இன்னிங்ஸ் வெற்றியை தமதாக்கிய புனித ஜோசப் வாஸ் கல்லூரி

223
U19 Schools Cricket

சிங்கர் கிரிக்கெட் தொடரின் நான்கு போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளன. இதில் ஜனாதிபதி கல்லூரிக்கு அதிர்ச்சியளித்த புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் அபார வெற்றியை சுவீகரித்துள்ளது.

மேலும் இரண்டு போட்டிகள் சமநிலையில் நிறைவுற்றுள்ளதுடன், மற்றைய போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி அணி வெற்றியை சுவைத்துள்ளது

புனித ஜோசப் வாஸ் கல்லூரி எதிர் ஜனாதிபதி கல்லூரி

இன்றைய இரண்டாவது நாளில், 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை பெற்ற நிலையில் தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த ஜோசப் வாஸ் கல்லூரி அணி, இறுதி துடுப்பாட்ட வீரர்களின் பொறுமையான ஆட்டத்துடன் 65 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 278 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.  

துடுப்பாட்டத்தில் அரைச்சதம் கடந்திருந்த அஞ்சன ருக்மால் 64 ஓட்டங்களையும், நிரஞ்சன் ரொட்ரிகோ 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் சஷிக லியனகே 4 விக்கெட்டுக்களை ஜனாதிபதி கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

தமது முதல் இன்னிங்சில் மோசமாக ஆடி பெற்றுக்கொண்ட 109 ஓட்டங்கள் காரணமாக, 169 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஜனாதிபதி கல்லூரி அணி தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்தது.

அவர்கள் எதிரணி  பந்து வீச்சாளர்களால் நிலைகுலைந்து, 69 ஓட்டங்களுடன் சுருண்டு கொண்டு, இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களினால் புனித ஜோசப் வாஸ் கல்லூரியிடம் தோல்வியைத் தழுவியது.

பிரபல NCC அணிக்கு அதிர்ச்சி கொடுத்த பதுரேலிய விளையாட்டுக் கழகம்

இந்த அபார வெற்றிக்கு வழிவகுத்த ஜோசப் வாஸ் கல்லூரியின் நிப்புன் பெரேரா வெறும் 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்ததுடன், மதுசன் ரணதுங்க, கிரிஷன் அப்புஹாமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 109 (23.5) சமோத் விக்கிரமசூரிய 60, ஷோஹன் அனுருத்த 3/34

புனித ஜோசப் வாஸ் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 278 (65), அஞ்சன ருக்மல் 64, நிரன்ஞன் ரொட்ரிகோ 58, கிஹான் அபேயரத்ன 33, சஷிக லியனகே 4/49

ஜனாதிபதி கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 69 (19.3), நிப்புன் பெரேரா 5/19, மதுஷான் ரணதுங்க 2/06, கிரிஷான் அப்புஹாமி 2/26

போட்டி முடிவுபுனித ஜோசப் வாஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களினால் வெற்றி


தர்ஸ்டன் கல்லூரி எதிர் பிரின்ஸ்  ஒப் வேல்ஸ் கல்லூரி

நேற்று தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், தர்ஸ்டன் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சினை 171  ஓட்டங்களிற்கு முடித்திருந்து. பின்னர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுற்காக 26 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்தபோது முதலாம் நாளின் ஆட்ட நேரம் நிறைவடைந்தது.

இதனை அடுத்து இரண்டாவது நாளான இன்று தமது ஆட்டத்தினை தொடர்ந்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி, மேலதிக 8  விக்கெட்டுக்களையும் 55 ஓட்டங்களிற்குள் பறிகொடுத்து 81 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவ்வணியில், ஓரளவு போராட்டத்தினை காண்பித்திருந்த சந்துன் பெர்னாந்து மாத்திரம் 43 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட யேஷான் விக்கிரமாரச்சி 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை தர்ஸ்டன் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரி அணியானது, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது.

இமேஷ் விராங்க மாத்திரம் 32 ஓட்டங்களினை அதிகபட்சமாக பெற்றுக்கொண்ட வேளையில், கஃமல் நாணயக்கார வெறும் 13 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களையும், சவிந்து பீரிஸ் 4 விக்கெட்டுக்களையும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 215 ஓட்டங்களை பெறுவதற்காக களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி, 41 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இதனால், மேலதிக 61 ஓட்டங்களால் தர்ஸ்டன் கல்லூரி அணி வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சின் துடுப்பாட்டத்தில், சனோஜ் தர்ஷிக்க ஒரளவு போராடி 48 ஓட்டங்கள் வரை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்காக சேர்த்திருந்தார். பந்து வீச்சில் தர்ஸ்டன் கல்லூரியின் நட்சத்திர பந்து வீச்சாளர் நவீன் குணவர்தன அபாரமாக ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றி அவரது கல்லூரியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 171 (56.3), சரண நாணயக்கார 51, இமேஷ் விராங்க 26,கஃமல் நாணயக்கார 5/37, திலான் நிமேஷ் 4/48

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 81 (30.1), சந்துன் பெர்னாந்து 43*, யேஷான் விக்கிரமராச்சி 4/26, சவான் பிரபாஷ் 3/12, சரண நாணயக்கார 3/13

தர்ஸ்டன் கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 124 (48.2), இமேஷ் விராங்க 32, கஃமல் நாணயக்கார 5/13

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 153 (41), சனோஜ் தர்ஷிக்க 48, நவீன் குணத்திலக்க 6/40

போட்டி முடிவுதர்ஸ்டன் கல்லூரி அணி 61 ஓட்டங்களால் வெற்றி


வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி எதிர் காலி றிச்மன்ட் கல்லூரி

நேற்று சூரியவெவ மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியின், இன்றைய ஆட்டத்தினை 9 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களுடன் தொடங்கிய புனித அந்தோனியர் கல்லூரி அணி, 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதல் இன்னிங்சினை நிறைவு செய்துகொண்டது.

அவ்வணிக்காக ஏனையோர் மோசமாக செயற்பட்டிருப்பினும் அவிஷ்க தரிந்து மாத்திரம் 54 ஓட்டங்களை சிறப்பாக ஆடி பெற்றுக்கொண்டார்.

பின்னர், தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த காலி றிச்மண்ட் கல்லூரி அணி, அதித்த சிறிவர்தன பெற்றுக்கொண்ட 85 ஓட்டங்களின் துணையுடன் தமது முதல் இன்னிங்சுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தமது ஆட்டத்தினை நிறுத்திக்கொண்டது. இந்த இன்னிங்சில், அந்தோனியர் கல்லூரிக்காக தஷ்மிக்க 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து 37 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த அந்தோனியர் கல்லூரி அணி, ஆரம்பம் முதல் சங்க மதுபாஷன போராடி பெற்ற 75 ஓட்டங்களின் துணையுடன், 59 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில், அந்தோனியர் கல்லூரி அணியினரை மிரட்டியிருந்த சந்துன் மெண்டிஸ் 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

இதன்படி, வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 110 ஓட்டங்களை அதிரடியாக பெறுவதற்கு களமிறங்கிய காலி றிச்மன்ட் கல்லூரி அணி, 7 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, இன்றைய நாளின் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியர் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 157 (78.2), அவிஷ்க தரிந்து 54, விஷால் சில்வா 32, திலங்க உதேசன 4/39

றிச்மன்ட் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 194/6d (40.3), அதித்ய சிறிவர்த்தன 85, தனன்ஜய லக்ஷன் 32, தஷ்மிக்க 2/34

புனித அந்தோனியர் கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 146 (59), சங்க மதுபாஷன 75, அவிந்து தீக்ஷன 2/45

றிச்மன்ட் கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 59/2 (7)

போட்டி முடிவுபோட்டி சமநிலையில் நிறைவுற்றது. றிச்மன்ட் கல்லூரி அணிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


வெஸ்லி கல்லூரி எதிர் காலி மஹிந்த கல்லூரி

நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் வெஸ்லி கல்லூரி அணி தமது சொந்த மைதானத்தில் வைத்து 138 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சினை நிறைவு செய்து கொண்டதுடன், அதன் பின்னர் ஆடியிருந்த மஹிந்த கல்லூரி 2 விக்கெட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களை பெற்றிருந்த போது, நேற்றைய போட்டியின் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.

இதனையடுத்து, இன்று தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த மஹிந்த கல்லூரி அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணிக்காக அதிகபட்சமாக கவிந்து எதிரிவீர 40 ஓட்டங்களினை பெற்ற வேளையில், மறுமுனையில் பந்து வீச்சில் சிறப்பை காட்டியிருந்த மொவின் சுபசிங்க 42 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை அபாரமாக சாய்த்திருந்தார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை 55 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஆரம்பித்த வெஸ்லி கல்லூரி அணி, ஹசித் பெரேரா(84), ஜசோன் டி சில்வா(68), திலின பெரேரா (51) ஆகியோர் அரைச்சதம் தாண்டி பெற்றுக்கொண்ட ஓட்டங்களின் துணையுடன், 5 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போட்டியின் இன்றைய ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.

இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. இன்று பறிபோன 5 விக்கெட்டுக்களில் மூன்றினை கே.கே கெவின் மஹிந்த கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 138 (58.3), திசுகர அக்மீமன 37, பிரமித் ஹன்சிக்க 4/28

மஹிந்த கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 193 (79), கவிந்து எதிரிவீர 40, பாஷன் ரன்மல் 29, மொவின் சுபசிங்க 6/42

வெஸ்லி கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 232/5 (53), ஹசித் பெரேரா 84, ஜசோன் டி சில்வா 68, திலின பெரேரா 51, கே.கே கெவின் 3/66

போட்டி சுருக்கம்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. மஹிந்த கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி