சவிந்து பீரிஸின் சிறந்த பந்து வீச்சினால் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

690
U19 Schools Roundup

19 வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளிற்கு இடையிலான கிரிக்கெட் தொடரில், இன்று நிறைவடைந்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மற்றும் மஹிந்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டியில், மஹிந்த கல்லூரியை இன்னிங்ஸ் மற்றும் 73 ஓட்டங்களால் தோற்கடித்து பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி வெற்றியினை சுவைத்துள்ளது.

இன்று ஆரம்பித்த ஏனைய போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட புனித பெனடிக்ட் கல்லூரி, புனித பேதுரு கல்லூரி, புனித தோமியர் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரி அணிகள் முன்னிலையில் உள்ளன.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் மஹிந்த கல்லூரி

நேற்று ஆரம்பமாகிய குழு D இற்கான இந்த போட்டியில், நேற்றைய ஆட்ட நேர முடிவு வரை 3 விக்கெட்டுக்களை இழந்து 54 ஓட்டங்களை பெற்று மஹிந்த கல்லூரி அணி எதிரணியை விட 313 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. இந்நிலையில் போட்டியின் இரண்டாவது நாளான இன்று தங்களது முதலாவது இன்னிங்சினை அவ்வணி தொடர்ந்தது.

எனினும் மோசமாக ஆடிய அவர்கள் 81.2 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றதால் மீண்டும் துடுப்பெடுத்தாடும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அஷன் கந்தம்பி 45 ஓட்டங்களையும், சுமித் ஹன்சிக்க 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் இவர்களை மட்டுப்படுத்த பெரும் உதவியாக இருந்த சவிந்து பீரிஸ் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிக்காக 41 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

அதன் பின்னர் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலதிக 178 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சினை மீண்டும் ஆரம்பித்த மஹிந்த கல்லூரி அணியினர் 33.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, இன்னிங்ஸ் மற்றும் 73 ஓட்டங்களால் தோல்வியை தழுவினர்.

எதிரணியின் பந்து வீச்சில், மீண்டும் சிறப்பாக செயற்பட்ட சவிந்து பீரிஸ் 47 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும், கவ்மல் நாணயக்கார 28 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தனர்.

ஏற்கனவே தமது முதல் இன்னிங்சில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியினர் 8 விக்கெட்டுக்களை இழந்து 367 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தமது முதல் இன்னிங்சை நிறுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்) : 367/8d(59) – விஷ்வ சத்துரங்க 146, திலான் நிமேஷ் 61, திலங்க மதுரங்க 48, அஷன் கந்தம்பி 2/33

மஹிந்த கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்) : 189/10(81.2) – அஷன் கந்தம்பி 45, சுமித் ஹன்சிக்க 43, சவிந்து பீரிஸ் 5/41

மஹிந்த கல்லூரி அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) : 105/10(33.3), சவிந்து பீரிஸ் 4/47,  கவ்மல் நாணயக்கார 3/28

போட்டி முடிவு: பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 73 ஓட்டங்களால் வெற்றி


புனித தோமியர் கல்லூரி எதிர் தர்மசோக கல்லூரி

இன்று புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய குழு C இற்கான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மசோக கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர்.

இதன்படி தங்களது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய தர்மசோக கல்லூரி அணியினர், 31.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். ஏனையோர் பெரிதாக பிரகாசிக்காத நிலையில் கவிஸ் குமார தர்மசோக கல்லூரிக்காக 41 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட டில்லோன் பீரிஸ் 20 ஓட்டங்களிற்கும், பவித் ரத்நாயக்க 36 ஓட்டங்களிற்கும் தலா 4 விக்கெட்டுக்களை புனித தோமியர் கல்லூரி அணி சார்பாக கைப்பற்றி இருந்தனர்.

இதனை தொடர்ந்து தங்களது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி அணியினர் 43.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை குவித்தனர். துடுப்பாட்டத்தில் தனி ஒருவராக இருந்து சிறப்பாக செயற்பட்ட கவிந்து கொடித்துவக்கு அரைச்சதம் கடந்து 72 ஓட்டங்களை புனித தோமியர் கல்லூரி அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் தனது அபாரத்தை காட்டிய தர்மசோக கல்லூரியின் கவிந்து நதீசன் 35 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.

இதனை தொடர்ந்து, இன்றைய முதல் நாளிலேயே தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த தர்மசோக கல்லூரி அணியினர் இன்றைய ஆட்ட நேர முடிவின்போது, 19 ஓவர்களிற்கு இரண்டு விக்கெட்டுக்களை  இழந்து 42 ஓட்டங்களைப்பெற்று புனித தோமியர் கல்லூரியை விட 13 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் காணப்பட்டனர்.

போட்டியின் சுருக்கம்

தர்மசோக கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்): 91/10(31.3) – கவிஷ் குமார 41, டில்லோன் பீரிஸ் 4/20, பவித் ரத்னநாயக்க 4/36

புனித தோமியர் கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்) : 146/10(43.4) – கவிந்து கொடித்துவக்கு 72, கவிந்து நதீசன் 6/35

தர்மசோக கல்லூரி அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) : 42/2(19) – ஹர்சஜித் ருசான் 19*

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்


புனித ஜோசப் கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி

இன்று மலியதேவ கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித ஜோசப் கல்லூரியின் அணித்தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இதன்படி களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி அணியினர் நல்ல ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தி, 77 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றிருந்த போது தங்களது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டனர்.

துடுப்பாட்டத்தில், தனது திறமையினை வெளிப்படுத்திய ரெவான் கெல்லி 91 ஓட்டங்களையும், தினேத் மதுரவெல 40 ஓட்டங்களையும், செவோன் பொன்சேகா 34 ஓட்டங்களையும் புனித ஜோசப் கல்லூரிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் மலியதேவ கல்லூரி அணி சார்பாக கயான் சந்திரசேன 24 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், கவின் பண்டார 22 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து தங்களது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த மலியதேவ கல்லூரி அணியினர் இன்றைய ஆட்ட நேர முடிவின்போது ஒரு விக்கெட்டினை இழந்து 62 ஓட்டங்களை பெற்றிருந்தனர். மலியதேவ அணிக்காக துடுப்பாட்டத்தில் 35 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் தினஜய பிரேமரத்ன நின்றிருந்தார்.

போட்டி சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி அணி: 300/9d(77) – ரேவான் கெல்லி 91, தினேத் மதுரவெல 40, ஷெவோன் பொன்சேக்கா 34, கயான் சந்திரசேன 3/24, கவீன் பண்டார 2/22

மலியதேவ கல்லூரி அணி: 62/1(19) – தினஜய பிரேமரத்ன 35*

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்


ஸாஹிரா கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

இன்று கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் புனித பெனடிக்ட் கல்லூரியும், ஸாஹிரா கல்லூரியும் மோதிக்கொண்டன.  

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பெனடிக்ட்  கல்லூரி அணித்தலைவர் முதலில் ஸாஹிரா கல்லூரி அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதன்படி களமிறங்கிய ஸாஹிரா கல்லூரி அணியினர் 47.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை பெற்றனர். துடுப்பாட்டத்தில் ஸாஹிரா கல்லூரி அணி சார்பாக அதிகபட்சமாக சஜித் சமீர 39 ஓட்டங்களையும், முஹம்மட் நஜாத் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் புனித பெனடிக்ட் கல்லூரி அணி சார்பாக கவீஸ் ஜயதிலக்க 34 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும், மஹேஸ் தீக்ஷன 34 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர்.

இதன்பின்னர், தங்களது முதலாது இன்னிங்சினை ஆரம்பித்த புனித பெனடிக்ட் கல்லூரி அணியினர், இன்றைய ஆட்ட நேர முடிவின்போது 39.1 ஓவர்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளனர். துடுப்பாட்டத்தில் அஷன் சில்வா 26 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்திருந்தார்.

பந்து வீச்சில், ஸாஹிரா கல்லூரி அணி சார்பாக மொஹம்மட் நஜாஷ் 15 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார்.

போட்டி சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி அணி: 136/10(47.5) சஜித் சமீர 39, முஹம்மட் நஜாத் 29, கவீஷ் ஐயத்திலக்க 4/34, மஹேஸ் தீக்ஷன 2/34

புனித பெனடிக்ட் கல்லூரி அணி: 102/5(39.1)அஷன் சில்வா 26, முஹம்மட் நஜாஷ் 2/15

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்


புனித பேதுரு கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

குழு A இற்கான சிங்கர் கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டியில், புனித பேதுரு கல்லூரியும் நாலந்த கல்லூரியும் மோதியிருந்தன.

புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நாலந்த கல்லூரி அணித்தலைவர் முதலில், புனித பேதுரு கல்லூரியை துடுப்பெடுத்தாடுமாறு நிர்ப்பந்தித்தார். இதன்படி, முதலாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி அணியினர் 38 ஓவர்களிற்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 139  ஓட்டங்களை குவித்தனர்.

துடுப்பாட்டத்தில், சந்துஷ் குணத்திலக்க 48 ஓட்டங்களை அவ்வணிக்காக பெற்றுக்கொடுத்து அரைச்சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் சேர்த்து மனேல்க டி சில்வா 38 ஓட்டங்களை புனித பேதுரு கல்லூரி அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட கலன பெரேரா 44 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களையும், உமேக்ஷ தில்சான் 29 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும் நாலந்த கல்லூரி அணிக்காக கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து  தங்களது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த நாலந்த கல்லூரி அணியினர் இன்றைய ஆட்ட நேர முடிவின்போது 52 ஓவர்களிற்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்று, புனித பேதுரு கல்லூரி அணியை விட 21 ஓட்டங்கள் பின்தங்கி காணப்பட்டனர்.

துடுப்பாட்டத்தில், நாலந்த கல்லூரி அணிசார்பாக அதிக பட்சமாக  சுஹங்க விஜயவர்தன 47 ஓட்டங்களையும், லக்சித்த ரசஞ்சன 27  ஓட்டங்களையும் பெற்றதோடு, பந்து வீச்சில் புனித பேதுரு கல்லூரி அணி சார்பாக சச்சின் சில்வா 16 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார்.

போட்டி சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி அணி: 139/10(38), சந்துஷ் குணத்திலக்க 48, மனேல்க டி சில்வா 38, கலான பெரேரா 5/44, உமேக்ச தில்ஷான் 4/29

நாலந்த கல்லூரி அணி: 118/7(52), சுஹங்க விஜயவர்த்தன 47, லக்சித ராசஞ்சன 27, சச்சின் சில்வாக 3/16

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்