இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான ஆறு போட்டிகள் இன்று இடம்பெற்றன.

காலி கிரிக்கெட் கழகம்  எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி நேற்றைய தினம் ஆரம்பமானதுடன், ஆட்ட நேர முடிவின் போது காலி கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இன்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 352 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. டில்ஹான் குரே 86 ஓட்டங்களையும் எரங்க ரத்நாயக்க 62 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் ஜீவன் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய  சித்தர கிம்ஹான் மற்றும் தரங்க பரணவிதான ஆட்டமிழக்காது முறையே 104 மற்றும் 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள, தமிழ் யூனியன் அணி 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 352 (111.3) – டில்ஹான் குரே 81*, ஷாலிக கருணாநாயக்க 45, ஜீவன் மெண்டிஸ் 2/56

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 228/1 (66) – சித்தர கிம்ஹான் 104, தரங்க பரணவிதான 81


NCC எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற NCC அணி முதல் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அவ்வணியின் தொடக்க வீரர் சந்துன் வீரக்கொடி 113 ஓட்டங்களை விளாசினார். மேலும் நிமேஷ குணசிங்க (64) மற்றும் நிரோஷன் திக்வெல்ல (51) ஆகியோர் அரைச்சதம் கடக்க, NCC அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 385 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் அசத்திய சிலாபம் மேரியன்ஸ் அணியின் மலிந்த புஷ்பகுமார 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இன்றைய தினத்திற்கான ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 385 (88.1) – சந்துன் வீரக்கொடி 113, நிமேஷ குணசிங்க 64, நிரோஷன் திக்வெல்ல 51, பவன் விக்ரமசிங்க 46, எஞ்சலோ பெரேரா 45, மலிந்த புஷ்பகுமார 5/74


BRC எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய செரசன்ஸ் அணியின் மூன்று வீரர்கள் அரைச்சதம் கடந்தனர். சிறப்பாக பந்துவீசிய BRC அணியின் தினுக ஹெட்டியாரச்சி 5 விக்கெட்டுகளை வீழ்த்த, செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 302 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த BRC அணி, இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது விக்கெட் இழப்பேதுமின்றி 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 302 (79.5) – உமேஷ் கருணாரத்ன 84, இரோஷ் சமரசூரிய 72, தெனுவன் ராஜகருண 69, தினுக ஹெட்டியாரச்சி 5/96

BRC – 23/0 (6)


பதுரேலிய விளையாட்டுக் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய பதுரேலிய விளையாட்டுக் கழகத்தின் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் ஓய்வறை திரும்ப, அவ்வணி 156 ஓட்டங்களுக்கே சுருண்டது. பந்துவீச்சில் அசத்திய மலித் டி சில்வா 41 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய புளூம்பீல்ட் அணி, இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நிபுன் கருணாநாயக்க 47 ஓட்டங்களையும் அதீஷ நாணயக்கார 54 ஓட்டங்களையும் பெற்று களத்திலுள்ளனர்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 156 (51) – விஷ்வ விஜேரத்ன 47, ஷெஹான் பெர்னாண்டோ 46, மலித் டி சில்வா 5/41

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 134/3 (33) – அதீஷ நாணயக்கார 54, நிபுன் கருணாநாயக்க 47


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம்

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இலங்கை அணி வீரர் சச்சித் பதிரன மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் அரைச்சதம் கடக்க, கொழும்பு கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் அசேல குணரத்ன மற்றும் துஷான் விமுக்தி தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இராணுவ விளையாட்டுக் கழகம், இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துஷான் விமுக்தி ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை பெற்று களத்திலுள்ளார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218 (56.3) – சச்சித் பதிரன 54, லஹிரு மதுஷங்க 50

இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 92/3 (36) – துஷான் விமுக்தி 45*


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

போட்டியின் நாணயச்சுழற்சியில் வென்ற சோனகர் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ப்ரிமோஷ் பெரேரா 64 ஓட்டங்கள் குவிக்க, அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ராகம அணியின் அமில அபொன்சோ 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர்கள் உதார ஜயசுந்தர மற்றும் லஹிரு மிலந்த முறையே 85 மற்றும் 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள, ராகம கிரிக்கெட் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 217 (55.2) – ப்ரிமோஷ் பெரேரா 64, அமில அபொன்சோ 4/40

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 180/3 (34) – உதார ஜயசுந்தர 85*, லஹிரு மிலந்த 63