கொழும்பு ஒன்றிணைக்கப்பட்ட பாடசாலைகள் அணி மற்றும் கண்டி ஒன்றிணைக்கப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான வருடாந்த ரக்பி போட்டியில் இம்முறை கொழும்பு அணி அபாரமாக வெற்றிகொண்டுள்ளது.

கொழும்பு ஹெவலொக் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி, நடைபெற இருக்கும் ஆசிய கனிஷ்ட ரக்பி தொடரிற்கான இலங்கை அணியை தெரிவு செய்யும் போட்டியாகவும் அமைந்தது. இப்போட்டியில் அபாரமாக ஆடிய கொழும்பு ஒன்றிணைக்கப்பட்ட பாடசாலைகள் அணி 72 புள்ளிகளை பெற கண்டி அணி வெறுமனே 11 புள்ளிகளை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

போட்டியானது நான்கு கால்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு கால் பகுதி 20 நிமிடங்களை கொண்டு நடாத்தப்பட்டது. இரண்டு அணிகளிலும், நடைப்பெற்று முடிந்த பாடசாலை மட்ட போட்டிகளில் ஜொலித்த சிறந்த 30 வீரர்களைக் கொண்டிருந்தமையே இதற்கு காரணமாகும்.

கண்டி அணியானது தனது முதல் புள்ளியை 25 மீட்டர் பெனால்டி உதையின் மூலம் பெற்றுக்கொண்டது. பாடசாலை மட்டத்தில் சிறந்த வீரராக கருதப்பட்ட கடுகஸ்தொட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் மாணவனான சாமுவேல் மதுவந்த கண்டி அணி சார்பாக ஆரம்பத்திலேயே 3 புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார்.

எனினும் உடனடியாக இதற்கு பதிலடியாக கொழும்பு அணி ரோயல் கல்லூரி அணித் தலைவர் நிகில குணதீர மூலம் முதல் ட்ரை வைத்து போட்டியில் முன்னிலை அடைந்தது.  

மீண்டும் தனது திறமையை வெளிக்காட்டிய சாமுவேல் மதுவந்த 45 மீட்டர் பெனால்டி உதையை சரியாக கம்பங்களின் நடுவே உதைத்து கண்டி அணி சார்பாக மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். ஆனால் அந்த நிமிடத்திலிருந்து கொழும்பு அணியே போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது.

முதல் கால் பகுதி முடிவதற்கு முன்னர் நவீன் ஹெனகண்கணமகே கொழும்பு அணி சார்பாக ட்ரை வைத்ததன் மூலம் முதல் காலானது 12-06 என கொழும்பு அணி வசம் இருந்தது.

இரண்டாவது காலில் கொழும்பு அணி சதுர செனவிரத்னவின் அதிக பங்களிப்புடன் மேலும் நான்கு ட்ரைகளை வைத்து ஆதிக்கம் செலுத்தியது. அஸ்வந்த பெரேரா நான்கு உத்திகளில் இரண்டு உத்திகளை சரியாக உதைந்ததன் மூலம் கொழும்பு அணி 36-06 என தனது புள்ளிகளை அதிகரித்துக்கொண்டது.

மூன்றாவது காலிலும் கொழும்பு அணியே அதிக ஆதிக்கம் செலுத்தியது. கிட்ட தட்ட 90% நேரமும் கொழும்பு அணியிடமே பந்து காணப்பட்டது. கொழும்பு அணி 5 பெனால்டிகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பெற்றதன் பின்னர், கண்டி அணி இறுதியாக ட்ரை ஒன்றை வைத்து 5 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. 3ஆவது காலின் முடிவில் கொழும்பு அணி 43-11 என முன்னிலையில் காணப்பட்டது.

4ஆவது காலில், தெரிவு செய்பவர்களின் முடிவிற்கு அமைய இரண்டு அணி சார்பிலும்   சிறந்த 15 வீரர்கள் களமிறங்கினர். இதன்படி கொழும்பு அணி சார்பாக விளையாடிய நவீன் ஹெனகண்கணமகே, குஷான் இந்துனில் மற்றும் ரொமேஷ் பிரியங்கர ஆகியோர் ஒன்றிணைந்து கொழும்பு அணி சார்பாக ட்ரை வைத்தனர். மேலும் குஷான் இந்துனில், சந்தேஷ் ஜெயவிக்ரம, நிரோஷ் உதயங்க ஆகியோரும் கொழும்பு அணி சார்பாக ட்ரை வைக்க, கண்டி அணி பரிதாப நிலையை அடைந்தது.

வெஸ்லி அணி வீரர்களான சயான் சபா மற்றும் அவந்த லீ ஆகியோர் இணைந்து கொழும்பு அணி சார்பாக இறுதி இரண்டு ட்ரைகளை வைக்க, கொழும்பு அணி 72 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. கண்டி அணியினால் 11 புள்ளிகளை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இப்போட்டியில் கண்டி அணி மிக மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியது. கண்டி அணி சார்பாக சாமுவேல் மதுவந்த மட்டுமே சிறப்பாக விளையாடினார் எனக் கூற முடியும்.  கொழும்பு அணி சகல துறைகளிலும் அசத்தி பந்தை போட்டியில் நீண்ட நேரத்திற்கு தம்மிடம் வைத்துக்கொண்டமை கண்டி அணிக்கு பலவீனமாக அமைந்தது.

சிறந்த ஒழுங்கமைப்பு, திட்டம் மற்றும் பல திறமைகளுடனும் காணப்பட்ட கொழும்பு அணி போட்டியில் இலகுவான வெற்றியை பெற்றது எனலாம்.

இப்போட்டி எவ்வாறு முடிவடைந்தாலும், டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கனிஷ்ட ஆசிய ரக்பி போட்டிகளுக்கான இலங்கை அணியில் இடம்பெற போகும் அந்த வீரர்கள் யார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

போட்டியியை மீண்டும் பார்வையிட