நீண்ட நாட்களாக முழங்கால் உபாதைக்கு உள்ளாகியிருந்த இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தற்பொழுது பூரண குனமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். எனவே எதிர்வரும் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் அடங்கிய குழாமில் அவர் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை கடந்த மே மாதத்தில் இடம்பெற்ற இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியின்போது கட்டை விரல் உபாதைக்கு உள்ளாகியிருந்த இலங்கை அணியின் துணைத் தலைவர் தினேஷ் ஷந்திமாலும் குனமடைந்துள்ள நிலையில், குறித்த குழாமில் அவரும் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று, இங்கிலாந்துடனான குறித்த தொடரின்போது உபாதைக்குள்ளான மற்றொரு வீரரான வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீரவும் தற்பொழுது குனமடைந்தள்ளார். எனவே, தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டிக்கான குழாமில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளமையினால் சுமார் 6 மாதங்களின் பின்னர் அவர் தேசிய அணியுடன் இணையவுள்ளார்.

இவர்களுக்கு மேலதிகமாக, 24 வயதுடைய இளம் வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய இலங்கை தேசிய அணியில் இணைக்கப்பட்டுள்ளதால் தனது கன்னி சர்வதேச போட்டியில் அவர் விளையாடவுள்ளார்.

BRC கழக வீரரான விகும், அண்மையில் வெளிப்படுத்திய திறமையின் காரணமாக இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார். குறிப்பாக, இறுதியாக இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில் இவர் மொத்தமாக 102 ஓட்டங்களைக் கொடுத்து 7 விகெட்டுக்களைக் கைப்பற்றி தனது சிறந்த பந்து வீச்சுப் பதிவினை மேற்கொண்டிருந்தார். இப்போட்டியின் முதல் இன்னிங்சில் விகும் 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது ஸ்விங் பந்தினால் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் கொடுக்கின்றமை விகும் சஞ்சயவிடமுள்ள சிறப்பம்சமாகும். இதுவரை 17 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார். அதேபோன்று இறுதியாக இடம்பெற்று முடிந்த வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர், தொடரின் சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவாகியிருந்தார்.

இதேவேளை, ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தின்போது இலங்கை அணியில் இடம்பெற்றாத நுவன் பிரதீப்பும் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.  

எனினும், ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடரை முழுமையாக வெற்றி கொண்ட இலங்கைக் குழாமில் இருந்த அசேல குனரத்ன, நிரோஷன் திக்வெல்ல, லக்ஷான் சந்தகன், லஹிரு கமகே மற்றும் கசுன் மதுசங்க ஆகியோரது பெயர் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் குழாமில் இடம்பெறவில்லை.

இதில் அசேல குனரத்ன ஜிம்பாப்வேயுடனான தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைச் சதம் உட்பட மொத்தமாக 205 ஓட்டங்களைக் குவித்தார். அவ்வாறிருந்தும் இவர் தற்போதைய குழாமில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

எனினும் இலங்கை அணியின் இந்தக் குழாம் இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தினால் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டிக்காக இலங்கை அணி எதிர்வரும் 10ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 26ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை குழாம்

அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), தினேஷ் ஷந்திமால் (துணைத் தலைவர்), திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, குஷல் ஜனித் பெரேரா, குஷல் மெண்டிஸ், உபுல் தரங்க, தனஞ்சய டி சில்வா, ரங்கன ஹேரத், தில்ருவன் பெரேரா, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், துஷ்மன்த சமீர, லஹிரு குமார, விகும் சஞ்சய