இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட 17 வயதிற்குட்பட்டோருக்கான காற்பந்து சுற்றுப் போட்டியும், தேசிய பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கால்பந்து சுற்றுப்போட்டியை போன்றே பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்று முடிந்தது.

ThePapare.com இனால் இச்சுற்றுப்போட்டி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆழமான ஆய்வு இது.

நேர ஒழுங்கு

சுற்றுப்போட்டியில் பங்கேற்ற வீரர்களில் பலர் இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் .பொ. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற நிலையில், ஒக்டோபர் மாதத்தில் சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்தியிருப்பதானது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இரண்டு மாத இடைவெளியில் கடினமான அரச தேர்வு மற்றும் அகில இலங்கை சுற்றுப்போட்டி என இரண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர்.

மலியதேவ பெண்கள் வித்தியாலயத்தின் பயிற்றுவிப்பாளர் திரு. சத்யராஜ் இவ்விடயம் தொடர்பாக ThePapare.com இற்கு கருத்து தெரிவிக்கையில்,

இச்சுற்றுத்தொடர் கடந்த வருடம் நடத்தப்படவில்லை. இம்முறை இதனை ஒழுங்கு செய்திருப்பதானது பாராட்டப்பட வேண்டிய விடயம். என்றாலும், சற்று முன்னதாக அதனை ஏற்பாடு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தேர்வு நெருங்கியுள்ள நிலையில் மாணவர்களை பயிற்சிகளுக்கு வரவழைப்பது மிகவும் கடினமாகவுள்ளது. அதற்காக எம்மால் மாணவர்களை குறைகூறவும் இயலாது. ஏனென்றால் சாதாரண தரப் பரீட்சை வாழ்க்கையில் மிக முக்கியமான பரீட்சைகளில் ஒன்றாகும். சுற்றுப்போட்டியை இரண்டாம் தவனையில் நடாத்துவதே உசிதமானது என நான் எண்ணுகிறேன்.” எனத் தெரிவித்தார்.

கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி பின்வரும் கருத்தை வெளியிட்டார்.

இறுதி தினத்தன்று எமது அணி 3 போட்டிகளில் விளையாடியது. இவர்கள் இளைஞர்கள் என்ற வகையில் போட்டிகளுக்கிடையில் போதியளவு ஒய்வு கிடைக்க வேண்டும். இவ்வாறு அடுத்தடுத்து போட்டிகளை ஒழுங்கு செய்வதால் முழுத்திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போவதுடன், அதனால் வீரர்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகுகின்றனர். சுற்றுப்போட்டியை 3 தினங்களில் நடாத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்  என நான் நினைக்கின்றேன்.”

நடுவர்கள்

இத்தொடரில் நடுவர்களால் வழங்கப்பட்ட தவறான தீர்ப்புக்கள் தொடர்பாகவும் எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய தீர்ப்பின் காரணமாக கடுநேரிய புனித செபஸ்டியன் கல்லூரி தொடரிலிருந்து டையில் விளகிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் பிலிப் பெர்னாண்டோ எம்மிடம் கருத்து தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு புனித மரியார் கல்லூரியுடனான போட்டியின் இரண்டாவது பாதியில் எமது அணியின் கோல் காப்பாளருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதுடன் எதிரணிக்கு பெனால்டி வாய்ப்பும் வழங்கப்பட்டது. நடுவரின் விசில் சமிக்ஞையின் முன்னரே பெனால்டி உதைக்கப்பட்டதால் அவர்களுக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் சமிக்ஞையின் முன்னர் உதைந்த வீரருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்படவில்லை.

இம்முறை உதை குறிதவறி வெளியே சென்றதனால் வீரர்கள் ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகையில், நடுவர் எதிரணிக்கு மீண்டுமொரு பெனால்டி வாய்ப்பினை வழங்கினார். நடுவரின் விசில் சமிக்ஞைக்கு முன்னரே எமது கோல் காப்பாளர் தனது எல்லையை விட்டு முன்னே வந்ததனால் இத்தீர்ப்பை வழங்கியதாக நடுவர் தெரிவித்தார். அவ்வாறு எமது  கோல்காப்பாளர் முன்னேறியிருந்தால், நடுவர் அந்நேரமே இதனை தெரியப்படுத்திருக்க வேண்டும். இதனை விடுத்து விசில் சமிக்ஞை எதனையும் வழங்காமல், சிறிது நேரம் கடந்து ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்கையில் கைகளினால் சைகையை வழங்கினார். ஒரு நடுவர் எப்படி இவ்வாறு செயற்பட முடியும்?” என்றார்.

பிபா (FIFA) விதிமுறைகளின்படி விசில் சமிக்ஞையின் முன்னர் வீரரொருவர் உதைப்பாரேயானால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட வேண்டியதில்லை. எனினும் விசில் சமிக்ஞையின் முன்னதாக கோல் காப்பாளர் தனது எல்லையை விட்டு முன்னேறினால் அவ்வாய்ப்பு ரத்து செய்யப்பட்டு கட்டாயமாக மீண்டும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இச்சம்பவத்தை பொறுத்த மட்டில், உடனடியாக சரியான தீர்ப்பை வழங்கத் தவறியதனால் நடுவரின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழும்பியுள்ளன.

பிலிப் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

களத்தில் ஒரு நடுவரே செயலாற்றினார். துணை நடுவர்களாக கழகங்களுக்கு விளையாடும் இரண்டு நைஜீரிய நாட்டு வீரர்களே கடமையிலிருந்தனர். அகில இலங்கை சுற்றுப்போட்டி ஒன்றில் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளத்தினால் துணை நடுவர்களை நியமிக்க இயலாதது ஒரு கேளிக்குரிய விடயமாகும். போதிய வளங்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள் ஏன் இவ்வாறு நேர்த்தியற்ற முறையில் செயற்படுகின்றனர்?” என்றார்.

தகுதியற்றவர்களை நடுவர்களாக கடமையாற்ற நியமித்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும். இலங்கையில் கால்பந்தை வளர்ப்பதற்காக உறுதிபூண்டுள்ள பொறுப்புவாய்ந்த அமைப்பான இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கம் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயலாற்றுவதானது, இலங்கையில் கால்பந்து விளையாட்டு வீழ்ச்சி அடைந்து வருவதனையே எடுத்துக் காட்டுகிறது.

புனித பேதுரு கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் இசுரு பெரேராவும் இச்சம்பவத்தை நினைவுகூறினார்.

நடுவர்களின் தீர்ப்புக்கள் தரமற்றவைகளாகவே இருந்தன. ஒரு மைதானத்தில் இரண்டு ஆபிரிக்க பிரஜைகள் நடுவர்களாக பணியாற்றியதை நான் அவதானித்தேன். சில நடுவர்களுக்கு போட்டி விதிமுறைகளை பற்றி தெளிவில்லை. நடுவரின் தீர்ப்பொன்று தொடர்பாக ஒரு சிக்கல் காணப்பட்டதால் நான் சிலரிடம் விசாரிக்க சென்ற வேளையில், அவ்வாறு விளக்கம் தர முடியாதென்றும் எனக்கு விசாரிக்க உரிமை இல்லை என்றும் சொல்லி நிராகரித்தனர்.”

போட்டிகளின் ஏற்பாடும் திருப்தியற்றதாகவே காணப்பட்டது. அவர்கள் வெறும் 25 நிமிடங்களிற்கே போட்டிகளை நடத்துகின்றனர். அவர்கள் சுற்றுத்தொடரை சிறப்பாக நடத்துவதை விடுத்து, எப்படியாவது தொடரை நிறைவு செய்வதிலேயே குறியாக உள்ளனர். இதனால் மறுபடி இவ்வாறான சுற்றுப்போட்டிகளில் கலந்து கொள்வது தொடர்பாக நாம் யோசிக்க வேண்டியுள்ளது.” என்றார்

நடுவர்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஸாஹிரா கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி,

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கமானது அனுபவமற்ற நடுவர்களை குறைந்த ஊதியத்திற்கு பணிக்கமர்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறான நடுவர் ஒருவர் சிறு தவறொன்றை விட்டாலும் அதனால் அவ்வணியே தொடரை விட்டு நீங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இதுபோன்ற குறுகிய கண்ணோட்டத்துடன் எடுக்கப்படும் தீர்மானங்களானது, இச்சுற்றுத்தொடரிற்கு மட்டுமன்றி இலங்கையில் முழு கால்பந்து சமுகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றார்.

தரவுகள் பேணல்

குறித்த போட்டித் தொடரின்போது போட்டித் தரவுகளை பேணுதலில் கவனயீனமான போக்கு கடைபிடிக்கப்படுவதை புனித செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் காணக்கூடியதாக இருந்தது.

தொடரின் முதல் நாளின் போட்டி முடிவுகளையும் தரவுகளையும் எமது நிருபர் கோரிய போது, அதிகாரிகளினால் அவற்றை வழங்க இயலாத நிலை காணப்பட்டதோடு, மறு தினம் வேறொரு மைதானத்தில் வைத்தே அவற்றை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இதன் காரணமாக அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை பற்றி கேள்விகள் எழுவது சரியானதே.

பிற்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதனை தவிர்க்கவும், சுற்றுத்தொடரின் தரத்தை பாதுகாத்துக்கொள்ளவும் பொறுப்பதிகாரிகள் தரவுகளை சரியான முறையில் பேணுதல் அவசியமாகும்.

ஆடுகளத்தின் தரம்

முன்னர் போன்றே, இத்தொடரிலும் ஆடுகளத்தின் தரம் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. புனித செபஸ்டியன் கல்லூரி மைதானமானது போட்டியொன்றை நடாத்தக் கூடிய நிலைமையில் இல்லாதிருப்பதை வெளிப்படையாகவே பார்க்கக்கூடியதாக இருந்தது. அதேபோன்று, அல்பர்ட் பீரிஸ் மைதானம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரே தருணத்தில் இரண்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

17 வயதிற்குட்பட்டோருக்கான அகில இலங்கை சுற்றுப்போட்டி ஒன்றிலாவது சிறந்த தரத்துடனான, சரியான அளவீடுகளுடனான மைதானங்களை தெரிவு செய்யாதிருப்பது ஏமாற்றத்துக்குரியது. எதிர்வரும் வருடங்களில் இந்நிலைகள் தவிர்க்கப்பட்டு போட்டி ஏற்பாடுகள் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கின்றோம்.

கால்பந்து விளையாட்டை அடுத்த தரத்திற்கு கொண்டுசெல்ல இவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியது ஒரு கட்டாயத் தேவையாக உள்ளது.

இவ்வாறான நிலைமைகளை எவ்வாறு மாற்றலாம்? உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்