லசித் மலிங்கவின் அடுத்த கட்டம் என்ன? இலங்கை அணியுடன் இணைந்து கொள்வாரா?

6731

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க கடந்த பல மாதங்களாக உபாதை காரணமாக அணியில் இணைத்துக்கொள்ளப்படாமல் உள்ளார். எனினும் தற்பொழுது அவர் குனமடைந்துள்ளதாக பல செய்திகள் வெளியாகின்றன.

இவ்வாறான ஒரு நிலையில் இலங்கையின் முதல் தர விளையாட்டு இணையதளமான thepapare.com லசித் மலிங்கவுடன் ஒரு பிரத்யேக நேர்காணலை நடத்தியது.

அதில் இருந்து சில விடயங்களை எமது தமிழ் வாசகர்களுக்காக இங்கே பதிவிடுகின்றோம்.

லசித், கடந்த காலங்களில் நீங்கள் உபாதைக்குள்ளாகி இருந்தமை குறித்து முதலில் பேசுவோம்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விலகி இந்த மாதத்தோடு சரியாக ஒரு வருடம் ஆகிறது. இப்போதுதான் ஒரு வருடத்துக்குப் பின்பு ஓட ஆரம்பித்துள்ளேன். இன்னும் சில காலத்தில் மீண்டும் பந்து வீச முடியும். எனவே மீண்டும் கிரிக்கெட் விளையாட நினைக்கின்றேன்.

அதன் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது. எனினும் இன்னும் இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு எப்படியாவது கிரிக்கெட் விளையாடுவதே எனது எதிர்பார்ப்பு. அது, தேசிய அணிக்கா அல்லது எங்கு என்று தெரியாது. ஆனால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடும் ஆசையில் இருக்கிறேன்

தேசிய கிரிக்கெட் ஒப்பந்தத்தினை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கேள்வியுற்றோம். இது குறித்து உங்கள் கருத்து?

ஆம், என்னை தேசிய ஒப்பந்தத்தில் இணைத்துள்ளதாக அறிவித்திருந்தார்கள். உண்மையில் எனக்கு எவ்வளவு தருவார்கள் என்று நான் கேட்கப் போகவில்லை. மாறாக, நான் அந்த நேரத்தில் தேசிய ஒப்பந்தம் ஒன்றினை ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் இருக்கவில்லை.

நான் கடந்த ஒரு வருடமாக நாட்டுக்காக எவ்விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குகொள்ளவில்லை. காலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக நான் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தேன்.

அவ்வாறான ஒரு சூழ்நிலையில் நான் ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டால் அது நான் ஏனைய கிரிக்கெட் வீரர்களுக்கு செய்யும் அநீதியாக இருக்கும் என்று தனிப்பட்ட ரீதியில் உணர்ந்தேன். ஏனெனில், என்னுடைய கிரிக்கெட் வாழ்கை இன்னும் ஒரு வருடமா, ஆறு மாதமா அல்லது இரண்டு வருடமாக இருக்குமா என்று எனக்கே சொல்ல முடியவில்லை..

இவ்வாறான ஒரு நிலையில் தேசிய ஒப்பந்தம் ஒன்றினை பெற்றுக் கொள்வது அநீதியாகும். எனினும் இதற்கு ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு முன்னர் இந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் நிச்சியமாக அது சம்பந்தமாக தீர்மானம் ஒன்றினை எடுத்திருப்பேன்.    

ஏனென்றால், அப்போது எனக்கு கிரிக்கெட் விளையாட இருக்கும் காலம் எட்டு அல்லது பத்து ஆண்டுகளாக இருந்திருக்கும். எனினும் இப்போது எனக்கு அந்தளவுக்கு கிரிக்கெட் விளையாட காலம் இல்லை.

எனவே, ”நாங்கள் உங்களை இந்த ஒப்பந்தத்துக்கு இணைத்துள்ளோம்என்று சொன்னதும் ஒப்பந்தத்தினை எவ்வளவு, எப்படி கொடுப்பீர்கள் என்று நான் கேட்கப் போகவில்லை.

என்னை இணைத்துக் கொண்டதையிட்டு எனக்கு மிகுந்த சந்தோஷம், ஆனால் தனிப்பட்ட ரீதியில் என்னால் அந்த ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நான் செய்வது ஏனைய வீரர்களுக்கு அநீதியாகும் என்று கூறினேன்.

அப்படியானால், லசித் மலிங்க மீண்டும் இலங்கை அணியுடன் இணைந்து களத்தில் விளையாடுவதை பார்ப்பதற்கு எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்?

ஜனவரி மாதம் தென் ஆபிரிக்காவுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் ஆரம்பிக்கின்றன. எனினும், ஒரு வருடமாக ஓடாமல் கூட இருந்து ஒரேயடியாக ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றுவது கடினம்.

அதனால் நான் முதலில் எதிர்பார்ப்பது இரண்டு T20 போட்டிகளில் பங்குபற்றி, அடுத்ததாக அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இரண்டு T20 போட்டிகளில் பங்குபற்றுவதையாகும். பின்னர் ஜூலை மாதத்தில் சம்பியன் கிண்ணம் இருக்கிறது. நான் அதில் பங்குபற்றுவதக்குத் தான் எதிர்பார்த்துள்ளேன்.

எனக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட கூடிய சந்தர்ப்பம் ஓன்று அமையுமாயின் அது சம்பியன் கிண்ண போட்டியாகவே இருக்கக்கூடும். அதேபோன்று, T20 போட்டி ஒன்றினையும் எதிர்வரும் தென் ஆபிரிக்காவுடனான சுற்றுத்தொடரில் எதிர்பார்க்கிறேன்.

இப்பொழுது கிரிக்கெட் விளையாட்டில் அடிக்கடி வீரர்கள் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். கடந்த ஆண்டில் நாங்கள் கண்டோம் புதிய வீரர்கள், விஷேடமாக வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமாக உபாதைகளுக்கு உள்ளானார்கள். அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறிர்கள்?

அது சரி இல்லை, இது சரி இல்லை என்று யாருக்கும் கூற முடியும். ஆனால் எங்கள் நாட்டில் காணப்படுகின்ற காலநிலையை பார்க்கும்பொழுது, இங்கே இருக்கின்ற வெப்ப நிலையோடு எங்களுக்கு பந்து வீசிவிட்டு பழைய நிலைமைக்கு வருவதற்கான காலம் குறைவு. எங்களுக்கு குளிரான இடம் ஓன்று எங்கும் இல்லை.

குளிர் காலநிலையைக் கொண்ட நாடுகளில் உள்ள வீரர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள், உடலளவில் எவ்வளவு உறுதியானவர்கள் என்று எமக்குத் தெரியும். எனினும் அவ்வாறான வாய்ப்பு எமக்கு முழுமையாக இல்லை.

எனினும், நாங்கள் இந்த வெப்பத்தோடு, வியர்வையுடன் ஒரு மணித்தியாலம் பந்து வீசினால் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு மீண்டும் தன்னை சீறான நிலைக்குக் கொண்டுவரக் கூடிய காலம் குறைவு. அதனால்தான் கூடிய உபாதைகள் ஏற்படுகின்றன.

அதேபோன்று, எமது அதிகமான செயற்பாடுகள் கெத்தாராம விளையாட்டரங்கிலேயே இடம்பெறுகின்றன. எனவே, அங்கு நீச்சல் தடாகம் ஒன்றினை அமைத்தால் கிரிக்கெட் பயிற்சிகளுக்கு பின்னர் நீச்சல் தடாகத்தில் தமது உடலைக் குளிர்நிலைக்கு உட்படுத்தி உடல் நிலையை சீராக்கலாம். இதனால் பந்து வீச்சாளர்கள் உபாதைக்கு உள்ளாவதைத் ஓரளவாவது தடுக்கலாம்.

தற்போதைய முத்தரப்புப் போட்டிகளைப் பார்க்கும்பொழுது இலங்கை அணியில் உள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இடையே சிறந்த நிலையில் உள்ள பந்து வீச்சாளர்கள் யார்?

உண்மையில் கடந்த சில போட்டிகளில் புதிய வீரர்கள் யாரும் விளையாடவில்லை. நுவன் குலசேகர, சுரங்க லக்மல் நுவான் பிரதீப் மாத்திரமே விளையாடினர். அவர்கள் அனைவரும் கடந்த பல வருடங்களாக இலங்கை அணிக்கு விளையாடும் வீரர்கள்.

அதனால் புதிய வீரர்கள் அணிக்கு வர வேண்டும் என நான் நினைக்கிறேன். புதிய வீரர்கள் அணிக்கு வரும்போது அனுபவம் மிக்க பழைய வீரர்களும் இருக்க வேண்டும். அப்பொழுதே சந்தர்ப்பத்தைப் பார்த்து அவர்களின் அனுவத்திற்கு ஏற்றப பல விடயங்களை புதியவர்களால் கற்றுக்கொள்ள முடியும். அது எதிர்காலத்திற்கு உதவும்.

தொடர்ச்சியாக ஒரு வீரருக்கே கிரிக்கெட் விளையாட முடியாது.  ஒரு காலம் ஜயசூரிய விளையாடினார். மற்றொரு காலம் மஹேல விளையாடினார். இப்பொழுது வேறு வீரர்கள் விளையாடுகின்றனர்.

அதே போல்தான் இன்னுமொரு நல்ல அணி உருவாகுவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். எனவே உரிய காலத்தில் வாய்ப்புக்கள் வழங்கப்படுவதனால் சிறந்த பயனைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதனால் தங்களுடைய திறமைகளை பொருத்து வீரர்கள் முன்னேறிச் செல்வார்கள் என்று நான் நினைகின்றேன்.

இந்நாட்களில் மலிங்கவை களத்தில் காண முடியாது. தற்பொழுது கிரிக்கெட்டிற்கு மேலதிகமாக எதனை செய்கின்றீர்?

பெரிதாக ஒன்றும் இல்லை. குழந்தைகள் இருவரும் பாடசாலை செல்லுகின்றார்கள். அவர்களுடைய பாடசாலை வேலைகளை செய்து கொண்டிருகின்றேன். இப்பொழுது பயிற்சிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அதற்கு மேலதிகமாக பழைய போட்டிகளை பார்த்து வருகின்றேன். சில சமயம் அணிக்கு திரும்ப சந்தர்ப்பம் கிடைத்தால் நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்காக இவ்வாறு முன்னைய போட்டிகளைப் பார்க்கின்றேன். முடிந்த அளவில் வீட்டில் இருக்கவே விரும்புகின்றேன்.

இறுதியாக,  இலங்கை கிரிக்கெட் இன்னும் எத்தனை வருடங்களில் எங்கு இருக்க வேண்டும் என்று நினைகிறீர்?

நான் சொல்வது ஒன்றே ஒன்றதான். இலங்கையாக இருந்தாலும், வேறு எந்த நாடாக இருந்தாலும், எங்கு இருந்தாலும் ஒரு அணி சர்வதேச தரத்துக்கு செல்வதாயின் அந்த அணிக்குள் சர்வதேச தரத்திலான வீரர்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும்.

அதாவது நாங்கள் 15 வீரர்களை தெரிவு செய்தால் குறைந்த பட்சம் 12 சர்வதேச தர வீரர்களாவது இருக்க வேண்டும். ஓரிரு தேசிய வீரர்கள் இருக்க கூடும்.  சர்வதேச அணி என்பதால் சர்வதேச வீரர்கள் அதிக அளவில் இருக்க வேண்டும்.

உதாரணமாக IPL மற்றும் பிக் பாஷ் போன்ற சர்வதேச மட்டத்திலான போட்டிகளை ஏற்பாடு செய்யும் பொழுது, அந்த போட்டிகளுக்கு சர்வதேச மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தும் விரர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவார்கள்.

எனவே, எமது தேசிய அணி வீரர்களில் அதிகமானவர்கள் சர்வதேச மட்டத்திலான போட்டிகளில் விளையாடும் வீரர்களாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். எனினும் இதனை ஒரு சிலர் பிழையாக புரிந்து கொள்ளலாம்.

ஆனால், அறிவுபூர்வமாக கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும், அறிவுபூர்வமாக கிரிக்கெட் கேட்பவர்களுக்கு நான் சொல்லுவதை புரிந்து கொள்ள முடியும்.

சர்வதேச மட்டத்தில் வெற்றிகளை பெற சர்வதேச தரத்திலான வீரர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அதுதான் நான் காணும் கிரிக்கெட்.  

மலிங்கவுடனான நேர்காணல் – முழு வீடியோ