விறுவிறுப்பான போட்டியில் கண்டி கழகத்திற்கு அதிர்ச்சியளித்தது கடற்படை அணி

276
Navy vs Kandy 1

வெலிசர கடற்படை மைதானத்தில் இடம்பெற்ற டயலொக் ரக்பி லீக்கின் 5ஆம் வாரத்திற்கான போட்டியொன்றில் பிரபல கண்டி விளையாட்டுக் கழக அணியை 37-32 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய கடற்படை அணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

கண்டி கழகத்தின் முன்னணி வீரர் பாசில் மரிஜா தனது உதையின் மூலம் போட்டியை தொடக்கி வைத்தார்.

இராணுவ அணியுடனான போட்டியில் இடம்பெற்றிராத ரிச்சி தர்மபால, நிவங்க பிரசாத் மற்றும் சாலிய ஹந்தபங்கொட ஆகியோர் அணிக்கு திரும்பியிருந்தமை கடற்படையினருக்கு வலு சேர்த்திருந்தது.

இலங்கை அணி வீரர் காஞ்சன ராமநாயக இன்றைய போட்டியில் விளையாடாத போதிலும், மற்றுமொரு முன்னணி வீரரான லவங்க பெரேரா கண்டி அணிக்குத் திரும்பியிருந்தார்.

போட்டியை தமது வழமையான அதிரடியுடன் ஆரம்பித்த கண்டி அணி, இரண்டாவது நிமிடத்திலேயே ட்ரை வைத்து அசத்தியது. தமக்கு கிடைத்த ஸ்க்ரமை சிறப்பாக பயன்படுத்திய கண்டி வீரர்கள், திமித்ரி விஜேதுங்கவின் ஊடாக ட்ரை வைத்தனர். போட்டியின் முதலாவது ‘கன்வர்ஷன்’ உதையை திலின விஜேசிங்க தவறவிட்டார். (கடற்படை அணி 00 – 05 கண்டி கழகம்)

ஆரம்பத்தில் கடற்படை வீரர்கள் சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன் கண்டி வீரர்கள் புத்துணர்ச்சியுடன் ஆக்ரோஷமான விளையாட்டுப் பாணியை வெளிக்காட்டினர்.

கண்டி அணியின் தொடர் தாக்குதலை சிறப்பான முறையில் தடுத்தாடிய கடற்படையணி, புத்திம பிரியரத்னவின் உதவியுடன் எதிர்த்தாக்குதல் தாக்கி அசத்தலான ட்ரை ஒன்றை பெற்றுக்கொண்டது. கம்பங்களுக்கிடையில் ட்ரை வைத்ததால், இலகுவான ‘கன்வர்ஷன்’ உதையை திலின வீரசிங்க புள்ளிகளாக மாற்றினார். (கடற்படை அணி 07 – 05 கண்டி கழகம்)

கண்டி அணியின் முறையற்ற தடுப்பாட்டத்தினால் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கம்பங்களை நோக்கி உதைக்க கடற்படையணி முடிவெடுத்தது. திலின வீரசிங்கவின் உதை கம்பங்களை ஊடறுத்துச் செல்ல, கடற்படை புள்ளி வித்தியாசத்தை ஐந்தாக அதிகரித்தது. (கடற்படை அணி 10 – 05 கண்டி கழகம்)

போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே உபாதை காரணமாக லவங்க பெரேரா ஆடுகளத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு பதிலாக மாற்று வீரராக அர்ஷாட் ஜமால்டீன் களமிறங்கினார்.

களமிறங்கி சொற்ப நேரத்தில் தன்னை நோக்கி வந்த பந்தை ஜமால்டீன் தவறவிட, அதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட கடற்படையணி துரிதமாக ட்ரை கோட்டை நோக்கி முன்னேறியது. சிறப்பான பந்து கைமாற்றல்களின் பின்னர், கடற்படை ஸ்க்ரம் ஹாப் வீரர் ரிச்சி தர்மபால தமது அணி சார்பாக ட்ரை வைத்தார். திலினவின் உதை இம்முறையும் குறி தவறவில்லை. (கடற்படை அணி 17 – 05 கண்டி கழகம்)

கடற்படை அணியின் தடுப்பாட்ட வீரர்கள் விட்ட தவறின் காரணமாக கண்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று வழங்கப்பட்டதுடன், அதனை புள்ளிகளாக மாற்றிய அர்ஷாட் ஜமால்டீன் தனது அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். (கடற்படை அணி 17 – 08 கண்டி கழகம்)

மீண்டும் கவனக்குறைவான தவறொன்றை விட்ட ஜமால்டீன், தனக்கு கிடைத்த பந்தை உதைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ள, உதையை வழிமறித்த சுபுன் பீரிஸ் கடற்படை அணிக்காக மற்றுமொரு ட்ரையை பெற்று கண்டி அணியினருக்கு அதிர்ச்சியளித்தார். இலகுவான உதையை திலின வீரசிங்க வெற்றிகரமாக உதைக்க, புள்ளி வித்தியாசம் மேலும் அதிகரித்தது. (கடற்படை அணி 24 – 08 கண்டி கழகம்)

எனினும், மனம் தளராது போராடிய கண்டி கழகத்தின் அணித்தலைவர் ரொஷான் வீரரத்ன, விவேகமான நகர்வொன்றின் மூலம் ட்ரை வைத்து அணிக்கு நம்பிக்கையளித்தார். சுலபமான ‘கன்வர்ஷன்’ உதையை ஜமால்டீன் குறிதவறாமல் உதைத்தார். (கடற்படை அணி 24 – 15 கண்டி கழகம்)

தனது வேகத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட இலங்கை அணி வீரர் தனுஷ்க ரஞ்சன், அசத்தலான ஓட்டத்தின் பின்னர் ட்ரை கோட்டை கடந்தார். மீண்டும் ஜமால்டீன் வெற்றிகரமாக உதைக்க, புள்ளி வித்தியாசம் இரண்டாக குறைந்ததுடன், அத்துடன் முதல் பாதி நிறைவுக்கு வந்தது. (கடற்படை அணி 24 – 22 கண்டி கழகம்)

முதல் பாதி: கடற்படை அணி 24 – 22 கண்டி கழகம்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் தமக்கு அடுத்தடுத்து கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புக்களை புள்ளிகளாக மாற்றிய கடற்படை அணி, திலின வீரசிங்கவின் உதைகளின் மூலம் ஆறு புள்ளிகளை பெற்றுக் கொண்டது. (கடற்படை அணி 30 – 22 கண்டி கழகம்)

தனது அனுபவத்தையும், விவேகத்தையும், உதைக்கும் திறனையும் சிறப்பாக பயன்படுத்திய பாசில் மரிஜா, லாவகமாக ட்ரை கோட்டை நோக்கி உதைக்க, அதனை துரத்திப் பிடித்த தனுஷ்க ரஞ்சன் மற்றுமொரு அசத்தலான ட்ரை ஒன்றை பெற்றுக் கொடுத்தார். கடினமான உதையை அர்ஷாட் ஜமால்டீன் இலக்கை நோக்கி உதைக்க, போட்டி மேலும் விறுவிறுப்பானது. (கடற்படை அணி 30 – 29 கண்டி கழகம்)

போட்டியில் முன்னிலை பெறும் நோக்கில், கண்டி கழகம் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கம்பங்களை நோக்கி உதைக்க முடிவெடுத்தது. இம்முறையும் ஜமால்டீன் வெற்றிகரமாக உதைக்க கண்டி அணி நீண்ட நேரத்தின் பின்னர் போட்டியில் முன்னிலை பெற்றுக் கொண்டது. (கடற்படை அணி 30 – 32 கண்டி கழகம்)

போட்டியின் இறுதி வினாடிகளில் தமது முழுமூச்சுடனும் போராடிய கடற்படை வீரர்கள், துலஞ்சன விஜேசிங்கவின் மூலமாக ட்ரை வைத்தனர். இலகுவான உதையை திலின வீரசிங்க குறிதவறாது உதைத்தார். (கடற்படை அணி 37 – 32 கண்டி கழகம்)

போட்டி நிறைவடைய சொற்ப நேரமே எஞ்சியிருந்த நிலையில், கண்டி அணியானது கடற்படை அணியின் பாதியினுள் பலத்த அழுத்தத்தை வழங்கியது. எனினும் சிறப்பான தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள் கண்டி அணியின் முன்னேற்றத்தை தடுப்பதில் வெற்றி கண்டனர். இதன்படி, கடற்படை அணி விறுவிறுப்பான போட்டியில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

முழு நேரம்: கடற்படை அணி 37 – 32 கண்டி கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயன்: சுபுன் பீரிஸ்

சுபுன் பீரிஸ் ThePapare.com உடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில், “முதலில் நான் எமது பயிற்றுவிப்பாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். நாம் பலம் மிக்க கண்டி அணியினை எதிர்கொள்வது தொடர்பாக சிறப்பாக திட்டமிட்டிருந்தோம். அதற்கேற்றவகையில் விளையாடியதால் இவ்வெற்றியை பெற்றுக் கொள்ள முடிந்தது” என்றார்.

புள்ளிகளைப் பெற்றோர்

கடற்படை அணி – 37

புத்திம பிரியரத்ன – 1T

ரிச்சி தர்மபால – 1T

துலஞ்சன விஜேசிங்க  – 1T

கயான் சாலிந்த – 1T

திலின வீரசிங்க – 4C 3P

கண்டி கழகம் – 32

திமித்ரி விஜேதுங்க – 1T

ரொஷான் வீரரத்ன – 1T

தனுஷ்க ரஞ்சன் – 2T

அர்ஷாட் ஜமால்டீன் – 3C 2P