ஸ்விங் பந்து வீச்சு ஜாம்பவான் வசிம் அக்ரம் தலைமையில் டிசம்பர் 1ஆம் திகதி பயிற்சிப்பட்டறை

1060
Wasim Akram

கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வசிம் அக்ரம் தலைமையில், டிசம்பர் முதலாம் திகதி கொழும்பு SSC (சிங்கள விளையாட்டு கழகம்) இல் விஷேட பயிற்சிப் பட்டறை ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ திலங்க சுமதிபாலவின் பிரத்தியேக அழைப்பின் பேரில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்விங் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்திய வசிம் அக்ரம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நவம்பர் மாதம் 3௦ஆம் திகதி நடைபெறவுள்ள டயலொக் கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

மேலும், அதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் சபை, கிரிக்கெட் விளையாட்டினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அடுத்து வரும் சில மாதங்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் தலைமையில் முன்னெடுக்கவிருக்கும் பயிற்சி பட்டறைகளுக்கு முதல் வழிகாட்டியாக பயிற்சிகளை வழங்கவிருப்பதோடு, குறிப்பிட்ட இந்தப் பயிற்சி பட்டறைக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தேசிய வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பளர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் கெளரவ திலங்க சுமதிபால, “வியக்கதக்க வகையில் அண்மைக் காலமாக இலங்கை இளம் கிரிக்கெட் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றமையினால் 2௦19ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலக கிண்ணத்தினை கைப்பற்றும் கனவு நனவாகக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. நாங்கள் இதற்காக ஏற்கனவே தொழில்நுட்பம் வசதிகளை உரிய இடங்களுக்கு வழங்கி அடித்தளமிட்டுள்ளோம். எங்கள் கிரிக்கெட் வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற ஜாம்பவான்கள் முலம் தேவையான விலைமதிப்பற்ற கிரிக்கெட் நுண்ணறிவைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று கூறினார்.

19 வருடங்களுக்கும் மேலான வசிம் அக்ரமின் கிரிக்கெட் வாழ்க்கையில், வேகப்பந்து வீச்சில் திருப்புமுனையை ஏற்படுத்தி உலகம் முழுவதும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய விதம் மனதை உறைய வைக்கும் என்று ஒரு எழுத்தாளர் கூறியிருந்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் கெளரவ திலங்க சுமதிபால அவர்கள் “இலங்கை கிரிக்கெட் சபையின் இந்த புதிய முயற்சிக்கு திரு. வசிம் அக்ரம் மனோதிடம் மற்றும் சிறந்த பண்புள்ள வழிகாட்டியாக இருக்கும் அதே நேரத்தில் நாம் மேலும் பல கிரிக்கெட் ஜாம்பவான்களை அழைத்து மேலும் பல பயிற்சிப் பட்டறைகளை எமது கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தவுள்ளோம். இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பிக்கவுள்ள திரு. வசிம் அக்ரம் அவர்களை கெளரவிக்கிறோம்” என்று தெரிவித்தார்.