டயலொக் றக்பி லீக் 5ஆம் வாரப் போட்டிகளில் CH & FC அணியுடனான போட்டியை 26-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் விமானப்படை அணி வெற்றிபெற்றது.

சிறப்பான காலநிலைக்கு மத்தியில் போட்டி ஆரம்பித்தது. கண்டி அணியை வீழ்த்தி விமானப்படை அணியானது அதிக பலம் பெற்று காணப்பட்டாலும், CH & FC அணியானது  விமானப்படை அணிக்கு சிறந்த சவாலைக் கொடுத்தது. போட்டியின் ஆரம்பத்தில் விமானப்படை அணி சற்று ஆதிக்கம் செலுத்தினாலும் முதல் 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு அணியாலும் புள்ளிகளைப் பெற முடியவில்லை.

விமானப்படை அணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி CH & FC அணியே போட்டியின் முதல் ட்ரையைப் பெற்றுக்கொண்டது. தனது கோட்டைக்குள் விமானப்படை அணி வீரரான ஜனித் சந்திமால் செய்த தவறினால் CH & FC  அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி CH & FC அணியின் வீரர் யோஷித ராஜபக்ஷ ரோலிங் மோல் மூலம் தமது அணி சார்பாக ட்ரை வைத்தார். விஷ்வ தினெத் உதையை வெற்றிகரமாக உதைக்க 07-00 என CH & FC அணி முன்னிலைபெற்றது. (CH & FC 07 – விமானப்படை 00)

தனது முதல் புள்ளியைத் தேடி விமானப்படை அணியானது கடின முயற்சியில் ஈடுபட்டது. இதன் போது அதிர்ஷ்டவசமாக தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் தமது முதல் புள்ளியை விமானப்படை அணியானது பெற்றுக்கொண்டது. விமானப்படை அணியின் கயந்த இத்தமல்கொட  பந்தை உதைத்து விட்டு மறுபடி எடுக்க முயற்சிக்கையில், CH & FC அணி வீரரால் தவறாக தடுக்கப்பட்டமையால் பெனால்டி வாய்ப்பினை பெற்றது. நுவன் பெரேரா சிறப்பாக உதைத்து 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (CH & FC 07 – விமானப்படை 03)

சில நிமிடங்களின் பின்னர் CH & FC அணியானது மீண்டும் ஒரு முறை ட்ரை வைத்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை வைத்து முன்னோக்கி நகர்ந்த CH & FC அணியானது சில கட்டங்களின் பின்னர் கசுன் ஸ்ரீநாத்தின் மூலம் ட்ரை வைத்தது. விஷ்வ  தினெத் உதையை தவறவிட்டார். (CH & FC 12 – விமானப்படை 03)

இரு அணிகளும் சிறப்பாக முன் நோக்கி நகர்ந்த போதும் அதை சாதகமான முறையில் முடித்துக்கொள்ள முடியவில்லை. முதற் பாதி முடிவடைய முன் விமானப்படை அணியானது மேலும் 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. CH & FC அணி வீரர்கள் ஓப் சைட் காணப்பட்டதால் விமானப்படை அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. விமானப்படை வீரர் நுவன் பெரேரா இலகுவாக உதைத்து மேலும் 3 புள்ளிகளை விமானப்படை அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார்.

முதற் பாதி :  CH & FC 12 – விமானப்படை 06

முதற் பாதியில் பின் தள்ளப்பட்டாலும் இரண்டாம் பாதியில் மீண்டெழுந்தது விமானப்படை அணி. இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய விமானப்படை அணியானது ரோலிங் மூலமாக முதல் ட்ரை வைத்தது. ஹுகர் நிலை வீரரான லஹிரு உதயங்க விமானப்படை சார்பாக முதல் ட்ரையை வைத்தார். எனினும் நுவன் பெரேரா உதையை தவறவிட்டதால் CH & FC அணியைவிட 1 புள்ளி பின் தள்ளியே விமானப்படை அணி காணப்பட்டது.  (CH & FC 12 – விமானப்படை 11)

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய விமானப்படை அணியானது இன்னொரு ட்ரையின் மூலம் போட்டியில் முதன் முதலாக முன்னிலை பெற்றது. பந்தை அகலமாக பரிமாறி விளையாடிய விமானப்படை அணியானது விங் நிலை வீரருக்கு பந்தை பரிமாறியது. அவர் உள்நோக்கி பந்தை அமில பண்டாரவிற்கு சிறப்பாக பரிமாறியதன் மூலம் அமில பண்டார ட்ரை வைத்தார். நுவன் பெரேரா இம்முறை உதையை தவறவிடவில்லை. (CH & FC 12 – விமானப்படை 18)

கிடைத்த பெனால்டி வாய்ப்பு ஒன்றின் மூலம் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்து தமது அணியின் முன்னிலையை  நுவன் பெரேரா மேலும் அதிகப்படுத்தினார். (CH & FC 12 – விமானப்படை 21)

போட்டி முடிய முன் விமானப்படை அணியானது மீண்டும் போட்டியில் தனது ஆதிக்கத்தை வெளிக்காட்டியது. கிடைத்த பெனால்டி வாய்ப்பினை வைத்து  ரோலிங் மோல் மூலம் முன்னோக்கி நகர்ந்த விமானப்படை அணியானது ரணில் மதகெதர மூலமாக ட்ரை வைத்து அசத்தியது.

இரண்டாம் பாதியில் CH & FC அணியை எந்த ஒரு புள்ளிகளையும் பெறவிடாது விமானப்படை அணியானது கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

CH & FC அணி வீரர் பிரபாத் ஜயரத்ன அபாயமான முறையில் தடுத்ததிற்காக மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

முழு நேரம் : CH & FC 12 – விமானப்படை 26

Thepapare.com போட்டியின் சிறந்த வீரர் : நுவன் ராஜகருணா

விமானப்படை அணியின் பயிற்றுவிப்பாளர் போட்டியின் பின்னர் நம்மிடம் கருத்து தெரிவிக்கையில், “எமது ஸ்க்ரம் ஹாப் வீரர் தேசிய அணியின் கடமைகளுக்காக சென்றுள்ளதால் எமது அணிக்கு அது பெரும் பாதிப்பாக அமைந்தது. ஸ்க்ரம் ஹாப் நிலையானது மிகவும் முக்கியமான நிலையாகும். அவர் இல்லாததன் பாதிப்பு இன்று நன்றாக விளங்கியது” எனக் கூறினார்.

மேலும் இராணுவ அணியுடனான அடுத்த போட்டி பற்றி வினவியபோது “அடுத்த போட்டிக்கு முன்னர் நாம் சற்று பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது அனைத்து அணிகளும் தர வரிசையில் முதல் 4 இடங்களைப் பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. நாங்களும் தான். எனினும் அடுத்த போட்டி எமது மைதானத்தில் நடைபெறவிருப்பதால் எமது அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

புள்ளிகள் பெற்றோர்

விமானப்படை அணி
ட்ரை – லஹிரு உதயங்க, அமில பண்டார, ரணில் மதகெதர
பெனால்டி – நுவன் பெரேரா 3
கொன்வெர்சன் –  நுவன் பெரேரா

CH & FC
ட்ரை – யோஷித்த ராஜபக்ஷ, காசும் ஸ்ரீநாத்
கொன்வெர்சன்  – விஷ்வ தினெத்