Monday 7 November 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (19)

மெளனம் கலைகிறது (4)


நித்தியகீர்த்தியின் வாக்குமூலமும் ’அந்த’ நபரும்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்விழா 2001 ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகின்றது. அப்பொழுது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இருக்கவில்லை.

சங்கம் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

சங்கத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் பெரும்பாலும் நல்லைக்குமரன் குமாரசாமி அவர்களின் வீட்டில் நடந்தன. இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டபோது அங்கு முருகபூபதி, கே.எஸ்.சுதாகர், அருண் விஜயராணி, சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அல்லமதேவன், மாலதி, கனகமணி, சிசு நாகேந்திரன் என்பவர்கள் அங்கு இருந்ததாக ஞாபகம்.

சங்கத்தை ஆரம்பிக்கும் பொழுது, அதன் யாப்பு விதிகளை அமைத்தவர் கூட்டத்தில் பின்வருமாறு சொன்னார்.

“ஒரு குறிப்பிட்ட நபரை, சங்கத்திற்குள் எக்காலத்திலும் நாம் அனுமதிக்க முடியாது. மீறி வந்தால் நான் போய் விடுவேன்.”

இதற்கு அங்கு ஒருவரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. மெளனம் சம்மதம் என்பதாயிற்று.

ஆனால் அதன்பின்னர் முருகபூபதிக்கும் ’நல்லைக்குமரன்’ குமாரசாமிக்கும்  ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளினால் குமாரசாமி சங்கத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

அதன் பிற்பாடு முருகபூபதி நடேசனை சங்கத்திற்குள் கொண்டுவர முயற்சி செய்தார். ’அவர்’ சங்கத்திற்குள் நுழைந்த சம்பவம் ஒரு சுவையான சம்பவம்.

அந்த நேரத்தில் நித்தியகீர்த்தியையும் சங்கதிற்குள் சேர்ப்பதற்கு முருகபூபதி விரும்பினார். நித்தியகீர்த்தியிடம் தொடர்பு கொண்டார். நடேசன் சங்கத்திற்குள் இருப்பதால் தான் வரப்போவதில்லை என அவர் மறுத்துவிட்டார். நடேசன் சங்கத்திற்குள் உறுப்பினராக இல்லை என்று சொன்னார் முருகபூபதி. அப்படியென்றால் தான் சங்கத்தில் உறுப்பினர் ஆகின்றேன் என்றார் நித்தியகீர்த்தி.

ஒருநாள் காலை (2008 ஆம் ஆண்டு) விண்ணப்பப்படிவங்களை எல்லாம் தூக்கிக்கொண்டு நித்தியகீர்த்தியின் வீட்டிற்குச் சென்றார் முருகபூபதி. அப்போது நித்தியகீர்த்தி வளவின் பின்னால் புல்லு வெட்டிக் கொண்டிருந்தார். அவருடன் இலக்கியம் பகிர்ந்து, சங்கத்தின் உறுப்பினராக சேர்த்துக் கொண்டார். நித்தியகீர்த்தியைச் சேர்த்த கையுடன், அப்படியே கிழம்பி நடேசனின் வீட்டிற்குச் சென்றார். அவருடனும் இலக்கிய பகிர்ந்து, அவரையும் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டார். ஒரே நாளில் இருவரையும் சேர்த்துக் கொண்டார்.

முருகபூபதி அவர்கள் என்றுமே வாக்குத் தவறமாட்டார்.

நித்தியகீர்த்தியை உறுப்பினராகச் சேர்க்கும்போது, நடேசன் உறுப்பினராக இல்லை என்பதை இங்கு நான் சாட்சியாகப் பதிவு செய்கின்றேன். அப்போது நான் சங்கத்தின் பொருளாளராக இருந்தேன்.

விடயம் அம்பலமானது – 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த எழுத்தாளர்விழாவின் போதுதான். அந்த விழாவிற்கு தெளிவத்தை ஜோசப் இலங்கையில் இருந்து வந்திருந்தார். இந்தியாவிலிருந்து ‘உதயம்’ பத்திரிகை நடத்திய விழாவிற்காக தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த ஜெயமோகன் பார்வையாளராகக் கலந்து கொண்டார்.

த.நித்தியகீர்த்தி தலைமையில், "இலங்கையில் மலையக இலக்கிய வளர்ச்சி - புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஈழத்தவர் பார்வை" என்ற பொருளில் தெளிவத்தை.ஜோசப் அவர்கள் பேசினார்.

இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த திருமதி லலிதா.நடராஜா அவர்கள் நூல், இதழ் விமர்சன அரங்கிற்குத் தலைமை தாங்கினார். இதில் டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த ஜீவகுமாரன் எழுதிய 'மக்கள்... மக்களால்... மக்களுக்காக' என்ற நாவலை டொக்டர் நடேசன் விமர்சனம் செய்தார்.

நடேசன் பேச எழுந்ததும், தனது சீலைப்பையைத் தூக்கி தோளில் போட்டபடி நித்தியகீர்த்தி கூட்டத்தில் இருந்து வெளியேறுவதை நான் அவதானித்தேன். நடேசனின் உரை முடிந்ததும் மீண்டும் உள்ளே வந்து அமர்ந்து கொண்டார்.

சில மாதங்களின் (04.04.2009) பின்னால், சங்க உறுப்பினராகக இருப்பதில் இருந்து விலகிக் கொள்வதாக நித்தியகீர்த்தியிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் அவர்,

“சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியானதொரு செயற்குழுவில் என்னைச் சேருமாறு நீங்கள் கேட்ட போது ஈழத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் துணை போகும், ஒருவர் என்று நான் கருதுபவர, உறுப்பினராக இருக்கையில் அவரோடு நானும் கைகோர்த்து நிற்கமாட்டேன் என்று தெளிவுடன் கூறியிருந்தேன்.

அவர் நடப்பாண்டின் செயற்குழுவின் உறுப்பினராக இருப்பதை கடந்த செயற்குழு கூட்டத்திலேயே தெரிந்து கொண்டேன். நான் கலந்து கொள்ளாத கூட்டத்திலேயே செயற்குழுவின் உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டேன்.  அதில் வேறு யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வியைக் கேட்காதது என் தவறே.  நான் வருகை தந்த மூன்று செயற்குழு கூட்டத்திலும் அந்த நபர் வரவு தரவில்லை. அதனால் அவரும் செயற்குழுவில் இருக்கின்றார் என்ற விடயம் எனக்குத் தெரியாமல் போயிற்று. தினந்தினம் நடந்து கொண்டிருக்கும் மனித அவலத்திற்குத் துணை போகும் ஒருவரோடு சேர்ந்து பணியாற்றவோ, அவர்களது மறைமுக நடவடிக்கைகளுக்குத் தெரிந்தோ தெரியாமலோ துணை போகவோ நான் தயாரில்லை.”                                 

எனக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் தெ.நித்தியகீர்த்தி ‘தொப்புள்கொடி உறவு’ என்று ஒரு நாவல் எழுதினார். அதன் வெளியீட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். விழா நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு எனக்கு ரெலிபோன் செய்தார். அதிகம் என்னுடன் பழக்கம் இல்லை. எங்காவது சந்தித்தால் கதைப்பார். அப்போது ‘ஞானம்’ சஞ்சிகையில் வந்த எனது ‘தப்பிப்பிழைத்தல்’ என்ற சிறுகதை பற்றியும் தனது நாவல் பற்றியும் கதைத்தார்.
“நீங்கள் சங்கத்திற்குள் ஒருவரை அனுமதித்துவிட்டீர்கள். இனி சங்கம் நாசமாகப் போவது உறுதி. சங்கத்தைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

தனது நாவல் வெளியீட்டுவிழாவிற்கு முதல்நாள் (15 oct 2009) இறந்து போனார்.

“எங்களால் எங்கள் சங்கத்தைக் காப்பாற்ற முடியவில்லை” என்று மிகவும் மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்.







No comments:

Post a Comment