தர்மராஜ கிரிக்கெட் வீரரின் நேர்மையை பாராட்டிய ஸாஹிரா கல்லூரி

1198
Zahirians’ applaud Rajan Cricketer for sporting gesture

கனவான்களின் விளையாட்டான கிரிக்கெட்டில் இன்றைய சர்வேதேச போட்டிகளில் கூட நேர்மைப் பண்பு மற்றும் சிறந்த விழுமியங்களை காண்பது அரிதாகிவிட்ட நிலையில், கொழும்பு ஸாஹிரா கல்லூரி மற்றும் கண்டி தர்மராஜ கல்லூரிகளுக்கிடையில் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், வீரர் ஒருவரின் நேர்மையான மனப்பாங்கு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

குறித்த போட்டியில் ஸாஹிரா கல்லூரி முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்ட 204 ஓட்டங்களை துரத்திப் பிடிப்பதற்காக களமிறங்கிய தர்மராஜ கல்லூரி 199 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக 5 ஓட்டங்களே தேவையான நிலையில் ருக்மல் திசாநாயக்க 4 ஓட்டங்களுடன் களத்திலிருந்தார். இந்நிலையில் அவரது மட்டையை உரசிச் சென்ற பந்தை விக்கெட் காப்பாளர் பிடியெடுத்த போதிலும், போட்டி நடுவர் அதனை ஆட்டமிழப்பு இல்லை என தீர்ப்பளித்தார்.

எனினும் யாரும் எதிர்பார்க்காதவாறு ருக்மல் திசாநாயக்க ஓய்வறை நோக்கி நடக்கத் தொடங்கினார். போட்டியை பார்வையிட வருகை தந்திருந்த அனைவரையும் வியப்புக்குள்ளாக்கிய நிலையில், அணியின் வெற்றியையும், வெற்றியினால் கிட்டும் புகழையும் விட நேர்மையுடன் போட்டியிடுவதனை உயர்வாகக் கருதி அவர் ஆடுகளத்தை விட்டு  வெளியேறத் தொடங்கினார்.

அவரின் நேர்மைக் குணத்தையும் தியாக மனப்பான்மையையும் கண்டு வியந்த அனைத்து பார்வையாளர்களும் எழுந்து நின்று பலத்த கரகோஷத்துடன் தமது மரியாதையையும் மகிழ்ச்சியையும் அவருக்கு வெளிக்காட்டினர்.

ஸாஹிரா கல்லூரி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. பந்து வீச்சில் தனது திறமையை வெளிக்காட்டிய ருக்மல், 83 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்ட 4 விக்கெட்களுடன் மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

போட்டி நிறைவடைந்ததன் பின்னர், ஸாஹிரா கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கார், கல்லூரி நிர்வாகக் குழு மற்றும் கிரிக்கெட் செயற்குழு அங்கத்தவர்கள் இரு அணிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். ஸாஹிரா கல்லூரியின் பழைய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் சார்பில் பாடசாலை அதிபர் ரிஸ்வி மரிக்கார், ருக்மல் திசாநாயக்கவிற்கு சிறப்பு விருதொன்றை வழங்கி கௌரவித்தார்.

கல்லூரியின் பழைய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் மசார் ஸுஹைர் ThePapare.com இற்கு இந்த சம்பவம் தொடர்பில் வழங்கிய பேட்டியில், “கிரிக்கெட்டானது வீரர்களுக்கு ஒரு வாழ்க்கை முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து வீரர்களும் இலங்கை அணி சார்பாக விளையாடாத போதிலும், கிரிக்கெட் விளையாட்டினூடாக பெறப்படும் விழுமியங்கள், மரபுகள் மற்றும் படிப்பினைகள் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரும் சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க உதவியாக அமைகின்றன.

அதன் காரணமாகவே நாம் வீரர்களிடையே வெற்றியை மட்டும் நோக்காகக் கொண்டு விளையாடாது, நேர்மையுடனும் எதிராணியினருக்கு மதிப்பளித்தும் விளையாட ஊக்குவிக்கின்றோம்எனத் தெரிவித்தார்.

ருக்மல் திசாநாயக்காவின் தன்னலமற்ற முடிவினால் ஸாஹிரா கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றிக்கான புள்ளிகளை சுவீகரித்தது.  இளம் வீரரொருவரின் இச்செயல் கிரிக்கெட் விளையாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தை  எதிர்வுகூறுவதாக காணப்படுகின்றது. இவ்வீரரையும் ஏனைய இளம் வீரர்களையும் ஊக்குவிக்கும் முகமாக ஸாஹிரா கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்ட இத்தீர்மானம் பாராட்டத்தக்கதாகும்.

போட்டியின் வெற்றியாளர் யாரென்பது சில வருடங்களில் மறக்கப்படக் கூடும். ஆயினும், ருக்மல் திசாநாயக்க எனும் இளம் வீரரின் நேர்மை மற்றும் தைரியம், ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பது நிச்சயம்.