மலேசியாவில் நடைபெறவுள்ள ஒற்றுமைக் கிண்ண கால்பந்து தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை தேசிய கால்பந்து அணி வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு பதிலாக இலங்கை கால்பந்து சம்மேளனம், அணிக்கு புதிதாக 5 வீரர்களை தெரிவுசெய்துள்ளது.

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் ஒற்றுமைக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி  மலேசியாவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்இலங்கை அணியில் இவ்வாறான ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்புகம்போடியாவுடனான நட்பு ரீதியிலான போட்டிக்கான இலங்கை தேசிய அணியில் உள்வாங்கப்பட்டிருந்த திலீப் பீரிஸ்அபாம் அக்ரம் மற்றும் ஞானரூபன் வினோத் ஆகிய வீரர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளமையினால், அவர்கள் தேசிய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு பதினொருவர் அணிக்கு எதிராக இடம்பெற்ற பயிற்சிப் போட்டியின்போது, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதியுற்ற  ஞானரூபன் வினோத் கம்போடிய சுற்றுப்பயணத்துக்கான அணியில் இணைந்துகொள்ளவில்லை. அவர் இன்னும் முழுமையான உடல் தகுதியை பெறாமையினால் தொடர்ந்து அவருக்கு அணியில் இடம் இல்லாமல் உள்ளது.

215ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றிருந்த திலீப் பீரிஸ் கம்போடியாவில் இடம்பெற்ற பயிற்சியின்போதும், அபாம் அக்ரம் கம்போடிய அணியுடனான போட்டியின்போதும் காயத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், இலங்கை அணியின் முகாமையாளர் ரமீஸ்  ThePapare.com இற்கு பிரத்யேகமாக கருத்து தெரிவிக்கையில், நாம் அபாம் அக்ரம் மற்றும் திலிப் ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதன் அறிக்கைகள் அடிப்படையில்திலிப் நிச்சயமாக அவரது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலையிலும், அபாம் அக்ரமுக்கு மேலும் சில சோதனைகள் செய்ய வேண்டியுமுள்ளது என்று தெரிவித்தார்.

அதேவேளை, காயம் காரணமாக கம்போடியாவுடனான போட்டியின்போது அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த இளம் வீரரும் கோல் காப்பாளருமான சுபுன் கவீஷ் பெர்னாண்டோ உடல் தகுதி பெற்றுள்ளமையினால் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.

ரோஷன் அப்புஹாமிஅபீல் மொஹமட்மதுஷான் டி சில்வாசுந்தராஜ் நிரேஷ் மற்றும் சஜித் குமார ஆகியோர் அணிக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதில், அபீல் மொஹமட் மற்றும் சுந்தராஜ் நிரேஷ் ஆகியோர் முறையே கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் சோண்டர்ஸ் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதேவேளை, ரோஷான் அப்புஹாமிமதுஷான் டி சில்வா மற்றும் சஜித் குமார ஆகியோர் இராணுவப்படை கழகத்துக்காக விளையாடும் வீரர்களாவர்.

ரெனௌன் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மொஹமட் உஸ்மான், தேசிய அணியோடு இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டாலும், இலங்கை குழாமிக்கு அவர் இணைக்கப்படுவாறா என்ற கேள்வி உள்ளது.  

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் டட்லி ஸ்டீன்வோல் ThePapare.com இடம் கருத்து தெரிவித்தபோது, ”கம்போடியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, போட்டியை பற்றி ஆய்வு செய்தபோது, அணியின் இடது பக்கம் பலவீனமாக இருப்பதை கண்டோம். அதனால்தான்மதுஷான் டி சில்வா மற்றும் சஜித் குமார ஆகியோரை அணிக்குள் உள்வாங்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.  

இலங்கை இராணுவப்படை அணிக்கு தலைமை தாங்கும் மதுஷான் டி சில்வா இந்த பருவகால போட்டிகளில் அதிரடியாக கோல்களை அடித்த ஒருவர். குறிப்பாக, இராணுவப்படை அணி FA கிண்ணத்தை வெல்லுவதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

அவருக்கு அடுத்த படியாக, இடது பக்க பின்கள வீரராக விளையாடிய சஜித் குமார, பின்னர் ஸ்டிரைக்கராக முன்களத்தில் சிறப்பாக விளையாடுகிறார்.

சஜித் குமாரவைப் போன்றே, அபீல் மொஹமடும் பின்களத்தின் நடுவிலும், நடுக்கள வீரராகவும் விளையாடும் சிறந்த ஒருவர். இலங்கை அணியின் நடுக்களத்தை பலப்படுத்துவதற்கு இவர் சிறந்த பயனாற்றுவார். இலங்கை அணியின் நடுக்களத்தை பிரகாசப்படுத்துவதற்கு ஏற்கனவே நிப்ராஸ் மற்றும் சர்வான் ஜோஹர் ஆகிய முக்கிய வீரர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதுபோன்றே, ரோஷன் அப்புஹாமி மற்றும் சுன்தராஜ் நிரேஷ் ஆகியோரும் நடுக்களம் மற்றும் பின்களம் என்பவற்றில் சிறப்பிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

இலங்கை அணி இம்மாதம் 31ஆம் திகதி மலேசியாவை நோக்கி புறப்படவுள்ளது. B குழுவில் இடம்பெறும் இலங்கை அணி நவம்பர் 3ஆம் திகதி லாவோஸ் அணிக்கு எதிராக தமது முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இப்போட்டி குஷிங், சரவாக் அரங்கில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.௦௦ மணிக்கு ஆரம்பமாகும்.

இத்தொடருக்கான இலங்கை அணி

Sri Lanka National Football Team - 2016
(Photo Credits – Football Federation of Sri Lanka)

சுஜான் பெரேரா (தலைவர்), நிபுன தேவிந்த பன்டார (சிரேஷ்ட துணைத் தலைவர்), மொஹமட் ரிப்னாஸ் (துணைத் தலைவர்), மதுஷான் டி சில்வா, கவிந்து இஷான், துமிந்து ஹெட்டியாரச்சி, அபீல் மொஹமட், ஷதுரங்க சன்ஜீவ, அசிகுர் ரஹ்மான், சுன்தராஜ் நிரேஷ், சஜித் குமார, ஷலன சமீர, தனுஷ்க மதுசங்க, மொஹமட் உஸ்மான், சர்வான் ஜோஹர், சன்க தனுஷ்க விஜேசிரி, அநுருத்த வரகாகொட, சுபாஷ் மதுஷான், ப்ரபாத் ருவன் அநுரசிரி, அமித் குமார, எடிசன்  பிகுராடொ, ரோஷான் அப்புஹாமி, லக்ஷித ஜயதுங்க, சுபுன் கவீஷ் பெர்னான்டோ

டட்லீ ஸ்டீன்வோல் (பயிற்றுவிப்பாளர்), தேவசகயம் ராஜமனி (உதவிப் பயிற்றுவிப்பாளர்), மஹிந்த கலகெதர (கோல்காப்பாளருக்கான பயிற்றுவிப்பாளர்), எம்.எம். ரமீஸ் (முகாமையாளர்), S.N.P.K. சில்வா (மருத்துவ அதிகாரி)