டயலொக் ரக்பி லீக் தொடரின் 5ஆம் வாரப் போட்டிகளில் இன்று இடம்பெற்ற மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தில் பொலிஸ் அணியை 31-26 என்ற புள்ளிகள் அடிப்படையில் CR & FC அணி வெற்றிகொண்டது.

இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய கனிஷ்ட ரக்பி அணியில் விளையாடிய ரொவான் பெர்ரி இன்றைய போட்டியில் முதன் முதலாக CR & FC அணி சார்பாக விளையாடினார். இவர் இலங்கை கழக மட்ட போட்டிகளில் அறிமுகமானமை இன்றைய போட்டியின் சிறப்பம்சமாக இருந்தது.

போட்டியின் ஆரம்பத்தில் இருந்து CR & FC அணி சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினாலும், பொலிஸ் அணியே முதலில் புள்ளிகளை பெற்றுக்கொண்டது. பொலிஸ் அணி வீரர் ஜோயல் பெரேரா ரோலிங் மூலமாக முதல் ட்ரை வைத்தார். பின்னர் ராஜித சன்சோனி உதையை தவறவிட்டதால் பொலிஸ் அணி 5 புள்ளிகளால் முன்னிலை பெற்றது. (CR & FC 00 – பொலிஸ் 05)

பொலிஸ் அணியின் ட்ரையை தொடர்ந்து அதிரடியாக செயற்பட்ட CR & FC அணி, சில நிமிடங்களிலேயே முதல் புள்ளியை பெற்றுக்கொண்டது. பின் வரிசை வீரர்களின் உதவியுடன் சிறந்த முறையில் பந்தை பெற்றுக்கொண்ட சஷான், பொலிஸ் அணி வீரர்களை சிறப்பாக கடந்து சென்று ட்ரை வைத்தார். தரிந்த ரத்வத்த உதையை தவறவிட புள்ளிகள் சமனடைந்தன. (CR & FC 05 – பொலிஸ் 05)

பலம் மிக்க வீரரான கவிந்து பெரேரா CR & FC அணி சார்பாக 2ஆவது ட்ரை வைத்து அசத்தினார். 3 வீரர்கள் தம்மை தடுத்த பொழுதும் அவர்களை கடந்து ட்ரை கோட்டை அடைந்தார் கவிந்து. இம்முறை தரிந்த ரத்வத்த உதையை தவறவிடவில்லை. (CR & FC 12- பொலிஸ் 05)

அதன் பின்னரும் தமது அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறவிடாத தரிந்த ரத்வத்த, தனது உதையின் மூலம் மேலும் 3 புள்ளிகளை CR & FC அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார். (CR & FC 15- பொலிஸ் 05)

அதனைத் தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களுக்கு பொலிஸ் அணி CR & FC அணிக்கு பலத்த சவால் கொடுத்தது. ஸ்க்ரம் மற்றும் லைன் அவுட்ஸ் மூலம் பொலிஸ் அணி எதிரணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தது. இதன் மூலம் பொலிஸ் அணி பெனால்டி வாய்ப்பொன்றையும் பெற்றுக்கொண்டது.

பெனால்டி வாய்ப்பின் மூலம் முன்னோக்கி நகர்ந்த அவ்வணி, ஹுகர் நிலை வீரர் ரசித்த சில்வாவின் மூலம் ட்ரை வைத்தது. சன்சோனி வெற்றிகரமாக உதைய, புள்ளியில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டது. (CR & FC 15 – பொலிஸ் 12)

CR & FC அணி, அடுத்தடுத்து தவறுகள் செய்தமையால் பொலிஸ் அணி மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பை பெற்றது. இதன்போது அவ்வணி உதையின்மூலம் 3 புள்ளிகளை பெறாமல் ட்ரை வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. வாய்ப்பை தவறவிடாது ரதீஷ செனவிரத்ன மூலமாக ட்ரை வைத்து மீண்டும் போட்டியில் முன்னிலை அடைந்தது. இதன்போது சன்சோனி உதையை வெற்றிகரமாக உதைத்தார். (CR & FC 15 – பொலிஸ் 19)

முதல் பாதி முடிவடைய சிறிது நேரம் இருக்கையில் CR & FC அணி பானுக நாணயக்கார மூலமாக ட்ரை வைத்து மீண்டும் முன்னிலை அடைந்தது. எனினும் தரிந்த ரத்வத்த மீண்டுமொருமுறை உதையை தவறவிட்டார்.

முதல் பாதி: CR & FC அணி 20 – 19 பொலிஸ் அணி

கடந்த போட்டியில் CR & FC அணி சார்பாக சிறப்பாக விளையாடிய ரத்வத்த இப்போட்டியில் தனது முதல் ட்ரையை, இரண்டாவது பாதியின் முதல் ட்ரையாக வைத்தார். கவிந்து கொஸ்தாவின் உதையை துரத்திச் சென்று பந்தை பெற்ற ரத்வத்த மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தார். எனினும் கடினமான உதையை தவறவிட்டார். (CR & FC 25 – பொலிஸ் 19)

பொலிஸ் அணி இந்த பருவகாலத்தின் தமது சிறந்த போட்டியை இன்று வெளிக்காட்டியது. போட்டியை சிறிதும் விட்டுக்கொடுக்க விரும்பாத அவ்வணி, மற்றுமொரு ட்ரையை வைத்து போட்டியில் மூன்றாவது முறையாக முன்னிலை அடைந்தது. பொலிஸ் அணி வீரர் சூலா சுசந்த, CR & FC அணியிடம் இருந்து பந்தை இன்டெசெப்டின் செய்து பெற்றுக்கொண்டு, 50 மீட்டர் ஓடி சென்று ட்ரை வைத்தார். சன்சோனி இலகுவான உதையை தவறவிடவில்லை. (CR & FC 25 – பொலிஸ் 26)  

இரு அணிகளும் வெற்றியை பெற்றுக்கொள்ள இறுதி சில நிமிடங்களில் கடுமையாக மோதிக்கொண்டன. எனினும் CR & FC அணியின் தரிந்த ரத்வத்த இறுதி நிமிடங்களில் தொடர்ந்து இரண்டு பெனால்டி உதைகளை வெற்றிகரமாக உதைந்து தமது அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.

முழு நேரம்: CR & FC அணி 31 – 26 பொலிஸ் அணி

 புள்ளிகள் பெற்றவர்கள்

CR & FC அணி
ட்ரை – சஷான் மொகமட், கவிந்து   பெரேரா, பானுக நாணயக்கார, தரிந்த ரத்வத்த
கொன்வெர்சன் – தரிந்த ரத்வத்த 1
பெனால்டி – தரிந்த ரத்வத்த 2

பொலிஸ் அணி
ட்ரை – ஜோயல் பெரேரா, ரசித்த சில்வா, ரதீஷ செனவிரத்ன, சூலா சுசந்த
கொன்வெர்சன் – ராஜித சன்சோனி 3  

WATCH REPLAY