ் கருதுகின்றார். மெதுவான பந்துகளிலும் கீழான பந்துகளிலுமே (இலங்கை அணியின்) விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. (இலங்கை அணியின்) துடுப்பாட்ட வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிய அனுபவமும் குறைவு, ஆனால் தென்னாபிரிக்கா ஒரேயடியாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை இத்தொடரில் உள்ளடக்கியிருந்தது.

“நீங்கள் எமது குழாமை எடுத்து பார்த்தீர்களேயானால்,வெறும் மூன்று வீரர்கள் மாத்திரமே முன்னதாக தென்னாபிரிக்காவில் விளையாடி இருக்கின்றனர். குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா ஆகியோர் முழுத்திறமையினையும் தம்வசத்தே கொண்டிருப்பினும், அவர்களுக்கு இவ்வாறான நிலைமைகளில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இன்னும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட ஒரு குழாமிற்கு எதிராக இவ்வாறான நிலைமைகளில் போராடுவது கடினம். இளம் வீரர்கள் அதனை விளங்கி கொள்வார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். இது எங்களுக்கு கடினமான ஒரு காலம், நாங்கள் அனைவரும் ஒரு அணியாக இருந்து இதிலிருந்து மீள முயற்சிக்க வேண்டியுள்ளது.“

இப்போது, இந்த டெஸ்ட் முழுமையாக நிறைவடைந்து விட்டது. இதனையடுத்து செஞ்சூரியன் நகரில் இடம்பெற இருக்கும் T-20 தொடரின் முதல் போட்டியில் தங்களை தயார்படுத்திக்கொள்ளவும் சரிசெய்து கொள்ளவும் இலங்கை அணிக்கு இன்னும் ஆறு நாட்களே எஞ்சியிருக்கின்றன. இந்த T-20 தொடரின் இரண்டாவது போட்டிக்காக இலங்கை அணி மீண்டும் ஜொகன்னஸ்பேர்க் திரும்ப வேண்டி இருப்பதோடு, அதனையடுத்து இறுதி T-20 போட்டியில் விளையாடுவதற்காக கேப்டவுன் நகர் நோக்கி இலங்கை அணி பறக்க இருக்கின்றது. இதனையடுத்து ஒரு நாள் தொடர் இடம்பெறவுள்ளது. (அடுத்த போட்டி தொடர்களிற்காக) மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களில் கைதேர்ந்த வீரர்கள் நேற்றைய நாளில் இருந்து வான்டரஸ் மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபடுவதாக அறியக்கிடைத்துள்ளது.

“எந்தவொரு போட்டியையும் தோற்கும் போதும், ஏமாற்றமே மிஞ்சுகின்றது அது தலைவராக இருந்த போதும் ஏனைய சக வீரராக இருந்தாலும் சரியே, நாங்கள் அனைத்து போட்டிகளையும் வெற்றி பெறவேண்டும் என்றே விளையாடுகின்றோம். ஆனால் தென்னாபிரிக்க அணியினை வீழ்த்தும் அளவிற்கு நாங்கள் செய்தவை (முயற்சிகள்) போதாது. நாங்கள் எங்களால் திறமைகளை மூன்று வகையான போட்டிகளிலும் வெளிக்காட்டியிருந்தோம். ஆனால், நாங்கள் பயணிக்க வேண்டிய பாதை இன்னும் நீளமானது. ஏனெனில் அடுத்ததாக மூன்று T-20 போட்டிகளும், 5 ஒரு நாள் போட்டிகளும் ஆரம்பமாகவுள்ளன. நாங்கள் எங்களை சுற்றியுள்ளவற்றையும் அங்கே இருக்கும் விடயங்களை மாற்றவேண்டிய நிலைமையில் உள்ளோம். எமது குழாமில் புதுமுக வீரர்களும் இருக்கின்றனர்.“