நேற்று நடைபெற்று முடிந்த நான்காவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் (BPL) இறுதிப்போட்டியில் துடுப்பாட்டம், பந்து வீச்சு என்பவற்றில் தமது முழுப்பலத்தினையும் பிரயோகித்து ராஜ்சாகி கிங்ஸ் அணியினை வீழ்த்திய டாக்கா டைனமைட்ஸ் அணி சம்பியனாகத் தெரிவாகியது.

சங்கக்காரவின் நிதான ஆட்டம் அதிகளவில் கைகொடுத்த நிலையில் பெறப்பட்ட இந்த வெற்றியின்மூலம் BPL தொடரில் மூன்றாவது தடவையாகவும் அவ்வணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. எனவே BPL இல் அதிக தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையையும் டாக்கா டைனமைட்ஸ் பெற்றுள்ளது.

ஏழு அணிகள் பங்குகொண்ட இத்தொடரில், புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்த அணிகள் பிளய் ஓப் (PLAYOFF) சுற்றுக்கு தெரிவாகியிருந்தன. அந்த அடிப்படையில் டாக்கா டைனமைட்ஸ் அணி QUALIFIER 1 போட்டியில் குல்னா டைட்டன்ஸ் அணியினை தோற்கடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

மறுபுறம், ராஜ்சாகி கிங்ஸ் அணி ELIMINATOR சுற்றில் சிட்டகொங் வைகிங்ஸ் அணியினையும், QUALIFIER 2 போட்டியில் குல்னா டைட்டன்ஸ் அணியினையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

பின்னர் நேற்று மிர்பூர் சேர் பங்களா சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜ்சாகி கிங்ஸ் அணியின் தலைவர் டேரன் சம்மி கடந்த PLAYOFF சுற்றுகளில் தம் அணி இரண்டாவது துடுப்பாட்டத்தில் வெற்றி பெற்றதை வைத்து, இந்த போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் அணியினை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதன் அடிப்படையில், சகிப் அல் ஹசன் தலைமையிலான அவ்வணி, மெஹதி மரூப் மற்றும் இவான் லூயிஸ் ஆகியோருடன் தங்களது துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தது. மெஹதி மரூப் 5 ஓட்டங்களுடன் ஏமாற்றி வெளியேற, அடுத்து சொற்ப ஓட்ட இடைவெளிகளுக்கு லூயிஸ் நிற்க, மறு திசையில் முதல் மூன்று விக்கெட்டுகளையும் இழந்து டாக்கா டைனமைட்ஸ் அணி தடுமாறியது.  

இதனை அடுத்து, நான்காவது விக்கெட்டுக்காக வந்த இலங்கை அணியின் குமார் சங்கக்காரவுடன் இவான் லூயிஸ் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்காக 41 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்தனர். இந்நிலையில் எதிரணி வீரர் பர்ஹாத் ரேஸாவின் வேகத்தினை தாக்கு பிடிக்க முடியாமல் இவான் லூயிஸ் கெஸ்ரிக் வில்லியம்ஸிடம் பிடிகொடுத்து, 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைச்சதம் பெற தவறினார்.

இதனையடுத்து, ஏனைய வீரர்கள் போதிய ஓட்டங்களை சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறிய போதும், நிலைமையை சமாளித்து ஆடிய குமார் சங்கக்காரவின் நிதானமான ஆட்டத்தின் உதவியுடன் டாக்கா டைனமைட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.  

துடுப்பாட்டத்தில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு கைகொடுத்த குமார் சங்கக்காரா 33 பந்துகளிற்கு 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்ளடங்களாக 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் டாக்கா அணியை மிரட்டிய பர்ஹாத் ரேஸா 4 ஓவர்களை வீசி  28 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், கெஸ்ரிக் வில்லியம்ஸ், மெஹதி ஹஸன், அதிப் ஹுசைன், டேரன் சமி, சமிட் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, மைதான நிலைகளை கருத்திற்கொள்ளும் போது சவலான வெற்றி இலக்காக கருதப்பட்ட 160 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற ராஜ்சாகி கிங்ஸ் அணி நூருல் ஹசன், மொமினுல் ஹக் ஆகியோருடன் தயாரானது.

நூருல் ஹசன் மூன்றாவது ஓவரில் டாக்கா அணியின் அபு ஜயேத்தின் பந்தில் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்ல, முக்கியமான இந்த போட்டியின் நிலைமையை சுதாகரித்துக்கொண்ட  புதிதாக வந்த வீரரான சபீர் ரஹ்மான் மற்றும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மொமினுல் ஹக் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக 47 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.

இந்நிலையில் சகிப் அல் ஹசனின் பந்து வீச்சில், மொமினுல் ஹக் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை அடுத்து, இவருடன் துணைக்கு நின்ற சபீர் ரஹ்மானும், சக வீரர் தேவையில்லாத ஓட்டம் ஒன்றினை பெற முயற்சித்தமையினால் ரன் அவுட்  மூலம் ஆட்டமிழந்து சென்றார்.

வெற்றி இலக்கை நோக்கிச்சென்ற  ராஜ்சாகி அணியின் பயணத்தில் தீடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டு, போட்டி டாக்கா அணியின் பக்கம் மாறியது. இந்த தருணத்தை சரிவர பயன்படுத்திய டாக்கா அணி, சுழல்பந்து வீச்சாளர்களை சரியாக உபயோகித்து தொடர்ந்து வந்த முக்கிய வீரர்களான சமீட் பட்டேல், ஜேம்ஸ் பிராங்கிளின், டேரன் சம்மி ஆகியோரை குறைந்த ஓட்டங்களிற்குள் ஆட்டமிழக்கச்செய்து போட்டியை முழுவதும் தம்வசமாக்கியது.

பின்னர் ஏனைய வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்று மேலதிக 56 ஓட்டங்களினால் ராஜ்சாகி அணி தோல்வியினை தழுவியது.

துடுப்பாட்டத்தில், ராஜ்சாகி கிங்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக மூமினுல் ஹக் 27 ஓட்டங்களையும், சாபீர் ரஹ்மான் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில், அபு ஜயத் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்களான அணித்தலைவர் சகிப் அல் ஹஸன், சுன்சமூல் இஸ்லாம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை டாக்கா அணி சார்பாக கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

டாக்கா டைனமைட்ஸ்: 159/9(20) – இவான் லூயிஸ் 45(31), குமார் சங்கக்கார 36(33), DJ பிராவோ 13(10), சுன்சமூல் இஸ்லாம் 12(5), பர்ஹாத்  ரேஸா 28/3(4)

ராஜ்சாகி கிங்ஸ்: 103/10(17.4) – மொமினுல் ஹக் 27(30), சாபீர் ரஹ்மான் 26(22), சமிட் பட்டேல் 17(12), அபு ஜயேத் 12/2(3),  சுன்சாமூல் இஸ்லாம் 17/2(4), சகிப் அல்ஹசன் 30/2(4)

போட்டி முடிவு டாக்கா டைனமைட்ஸ் அணி 56 ஓட்டங்களால் வெற்றி

  • இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் – குமார் சங்கக்கார
  • தொடரின் நாயகன் –  மஹ்மதுல்லாஹ் (குல்னா டைட்டன்)
  • தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் –  தமிம் இக்பால் (476) – சிட்டகொங் வைகிங்ஸ்
  • தொடரில்  அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்DJ பிராவோ (21) –  டாக்கா டைனமைட்ஸ்