நவம்பர் 3௦ஆம் திகதி (நேற்று) வோட்டர்ஸ்எஜ் உள்ளரங்கில் நடைபெற்ற டயலொக் கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில், இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் 2௦15ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.  

மிகவும் விமர்சையாக இடம்பெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், கடந்த தசாப்தத்தில் தனது ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சுகளால் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு ஜாம்பவானாகத் திகழ்ந்த வசிம் அக்கரம் கெளரவ அதிதியாகக் கழந்துகொண்டிருந்தார்.

துடுப்பாட்ட ஜாம்பவான் குமார் சங்கக்கார மற்றும் சுழல்பந்து வீச்சாளர் ரங்கன ஹெரத்துடனான கடுமையான போட்டிக்கு மத்தியிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் அஞ்செலோ மெதிவ்ஸ் இந்த உயரிய விருதினைப் பெற்றார்.

இதற்கு மேலதிகமாக, 2015ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டியின் சிறந்த சகலதுறை வீரர் மற்றும் டெஸ்ட் போட்டியின் சிறந்த சகலதுறை வீரர் என்பவற்றுக்கான விருதுகளையும் அஞ்செலோ மெதிவ்ஸ் தன்வசப்படுத்திக்கொண்டார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 9௦௦க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுகொண்ட இலங்கை அணியின் துணைத் தலைவர் தினேஷ் ஷந்திமால் தனது கன்னி விருதாக 2015ஆம் அண்டுக்கான சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரருக்கான விருதினைப் பெற்றுக்கொண்டார்.

அதேபோன்று, கடந்த ஆண்டு 1 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழல்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் வருடத்துக்கான சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளருக்கான விருதினை தட்டிச்சென்றார்.

ஓய்வுப் பெற்ற துடுப்பாட்ட ஜாம்பவான் மற்றும் அதிகமான கிரிக்கெட் ரசிகர்களின்  மனதை கொள்ளை கொண்டவரும், உலகக் கிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை விளாசியவருமான குமார் சங்கக்கார, ஒருநாள் போட்டிகளின் சிறந்த மற்றும் கெளரவ துடுப்பாட்ட வீரருக்கான விருதிற்குத் தெரிவானார்.

2015ஆம் வருடத்திற்கான சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த T-20 பந்து வீச்சாளர் என்பவற்றுக்கான விருதுகளை  வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க பெற்றுக்கொண்டார். இவர் 6 T-20 கிரிக்கெட் போட்டிகளில் 6 விக்கெட்டுளை 2.16 என்ற விகிதத்திலும், ஒருநாள் போட்டிகளில் 2 விக்கெட்டுக்களை 35.3 என்ற விகிதத்திலும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த ஆறு வருடங்களாக மக்களின் மனம் கவர்ந்த வீரர் (மக்கள் அபிமான வீரர்) விருதினை பெற்று வந்த குமார் சங்கக்காரவை தோல்வியுறச் செய்து, அண்மையில் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற டில்ஸ்கூப் மன்னன் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் திலக்கரத்ன டில்ஷான் குறித்த விருதினைப் பெற்றுக்கொண்டார்.

T-20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதினையும் அவர் தன்வசப்படுத்திக்கொண்டார்.

தேசிய அணிக்குள் அதிரடியாக இடம் பிடித்து அண்மைக்காலமாக மிகவும் சிறந்த விதத்தில் விளையாடி வரும் இளம் துடுப்பாட்ட வீரர் குஷல் மென்டிஸ் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதினை, கெளரவ அதிதியாக கலந்து விழாவை சிறப்பித்த வசிம் அக்ரமின் கரங்களால் பெற்றுக் கொண்டார்.

மேலும், மகளிர் பிரிவில் சசிகலா சிறிவர்தன ஆண்டுக்கான சிறந்த சகலதுறை வீராங்கனைக்கான விருதினை பெற்றுக்கொண்ட அதே வேளை, ஆண்டுக்கான சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையான சாமரி அத்தபத்துவும் சிறந்த பந்து வீச்சாளராக இனோக்க ஜெயவீரவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இவற்றுக்கு மேலதிகமாக, விசேட விருதுகள் பிரிவில் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளருக்கான விருதினை ரஸல் ஆர்னல்ட் பெற்றுக்கொண்டதோடு, 48 வயதான ருஷிர பல்லியகுரு ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் நடுவராக பெயரிடப்பட்டார்.

தி ஐலன்ட் பத்திரிகையின் விளையாட்டு ஆசிரியர் ரெக்ஸ் க்ளெமெண்டின் ஆண்டுக்கான சர்வதேச விளையாட்டு ஊடகவியலாளருக்கான கெளரவமிக்க விருதினை பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.