ரத்மலான விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற டயலொக் ரக்பி லீக்கின் 6 ஆம் வாரத்திற்கான போட்டியொன்றில் இராணுவப்படை அணியும் விமானப்படை அணியும் மோதிக் கொண்டன. விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், இராணுவப்படை அணியின் இறுதி நேர தாக்குதலை சிறப்பாக சமாளித்துக் கொண்ட விமானப்படை அணி, 32 – 29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இராணுவப்படை அணியின் கயான் சாலிந்த தனது உதையின் மூலம் போட்டியை தொடக்கி வைத்தார்.

ஆட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த இராணுவ வீரர்கள் தமது முன்கள வீரர்களைக் கொண்டு ட்ரை கோட்டை நோக்கி முன்னேறினர். போட்டியின் 5ஆவது நிமிடத்தில் ட்ரை கோட்டின் அருகே அடுத்தடுத்து கிடைத்த இரண்டு ஸ்க்ரம் வாய்ப்புக்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட இராணுவ அணி, தனுஷ்க தல்வத்தவின் ஊடாக ட்ரை வைத்தது. ‘கன்வெர்ஷன்உதையை கயான் சாலிந்த வெற்றிகரமாக உதைத்தார். (விமானப்படை அணி 00 – 07 இராணுவப்படை அணி)

இராணுவ அணியின் ஆட்டத்திற்கு பதிலளித்த விமானப்படை அணி கிம்ஹான சில்வாவின் ஊடாக ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்டது. ‘கன்வர்ஷன்உதையை சரித் செனவிரத்ன புள்ளிகளாக மாற்றினார். (விமானப்படை அணி 07 – 07 இராணுவப்படை அணி)

தமது வேகமான விளையாட்டுப் பாணியை தொடர்ந்தும் வெளிக்காட்டிய இராணுவ அணி, சிறப்பான பந்துக் கைமாற்றல்களின் மூலம் எதிரணியின் பகுதிக்குள் முன்னேறியது. கம்பங்களுக்கு அருகில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை புள்ளிகளாக மாற்ற எண்ணிய இராணுவ அணி, கம்பத்தை நோக்கி உதைக்க முடிவு செய்தது. இலகுவான உதையை கயான் சாலிந்த வெற்றிகரமாக உதைத்தார். (விமானப்படை அணி 07 – 10 இராணுவப்படை அணி)

விமானப்படை அணியும் எதிரணிக்கு சவாலளிக்கும் விதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ட்ரை கோட்டை நோக்கி முன்னேறியது. தனது வேகத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட கயான் இத்தமல்கொட அபாரமான ஓட்டத்தின் பின்னர் சூரிய கிரிஷானிற்கு பந்தை கைமாற்ற, அவர் கம்பங்களுக்கடியில் ட்ரை வைத்தார். இலகுவான உதையை சரித் செனவிரத்ன வெற்றிகரமாக உதைத்தார். (விமானப்படை அணி 14 – 10 இராணுவ அணி)

தொடர்ந்து தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிய விமானப்படை அணி தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரித் செனவிரத்னவின் ஊடாக புள்ளிகளாக மாற்றியது. (விமானப்படை அணி 17 – 10 இராணுவ அணி)

போட்டியின் 35 ஆவது நிமிடத்தில் ட்ரை கோட்டிலிருந்து 5 மீட்டர் தூரத்தில் கிடைத்த ஸ்க்ரம் இன் மூலம் விமானப்படையின் சாரக வெரல்ல ட்ரை வைக்க, புள்ளி வித்தியாசம் 14 ஆக உயர்ந்தது. (விமானப்படை அணி 24 – 10 இராணுவப்படை அணி)

முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் இராணுவப்படை அணியின் பலம் பொருந்திய முன்கள வீரர்கள் மீண்டும் தமது சிறப்பான ஆட்டத்தின் மூலம் எதிரணிக்கு அழுத்தத்தை வழங்கினர். எனினும் விமானப்படை வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் எதிரணிக்கு ட்ரை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்காது தடுத்து வந்தனர். 40 ஆவது நிமிடத்தில் எதிரணியின் 22 மீட்டர் வளாகத்தினுள் கிடைத்த ஸ்க்ரம் வாய்ப்பை விவேகமாக பயன்படுத்திய தனுஷ்க தல்வத்த தனது இரண்டாவது ட்ரையினை வைத்து புள்ளி வித்தியாசத்தை குறைத்தார். (விமானப்படை அணி 24 – 15 இராணுவப்படை அணி)

முதல் பாதி: விமானப்படை அணி 24 – 17 இராணுவப்படை அணி

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளுமே சரிசமமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் அடுத்த 15 நிமிடங்களில் இரண்டு அணிகளாலும் புள்ளிகளை பெற இயலவில்லை.

சிறிது நேரத்தின் பின்னர் விமானப்படை அணி தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் எதிரணியின் தடுப்பை தாண்டி முன்னேறியது. சிறப்பான பந்து கைமாற்றலின் பின்னர் விமானப்படையின் இஷார மதுஷான் ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்டார். கடினமான உதையை செனவிரத்ன தவறவிட்டார். (விமானப்படை அணி 29 – 15 இராணுவப்படை அணி)

14 புள்ளிகளினால் முன்னிலை பெற்றுக் கொண்ட விமானப்படை, அடுத்த சில நிமிடங்கள் கவனயீனமாக விளையாட, அதனை பயன்படுத்திக் கொண்ட இராணுவப்படை அணியின் திரூஷ அதிகாரி கம்பங்களுக்கு அருகில் ட்ரை வைத்தார். மதுஷான் சந்திரசேகரவின் உதை கம்பங்களை ஊடறுத்துச் செல்ல, புள்ளி வித்தியாசம் 7 ஆகக் குறைந்தது. (விமானப்படை அணி 29 – 22 இராணுவப்படை அணி)

போட்டியின் 70 ஆவது நிமிடத்தில் எதிரணியின் பாதிக்குள் கிடைத்த பெனால்டியை கம்பத்தை நோக்கி உதைக்க விமானப்படை அணி முடிவு செய்தது. சரித செனவிரத்ன மீண்டும் இலக்கை நோக்கி உதைத்து தனது அணியின் புள்ளிகளை அதிகரித்தார். (விமானப்படை அணி 32 – 22 இராணுவப்படை அணி)

போட்டியின் இறுதி 10 நிமிடங்களில் புத்துணர்ச்சியுடன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இராணுவ அணி, எதிரணிக்கு பலத்த அழுத்தத்தை வழங்கியது. எனினும் விமானப்படை வீரர்கள் எதிரணியின் தாக்குதலை சிறப்பாக தடுத்தனர். இரண்டு தடவைகள் இராணுவ அணி வீரர்கள் ட்ரை கோட்டை கடந்த போதிலும், விமானப்படையின் தடுப்பாட்ட வீரர்கள் விவேகமாக செயற்பட்டு பந்தை கீழ் வைக்க விடாமல் தடுத்தனர். எவ்வாறாயினும் தொடர் முயற்சியின் பின்னர் 77 ஆவது நிமிடத்தில் சுமேத நாணயக்கார ட்ரை வைத்தார். சாலிந்த உதையை வெற்றிகரமாக உதைத்தார். (விமானப்படை அணி 32 – 29 இராணுவப்படை அணி)

புள்ளி வித்தியாசம் 3 ஆக குறைந்ததினால் போட்டி மீண்டும் விறுவிறுப்பானது. இறுதி நிமிடங்களில் இராணுவ அணி மீண்டும் அழுத்தத்தை கொடுத்தபடி ட்ரை கோட்டை நோக்கி முன்னேறியது. எனினும் துரதிர்ஷ்டவசமாக அடுத்தடுத்து இரண்டு தடவைகள் பந்தை கையாளுதலில் தவறிழைத்ததால், அவ்வாய்ப்பு கைநழுவியது. அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்தது.

இரண்டு போட்டிகளில் வெறும் 1 புள்ளி வித்தியாசத்தினால் தோல்விகளை தழுவிய இராணுவ அணி, இப்போட்டியிலும் 3 புள்ளிகளினால் தோல்வியடைந்தமை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

முழுநேரம்: விமானப்படை அணி 32 – 29 இராணுவப்படை அணி

ThePapare.com இன் ஆட்ட நாயகன் கயந்த இத்தமால்கொட

புள்ளிகளைப் பெற்றோர்

இராணுவப்படை அணி – 29

ட்ரை – தனுஷ்க தல்வத்த 2T, திரூஷ அதிகாரி 1T, சுமேத நாணயக்கார 1T

கொன்வெர்சன் – கயான் சாலிந்த 3C, 1P

விமானப்படை அணி – 32

ட்ரை – கிம்ஹான்  சில்வா 1T , சூரிய கிரிஷான் 1T , சாரக வெரல்ல 1T

கொன்வெர்சன்  – இஷார மதுஷான் 1T ,சரித் செனவிரத்ன 3C, 2P