அண்மையில் ஜிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடர் மற்றும் முக்கோண ஒருநாள் தொடர் என்பவற்றில், இலங்கை அணி முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில், அனுபவம் குறைந்த இளம் வீரர்களைக் கொண்ட குழாமினை வைத்து இரு தொடர்களையும் வெற்றிகரமாக கைப்பற்றியது. இந்த வெற்றிகளுக்கு இளம் வீரரான “மொரட்டுவையின் இளவரசர்” என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்படும் 21 வயதேயான குஷல் மெண்டிஸ் பெரும் பாங்காற்றியிருந்தார்.

இலங்கை அணியின் எதிர்கால நம்பிக்கைக்குறிய வீரரான குஷல் குறித்தும், அவர் கடந்து வந்த  பாதைகள் குறித்தும் அறிந்துகொள்வதற்காக thepapare.com அவருடன் பிரத்யேக நேர்காணல் ஒன்றை நடத்தியது. அதனைத் தொடர்ந்து குஷல் குறித்த சில ஆழமான தகவல்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

 குஷல் மெண்டிஸின் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பம்

இலங்கை அணிக்கு லஹிரு திரிமான்ன, அமல் சில்வா போன்ற சிறந்த வீரர்களை கொடுத்த,  கிரிக்கெட்டிற்கு மிகவும் பிரபல்யம் வாய்ந்த, அதேபோன்று பெருந்தொகையான கிரிக்கெட் பிரியர்களைக் கொண்ட இடமான மொரட்டுவ நகரில் பிறந்தவரே குஷல் மெண்டிஸ்.

குஷல் மெண்டிசின் தந்தையும், அவரது மிகப்பெரிய இரசிகருமான தினேஷ் மெண்டிஸின் மூலமே அவர் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆர்வமூட்டப்பட்டார். தான் ஆர்வமூட்டப்பட்டமை குறித்து குஷல் கீழ்வருமாறு குறிப்பிட்டார்

எனது தந்தையே எனக்கு கிரிக்கெட் விளையாட ஆர்வமூட்டியவர். எனது நிழல் போன்று என்னை தொடர்பவர். எனது விளையாட்டினை விமர்சிப்பதில் முதலிடம் வகிக்கும் அவர் குறைகளை திருத்துவதிலும் உறுதுணையாக இருப்பார். என்னை சிறுவயதில் இருக்கும்போது மொரட்டுவ கிரிக்கெட் அகடமியில் சேர்த்து, ஜயலத் அபோன்சோவின் மேற்பார்வையின் கீழ் எனக்கு பயிற்சி வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை எனது தந்தை செய்தார். எனது ஆரம்ப பயிற்சியாளரான அபோன்சோ அவர்களே  கிரிக்கெட் விளையாட்டின் ஆரம்பம் என்ன என்பதை எனக்கு கற்பித்தார் என்றார்.

மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில், சிறுவயதில் இருந்தே துடுப்பாட்டத்திற்கு பிரபல்யமான ஒருவராக விளங்கிய குஷல் மெண்டிஸ், ஆரம்பத்தில் இருந்தே  பாடசாலைகளிற்கு இடையிலான போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரராக இருந்ததோடு சவலான பந்து வீச்சாளர்கள் பலரையும் திடுக்கிடச் செய்துமுள்ளார்.

இதன் காரணமாக, குஷல் மெண்டிஸிற்கு தனது 15ஆவது வயதிலேயே தேசிய ரீதியிலான பொறுப்புக்களை ஏற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னரும் தொடர்ச்சியாக தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்ததன் மூலம் கடந்த 2014இல் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கிண்ணத்திற்கு இலங்கை அணியினை தலைமை தாங்கும் பொறுப்பினையும் அவர் பெற்றுக்கொண்டார்.

மெண்டிஸின் தலைமையில் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி

தனக்கு எவ்வாறு தேசிய அணியை தலைமை தாங்க வாய்ப்பு கிட்டியது என்பதனை மெண்டிஸ் இவ்வாறு நினைவு கூர்ந்தார்.

அவுஸ்திரேலியாவில் 2012இல் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கிண்ண தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து 2013இன் ஆரம்பத்தில் இருந்து எப்படியாவது அடுத்த உலக கிண்ணத்தில் வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் கடுமையாக உழைத்தேன். இதனால், 2014இல் ஐக்கிய அரபு இராட்சியத்தில் இடம்பெற்ற உலக கிண்ணத்திற்கு இலங்கை அணியை தலைமை தாங்கும் வாய்ப்பே எனக்கு கிடைத்தது. எனது தாயகத்தை வழிநடாத்தியதனை அனைத்திலும் விட சிறந்த கெளரவமாக நான் கருதுகின்றேன்

Kushal Mendis 03குறித்த உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. எனினும் குஷல் மெண்டிஸ் இத்தொடரில் இலங்கை அணி விளையாடிய முதலாவது போட்டியில் 91 ஓட்டங்களை பெற்று, ஜிம்பாப்வே அணியை வீழ்த்த பெரும் உதவியாக இருந்தார். அத்துடன், இத்தொடரில் மொத்தமாக 167 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்கள் குவித்த ஒரு முன்னணி வீரராகவும் அவர் திகழ்ந்தார்.

திருப்பு முனையான சுற்றுத்தொடர்கள்

2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற இலங்கை இளையோர் அணி மற்றும் தென்னாபிரிக்க இளையோர் அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 170 ஓட்டங்களை குவித்த மென்டிஸ், தனது துடுப்பாட்ட திறமையினை மீண்டும் வெளிக்காட்டி இருந்தார். இதனால், அப்பொழுது மிலிந்த சிறிவர்தன தலைமையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அபிவிருத்தி அணியின் குழாமில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பு மூலம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இடம்பெற்ற மூன்று நாட்கள் கொண்ட மொயின் உத் தவ்லா தொடரில் சிறப்பாக பிரகாசித்தார். இதன் காரணமாகவே குசல் மெண்டிஸுக்கு 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கை தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு முதல் முறையாகக் கிடைத்தது.

இதனை கீழ்க்கண்டவாறு குஷல் குறிப்பிட்டிருந்தார்.

நான் ஒரு சதத்தினையும் (156), இரண்டு அரைச் சதங்களையும் இந்தியாவில் இடம்பெற்ற தொடரில் பெற்றிருந்தேன். எனது இந்த ஆட்டம் காரணமாகவே என்னை மேற்கிந்திய தீவுகள் உடனான தொடரில் அழைத்திருந்தார்கள் என நான் முழுமையாக நம்புகின்றேன். அத்தருணத்தில் வெறும் 20 வயதுடைய நான் இலங்கை அணிக்காக முதல் தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் எதிர்பார்ப்புகளுடன்  இருந்தேன்

முதல்தர கிரிக்கெட்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு….

இவருக்கு தனது கச்சிதமான துடுப்பாட்டத்தின் மூலம் மிக வேகமாக தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்தது. தேசிய அணியில் வாய்ப்பு கிடைப்பதற்கு 2 வருடங்களுக்கு முன்னரே அவர் முதல்தர போட்டிகளில் தடம் பதித்தார். வெறும் 23 முதல்தர போட்டிகளில் விளையாடிய நிலையில், தனது தேசிய அணி பிரவேசத்தை பெற்றமை அவரது திறமைக்கு மற்றொரு சான்றாக அமைந்தது.

23 போட்டிகளிலும், 31.07 என்கிற ஓட்ட சராசரியுடன் 1,200 ஓட்டங்களை மென்டிஸ் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் போட்டிகளிலிருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவது என்பது பலருக்கு சிக்கலாக இருப்பினும் குஷல் மெண்டிஸ் தனது நேர்த்தியான துடுப்பாட்டத்தினால் சர்வதேச போட்டிகளிலும் பெரிய அளவில் அழுத்தம் எதனையும் சந்திக்கவில்லை.

உண்மையில் உள்ளூர் போட்டிகளுக்கும், சர்வதேச போட்டிகளுக்கும் பாரிய வித்தியாசம் இருப்பதாக நான் கருதுகின்றேன். நான் குறைந்த எண்ணிக்கையான முதல்தர போட்டிகளில் மாத்திரம் விளையாடிய காரணத்தில் பெரிய அனுபவம் எதனையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் எனக்கு பெரிய அணிகளை எப்படி கையாள்வது என்பதற்கான உதவிகள் அளிக்கப்பட்டிருந்தது. அதனைவிட நான் விரும்பியபடி அவ்வணிகளில் செயலாற்றுவதற்கான சுதந்திரமும் எனக்கு எப்போதும் தரப்பட்டிருந்தது. இதனால் சிறப்பாக செயற்பட முடிந்தது

மெண்டிஸ், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தனது முதலாவது தேசிய போட்டித்தொடரில், துடுப்பாட்ட வரிசையில் மூன்றாவது இடத்தில் களமிறங்கியிருந்தார். இதனை அடுத்து நியூசிலாந்துடனான தொடரில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடினார்.

இது சரிவராததை தொடர்ந்து அடுத்து இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான தொடரில் மீண்டும் மூன்றாவது இடத்தில் விளையாடும் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி, கடினமான பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு துடுப்பாடினார். இதனால், எதிர்காலத்தில் தனக்கு பொருத்தமான இடம் அதுதான் என்பதனை அவர் உறுதி செய்துகொண்டார்.

என்னை என் பாணியில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் தலைவர், உபதலைவர், முகாமையாளர்கள் என அனைவரும் ஊக்கம் தந்தனர். அடுத்து நான் பந்தை எவ்வாறு பதம் பார்த்து அடிப்பது என்பதிலேயே குறியாக இருந்தேனே தவிர, பெரிய பந்து வீச்சாளர்களான டிம் சவுத்தி, ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவார்ட் ப்ரோட் ஆகியோரின் பெயரினை கண்டு பயம்கொள்ளவில்லைஎன குஷல் மெண்டிஸ் தனது நம்பிக்கையை வார்த்தைகளால் எமக்குத் தெரிவித்தார்.

இதுவரை 28 இரண்டு வகையான (டெஸ்ட்,ஒருநாள்) போட்டிகளில் விளையாடியுள்ள மெண்டிஸ் 9 அரைச் சதங்களையும் ஒரு சதத்தினையும் பெற்றுள்ளதோடு இரண்டு வகையான போட்டிகளிலும் 30 இற்கு மேல் ஓட்ட சராசரியையும் வைத்துள்ளார்.

விக்கெட் காப்பாளராக குஷல் மெண்டிஸ்
விக்கெட் காப்பாளராக குஷல் மெண்டிஸ்

துடுப்பாட்டத்தினை ஆரம்பித்து 20-30 வரையான ஓட்டங்களை பெறுவது எனக்கு இலகுவாக இருக்கும். நான் எப்போதும் ஒரு நீண்ட இன்னிங்சினையே தொடர விரும்புவேன். இதனை தொடர்ந்து 50 ஓட்டங்களை பெற்றவுடன் சந்தோசமாக இருக்கும். ஆனால் அதனை நூறு ஓட்டங்களாக மாற்றுவதில் நான் பலமுறை தோல்வி கண்டுள்ளேன்.” என தனது கடந்த போட்டிகளின் அனுபவங்களை அவர் குறிப்பிட்டார்.

துடுப்பாட்டத்திற்கு துணை கொடுத்த விக்கெட் காப்பு பணி

குஷல் மெண்டிஸ் சிறுவயதிலிருந்தே  விக்கெட் காப்பாளராக செயற்பட்டு வந்தவர். அவர் துடுப்பாட்டத்தில் இவ்வாறு சிறந்த முறையில் பிரகாசிப்பதற்கு விக்கெட் காப்பாளராக இருந்தமை முக்கிய உதவியாக இருந்துள்ளது. எனினும் விக்கெட் காப்பாளருக்குப் பஞ்சம் அற்ற இலங்கை அணியில் தற்பொழுது குஷல் சாதாரண களத்தடுப்பாளராகவே செயற்படுகின்றார். ்

அது குறித்து அவர் குறிப்பிடுகையில், விக்கெட் காப்பாளராக இருக்கும் ஒருவரின் கவனம் எப்போதும் பந்தை நோக்கியே இருக்கும். இது எனது துடுப்பாட்டத்தில் பந்தின் மீது கவனம் செலுத்த உதவியாக இருக்கும். ஆனால், இப்போது ஏனைய களத்தடுப்பு வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.”

மெண்டிசின் துடுப்பாட்ட நுணுக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு துடுப்பாட்ட வீரர் சாதிக்க வேண்டுமெனில் அவர் பலமான அடித்தளம் ஒன்றினை கொண்டிருக்க வேண்டும். அதாவது பந்துகளை எப்போதும் தடுத்து ஆடும் மாறாத  திறன் ஒன்றினையும், பந்து எந்த இடத்தில் பட்டால் சிறந்த பயனைப் பெறலாம் என்ற நுணுக்கத்தினையும் தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே சரிவர புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த கிரகம் போர்ட், குஷல் மெண்டிஸ் குறித்து குறிப்பிடுகையில்,  உலகின் எந்த இடத்திற்கு போனாலும் குஷல அவரின் அந்த அழகிய துடுப்பாட்ட நுணுக்கங்கள் மூலம் சாதிப்பார் என்று உறுதியாக குறிப்பிட்டார்.

இதுவரை மெண்டிஸ் தனக்கு உதவியாக வைத்திருக்கும் துடுப்பாட்ட நுணுக்கங்களே போதுமாக இருப்பினும், இடத்திற்கு ஏற்றாற்போல் சில நிலைமைகளை கருத்திற்கொண்டு அவரது துடுப்பாட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும். இதனை மெண்டிஸே இவ்வாறு ஒப்புக்கொள்கின்றார்.

எனது துடுப்பாட்ட நுணுக்கத்தில் நான் இங்கிலாந்துடனான தொடரில் பெரிய மாற்றங்கள் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. இருப்பினும் பந்து வரும் போது துடுப்பாட்ட மட்டையை கீழாக தூக்கி அடிக்கும் ஒரு சிறிய மாற்றத்தினை மேற்கொண்டிருந்தேன். இது எனக்கு ஸ்வீங் பந்துகளையும் நேர்த்தியான வேகப்பந்து வீச்சுகளையும் சமாளிக்க உதவியிருந்தது.

இன்னும், மதிவ்ஸ் மற்றும் ஷந்திமால் ஆகியோரின் ஆலோசனைப்படி, மிடில் ஸ்டம்பில் இருந்து ஆடாமல் ஓப் ஸ்டம்பில் இருந்து ஆட பணிக்கப்பட்டேன். இதன் காரணமாக எனது துடுப்பாட்ட எல்லைக்கு அப்பால் வரும் பந்துகளை ஆடாமல் இலகுவாக விடமுடியுமாறு இருந்தது

உலகிற்கு மெண்டிசை அறிய வைத்த அவுஸ்திரேலியாவுடனான தொடர்

சவால் மிக்க பந்து வீச்சாளர்களான மிச்சல் ஸ்டார்க், ஜோஸ் ஹெசல்வூட், மிச்சல் மார்ஸ் ஆகியோரை கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சாதிப்பேன் என்று குஷல் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அது போன்றே குறித்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணி தடுமாறிய வேளையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி தனது கன்னி சதத்தினை (176) பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு குஷல் வழிவகுத்திருந்தார். இந்த போட்டியே, ஓரளவு அறியப்பட்டிருந்த குசல் மெண்டிஸை பலரும் திரும்பிப் பார்கும் அளவிற்கு மிகவும் பிரபல்யமாக மாற்றியது எனலாம்.

அத்துடன், குறித்த டெஸ்ட் தொடரில் 49.33 என்கிற ஓட்ட சராசரியுடன் மொத்தமாக 296 ஓட்டங்களினைப்பெற்று  அவுஸ்திரேலிய அணியினை வைட் வாஷ் செய்யவும் தனது  பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

அதன் காரணமாக, பின்னர் இடம்பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்யும் முக்கிய வீரர் என்ற எதிர்பார்ப்பை அவர் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தார்.

முக்கோண ஒருநாள் தொடரின் வெற்றிக்கு வழிவகுத்த குஷல்

ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதிய இத்தொடரின் ஆரம்ப போட்டிகளில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் விதமான ஆட்டத்தினை குசல் மெண்டிஸ் வெளிப்படுத்தவில்லை. எனினும், தொடர்ந்து இடம்பெற்ற போட்டிகளில் தனது சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய மெண்டிஸ் அத்தொடரின் ஆட்ட நாயகனாக தெரிவாகினார்.

2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதைப் பெறும்பொழுது
2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதைப் பெறும்பொழுது

குறிப்பாக, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது போட்டியில் 94 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை இறுதிப்போட்டிக்கு செல்ல வழிநடாத்தியதுடன், இறுதிப்போட்டியில் அரைச்சதம் கடந்து வெற்றியிலக்கினை நெருங்க வழியமைத்து அணிக்கு பெரிய பங்களிப்பை அவர் ஆற்றினார்.

குஷல் மெண்டிஸ் இத்தொடரில் 55.66 என்ற ஓட்ட சராசரியுடன் 167 ஓட்டங்களை இலங்கை அணிக்காக குவித்திருந்தார்.

சிறந்த எதிர்கால கிரிக்கெட் வீரருக்கான விருது

ஏற்கனவே பல விருதுகளை சுவீகரித்த குஷல் மெண்டிஸிற்கு கடந்த வாரம் தனது கிரிக்கெட் வாழ்வின் மறக்க முடியாத ஒரு விருது கிடைத்தது. இலங்கை கிரிக்கெட்டின் மிகப் பெரிய விருது வழங்கும் விழாவான டயலொக் கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் ”2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருது” கிடைத்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த ஆரம்ப காலகட்டத்திலேயே குஷல் இந்த விருதைப் பெற்றமை, தனக்கு சிறந்த கிரிக்கெட் எதிர்காலம் இருக்கின்றது என்பதை காண்பிக்கின்றது.

அதேவேளை, தான் எதிர்காலத்தில் இலங்கை அணிக்கு மிகப்பெரிய அளவில் பங்காற்ற வேண்டும் என்பதையும் இந்த விருது அவருக்கு உணர்த்தியிருக்கும்.

இறுதியாக

தனது நேர்த்தியான, துணிச்சல் மிக்க துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணியைப் பலப்படுத்திய ஓய்வு பெற்ற வீரர்களான மஹேல மற்றும் சங்கக்காரவின் இடத்தினை பூர்த்தி செய்ய தயராகி வருகின்றார் குஷல் மெண்டிஸ்.

இந்நிலையில், தன்னை இந்த அளவிற்கு சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு வீரராக ஆக்குவதற்கு உதவிய அனைவரையும் நினைவு கூர்வதற்கும் அவர்களுக்கு நன்றி கூறுவதற்கும் குஷல் மறக்கவில்லை.

நான் துடுப்பாட்டத்தில் மோசமாக ஆடும் வேளையில், என்னை கஷ்டப்படுத்தும் விதமாகவோ, மோசமாக நடத்தும் விதமாகவோ மற்றையோர் இருப்பதில்லைஎன்னுடன் இருந்த ஏனைய வீரர்கள் எனக்கு எப்போதும் ஆதரவு நல்கியே இருந்துள்ளனர். அதன் காரணமாகவே தற்பொழுது சிறந்த முறையில் விளையாட முடிகின்றது.

எனது பெற்றோர், எனது மாமாமார், அனைவரும் நான் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய நிலைகளில் தொடர்ந்து எனக்குs தன்னம்பிக்கையினை ஊட்டி வந்தனர். என் மீது நம்பிக்கை வைத்த அனைத்து உள்ளங்களிற்கும் நான் உளப்பூர்வமான எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

இளம் வயதிலேயே தனது திறமையின்மூலம் தாயகத்திற்கு வெற்றிகளைத் தேடிக்கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டே தன்னைப்பற்றி கதைக்கவும், தேடவும் வைத்த குஷல் மெண்டிஸ் எதிர்காலத்திலும் சாதித்து, இன்னும் பல வெற்றிகளைப் பெற்று சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என்று Thepapare.com சார்பாக நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.