புனித தோமஸ் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

223
U19 Cricket - S.Thomas' vs Moratuva MV

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் மொரட்டுவ மகா வித்தியாலயத்துடனான போட்டியில் புனித தோமஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டது.

அதேபோன்று, இன்று ஆரம்பமான போட்டிகளின் முதல் நாள் நிறைவில், மஹாநாம கல்லூரி மற்றும் அநுராதபுரம் மகா வித்தியாலய அணிகள் முன்னிலையில் உள்ளன.

மொரட்டுவ மகா வித்தியாலயம் எதிர் புனித தோமஸ் கல்லூரி

‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘C’ இற்கான போட்டியொன்றில் மொரட்டுவ மகா வித்தியாலயமும் புனித தோமஸ் கல்லூரியும் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற புனித தோமஸ் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் டெலோன் பீரிஸின் பந்து வீச்சை எதிர்கொள்ளத் திணறிய மொரட்டுவ மகா வித்தியாலயம் 30.5 ஓவர்களில் 61 ஓட்டங்களுக்கே அணியின் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அசத்தலாக பந்து வீசிய டெலோன் பீரிஸ் 13 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய புனித தோமஸ் கல்லூரி 45.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பில் மந்தில விஜேரத்ன ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய மொரட்டுவ மகா வித்தியாலயம் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், மீண்டுமொருமுறை தனது அற்புதமான பந்து வீச்சினால் எதிரணியை நிலைகுலையச் செய்த டெலோன் பீரிஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய பவித் ரத்னாயக்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி மொரட்டுவ மகா வித்தியாலயம் 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. நிஷான் மதுஷங்க அதிகபட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றார்.

சொற்ப ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில், 85 என்ற இலக்கை நோக்கி புனித தோமஸ் கல்லூரி ஆடுகளம் பிரவேசித்தது. போட்டி நிறைவடையும் போது அவ்வணி 4.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 36 ஓட்டங்களை பெற்றிருந்தது. அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

மொரட்டுவ மகா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 61 (30.5) – ஷெஹத சொய்சா 17, டெலோன் பீரிஸ் 6/13, பவித் ரத்னாயக்க 2/17

புனித தோமஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 154/6d (45.3) – மந்தில விஜேரத்ன 43*, தின்னுர குணவர்தன 36, மொஹமட் இஷாக் 24, நிர்மால் விஜேசிங்க 2/24

மொரட்டுவ மகா வித்தியாலயம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 177 (68.1) – நிஷான் மதுஷங்க 43, இசுரு ஜயரங்க 35, டெலோன் பீரிஸ் 5/76, பவித் ரத்னாயக்க 4/38

புனித தோமஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 36/2 (4.2) – ரொமேஷ் நல்லப்பெரும 19, ஷெஹத சொய்சா 2/11

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித தோமஸ் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


லும்பினி கல்லூரி எதிர் அநுராதபுரம் மகா வித்தியாலயம்

மற்றுமொரு போட்டியில் லும்பினி கல்லூரியும் அநுராதபுரம் மகா வித்தியாலயமும் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற அநுராதபுரம் மகா வித்தியாலயம் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய லும்பினி கல்லூரி 47.4 ஓவர்களில் 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய மதுரங்க சந்திரரத்ன 50 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லும்பினி கல்லூரி சார்பில் வினு ஹேமால் அதிகபட்சமாக 33 ஓட்டங்கள் குவித்தார்.

அடுத்து களமிறங்கிய அநுராதபுரம் மகா வித்தியாலயம், இன்றைய ஆட்ட நேரம் நிறைவடையும் போது 9 ஓவர்களில் விக்கெட் இழப்பேதுமின்றி 17 ஓட்டங்களை பெற்றிருந்தது. மோசமான காலநிலை காரணமாக இன்று குறைந்தளவு ஓவர்களே வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி 186 (47.4) – வினு ஹேமால் 33, ரவிந்து சஞ்சீவ 31, மதுரங்க சந்திரரத்ன 5/50, சிதும் பண்டார 2/30, டில்ஷான் லக்ஷித 2/38

அநுராதபுர மகா வித்தியாலயம் 17/0 (9)


மஹாநாம கல்லூரி எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி

இன்று ஆரம்பமான மற்றுமொரு போட்டியில் மஹாநாம கல்லூரியை எதிர்த்து புனித சில்வெஸ்டர் கல்லூரி போட்டியிட்டது. காலை மற்றும் மதிய நேரத்தில் பெய்த அடைமழையின் காரணமாக போட்டி தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டதுடன், இன்று 28 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டன.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித சில்வெஸ்டர் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. எனினும், எதிரணி சார்பாக பந்து வீச்சில் அசத்திய நிதுக வெலிகல (3/25) மற்றும் மஹேல டி சில்வா (2/13) ஆகியோர் 5 விக்கெட்டுகளை பதம்பார்க்க, புனித சில்வெஸ்டர் கல்லூரி 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தனித்து போராடிய புனித சில்வெஸ்டர் கல்லூரியின் அணித்தலைவர் மனுஜ பெரேரா ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி 69/5 (28) – மனுஜ பெரேரா 42*, நிதுக வெலிகல 3/25, மஹேல டி சில்வா 2/13