யாசிர் ஷாவின் அபாரப் பந்துவீச்சில் வீழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி

442
Pakistan vs West Indies

அபுதாபி ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய யாசிர் ஷா 124 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளுக்கு மேல் எட்டு தடவைகளும் பத்து விக்கெட்டுகளுக்கு மேல் இரண்டு தடவைகளும் கைப்பற்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பாஹ் உல் ஹக் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். இதன்படி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 452 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக யூனிஸ் கான் 127 ஓட்டங்களையும், அணித் தலைவர் மிஸ்பா-உல்-ஹக் 96 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக சிறப்பாகப் பந்து வீசிய ஷனோன் கேப்ரியல் 96 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸுக்காக களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக டேரன் பிராவோ 43 ஓட்டங்களையும் ஜேசன் ஹோல்டர் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட யாசிர் ஷா 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 228 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்ஸுக்காக 67 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.

பின்னர், 456 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து ஐந்தாம் நாளான இன்று மேற்கிந்திய தீவுகள் அணி ஜெர்மைன் பிளாக்வுட் மற்றும் ரொஸ்டன் சேஸுடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை சற்றேனும் சமாளித்த ஜெர்மைன் பிளாக்வுட் 95 ஓட்டங்களையும் கிரேக் பிராத்வய்ட் 67 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

எவ்விதமான மாற்றங்களையும் செய்யாமல் தொடர்ச்சியாக பந்து வீசிய யாசிர் ஷாவின் சுழல் பந்து வீச்சைக் கணிக்க முடியாது தடுமாறிய மேற்கிந்திய தீவுகள் அணி, விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்தது. இறுதியாக 108 ஓவர்களில் 322 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

 போட்டியின் சுருக்கம்

முதலாவது இன்னிங்ஸ்
பாகிஸ்தான் 452 (119.1)
யூனிஸ் கான் 127, மிஸ்பா உல் ஹக் 96, ஷனோன் கேப்ரியல் 5/96

மேற்கிந்திய தீவுகள் 224 (94.4)
டேரன் பிராவோ 43, ஜேசன் ஹோல்டர் 31, மார்லன் சாமுவெல்ஸ் 30, யாசிர் ஷா 4/86, ரஹத் அலி 3/45

இரண்டாவது இன்னிங்ஸ்
பாகிஸ்தான் 227/2 (67)
அசார் அலி 79, அசாட் ஷபிக் 58*, சமி அஸ்லம் 50

மேற்கிந்திய தீவுகள் 322 (108)
ஜெர்மைன் பிளாக்வுட் 95, கிரேக் பிராத்வய்ட் 67, யாசிர் ஷா 6/124

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக யாசிர் ஷா தெரிவு செய்யப்பட்டார்.

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், பாகிஸ்தான் அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.  முன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.