இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து விளக்கும் சனத் ஜயசூரிய

2864
Sanath

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தற்போதையை தலைவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரருமான சனத் ஜயசூரிய அண்மையில் thepapare.com இற்கு பிரத்யேகமான பேட்டியொன்றை வழங்கியிருந்தார். அதன்போது கேட்கப்பட்ட சில கேள்விகளும், அவற்றுக்கான சனத் ஜயசூரியவின் பதில்களும் உங்களுக்காக.

உங்களது தலைமையின் கீழ் உள்ள தேர்வுக் குழுவின் செயல்முறைகள் பற்றி விளக்கமளிக்க முடியுமா?

நான் சிறிது காலத்திற்கு முன்னரே அரவிந்த டி சில்வாவிடம் இருந்து இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். எனினும் இம்முறையானது எனது முதல் பணிவகுப்புக்  காலத்தை விட சவால் மிகுந்ததாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் சிரேஷ்ட வீரர்கள் பலர் ஒய்வு பெற்றுள்ளதன் காரணமாக, நாம் அடிமட்டத்தில் இருந்து மீண்டும் எமது பணிகளை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

திறமையான இளம் வீரர்கள் எம்மிடம் உள்ளனர். அவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்ட, போதியளவு கால அவகாசம் வழங்க வேண்டியது முக்கியமாகும். எனக்கு வழங்கப்பட்டுள்ள இப்பொறுப்பு இலகுவான பொறுப்பல்ல. எனினும், என்னால் இயன்றளவு சேவையை நாட்டுக்கு வழங்க நான் எதிர்பார்த்துள்ளேன்.

நீங்கள் தெரிவுக் குழுவின் தலைவராக பொறுப்பேற்றதன் பின்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் தொடர், அணியை மறுசீரமைக்கும் தொடராகவே இருந்தது. அதற்கடுத்து அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கையணி அற்புதமாக வெற்றியை சுவீகரித்தது. எனினும் ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது தொடர்களில் நாம் பெரிதாக சோபிக்கவில்லை. இது பற்றி உங்களது கருத்து என்ன? அத்துடன் ஏன் ஒரு நாள் போட்டி குழாமில் மொத்தமாக 19 வீரர்கள் இணைக்கப்பட்டனர்?  

டெஸ்ட் தொடரின்போது நாம் பொறுமையுடன் செயற்பட்டோம். எனினும், 3-0 என்று அத்தொடரை வெற்றியீட்டியதன் பின்னர் நாம் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுடன் செயற்பட்டமையே தோல்விக்கான காரணம் என நினைக்கின்றேன். நாம் சற்று பொறுமையுடன் செயலாற்றியிருக்கலாம்.

எவ்வாறாயினும் நாம் விட்ட தவறுகளில் இருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகள் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் இழைப்பதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக அரவிந்த டி சில்வாவும் நானும் கதைத்துள்ளோம். அவரிடமிருந்து தலைமை பொறுப்பை நான் பெற்றுக் கொண்ட போதிலும், எனக்கு அவர் பல்வேறு உதவிகளை புரிந்துள்ளார். நாம் அனைவரும் இணைந்து இலங்கை கிரிக்கெட்டை சரியான பாதையில் இட்டு செல்ல சகல முயற்சிகளையும் எடுத்துள்ளோம்.

முன்னர் இளம் வீரர்கள் தேசிய அணிக்குள் நேரடியாக இணைக்கப்படுவதை காணக் கூடியதாக இருந்தது. தற்போது அவ்வாறு இடம்பெறுவதில்லை. 19 வயதின் கீழ் மற்றும் ஏனைய இளம் வீரர்களை தேசிய அணியில் நேரடியாக இணைத்துக் கொள்வது தொடர்பில் உங்களது கொள்கை என்ன?

வீரர்களை தெரிவு செய்வது தொடர்பில் எங்களிடம் செயற்திட்டம் ஒன்று உள்ளது. அரவிந்தவின் தலைமையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கிரிக்கெட் செயற்குழுவில் நான், ரஞ்சித் பெர்னாண்டோ மற்றும் பலர் உள்ளடங்குகின்றோம்.

திலங்க சுமதிபால மற்றும் ஜயந்த தர்மதாஸ ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நாம் செயற்திட்டமொன்றை வடிவமைத்து அமுல்படுத்தியுள்ளோம். அதில் பாரிய மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாத போதிலும், எமது செயன்முறையை இலகுவாக்கும் நோக்கில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அந்த சிறு மாற்றங்கள் தொடர்பாக சற்று விளக்கமளிக்க முடியுமா?

எமது செயற்திட்டத்தின் படி இலங்கை ‘A’ அணியிலிருந்தே தேசிய அணிக்கான வீரர்களை தெரிவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். 19 வயதிற்குட்பட்ட அணிகளில் திறமையை வெளிக்காட்டும் வீரர்களையும் இலங்கை ‘A’ அணியில் உள்ளடக்கி, அவர்களுக்கு போதியளவு அனுபவம் கிடைத்த பின்னர் தேசிய அணிக்கு தெரிவு செய்வது எமது எதிர்பார்ப்பாகும்

மேலும், தொடர் ஒன்றிற்காக வீரர்களை தெரிவு செய்வதிலும் சில மாற்றங்களை மேற்கொள்ளவிருக்கின்றோம். உதாரணமாக தொடர் ஆரம்பிக்க 30-40 தினங்களுக்கு முன்னர் ஏறத்தாழ 30-35 வீரர்களை உள்ளடக்கிய முதல் நிலை குழாமொன்றை அறிவித்து, 21 நாட்களுக்கு முன்னரே இறுதிக் குழாமிற்கான வீரர்களை தெரிவு செய்ய எண்ணியுள்ளோம். இதன் மூலம் தொடர் ஒன்றிற்கு ஆயத்தமாக போதியளவு கால அவகாசம் வீரர்களுக்கு கிடைக்கப்பெறும். இவையே தற்போது எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள்.

உங்களது தெரிவுக்குழுவில் நான்கு அங்கத்தவர்கள் உள்ளடங்குகின்றனர். உங்களுக்கு அனைத்து உள்ளூர் போட்டிகளையும் காண வாய்ப்பு கிடைக்குமா? ஏனெனில், நீங்கள் இல்லங்களில் அமர்ந்தபடி வீரர்களை தெரிவு செய்வதாக மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் காணப்படுகின்றது. இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?  

நான் தெரிவுக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றது முதல் ஒரு போதும் வீட்டிலிருந்தபடி வீரர்களை தெரிவு செய்தது கிடையாது. எமது தேர்வாளர்கள் தவறாமல் பாடசாலை போட்டிகள், வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான போட்டிகள் மற்றும் ஏனைய உள்ளூர் போட்டிகளை பார்வையிட செல்வதுண்டு.

எம்மால் அனைத்து போட்டிகளுக்கும் செல்ல முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் எம்மால் இயன்ற விதத்தில், அநேகமான போட்டிகளை நாம் பார்வையிட செல்வதும் உண்மையாகும். போட்டிகளுக்கு மட்டுமின்றி வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபடும் போதும் நாம் அவதானிக்கச் செல்வதுண்டு. இலங்கையின் மிகச் சிறந்த, மிக உசிதமான வீரர்களை அணிக்கு தெரிவு செய்வதே எமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பாகும். அதனை நாம் திறன்பட செய்து வருகின்றோம் என நான் எண்ணுகின்றேன்.

வெளி மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளை நீங்கள் எவ்வாறு பார்வையிடுவீர்கள்?

இப்பொறுப்பு மாகாண மற்றும் மாவட்ட பயிற்சியாளர்களை சார்ந்ததாகும். எமது உபதலைவரும் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான பொறுப்பதிகாரியுமான திரு. மதிவாணன் இது தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றார். அவரின் அறிவுறுத்தலுக்கு அமைய, மாகாண மற்றும் மாவட்ட பயிற்சியாளர்கள் தத்தமது பிராந்தியங்களில் இடம்பெறும் பாடசாலை மட்ட போட்டிகளை பார்வையிடச் செல்வதுடன் திறமையான வீரர்களை அடையாளம் காண எமக்கு உதவியளிக்கின்றனர்.

புதிய வீரர் ஒருவர் அணியில் இணைக்கப்பட்ட பின்னர் எவ்வளவு காலம் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?

குறைந்தது ஒரு முழுமையான தொடரிற்காவது வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு சிறந்த உதாரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நாம் எமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியதை குறிப்பிடலாம். வாய்ப்புக்கள் வழங்குவதன் மூலமே தன்னம்பிக்கையை வளர்க்க முடியும். எனினும் ஒருநாள் தொடரின் போது நாம் இதனைச் செய்ய தவறி விட்டோம்.

இதன் காரணமாகவே நாம் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என நான் முன்னர் தெரிவித்தேன். புதிதாக அணியில் இணைக்கப்பட்ட வீரர்களை நாம் பொறுமையுடன் கையாள வேண்டும். வாய்ப்புகள் வழங்க வேண்டும். எம்மைப் போன்றே இலங்கை கிரிக்கெட் ரசிகர்களையும், பொது மக்களையும் சற்று பொறுமையுடன் இருக்கும்படி நான் கேட்டுக் கொள்கின்றேன்.

சமீப காலமாக எமது வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். போதியளவு உடல் நலத் தகுதி இல்லாமை இதற்கு காரணமா? நீங்கள் விளையாடிய காலத்தில் குறிப்பிட்ட சில வீரர்களே தொடர்ந்து நீண்ட காலமாக அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர். எனினும் அவர்கள் இது போன்று உபாதைகளுக்கு உள்ளாகவில்லை. இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

எம்மால் உடல் நலத் தகுதியை மட்டும் குறிப்பிட்டுக் கூற முடியாது. இன்று கிரிக்கெட் வீரர்கள் அதிகளவிலான போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. உள்ளூர், கழக மட்டப் போட்டிகள், வர்த்தக சங்கப் போட்டிகள், வெளிநாட்டு T20 தொடர்கள், சர்வதேச போட்டிகள் மற்றும் பயிற்சிகள் என கூறிக் கொண்டே போகலாம். இதனால் வீரர்களின் மேல் அதிக பளு சுமத்தப்படுகின்றது.

எனினும் வீரர்கள் இதனை சிறந்த முறையில் கையாள தெரிந்திருக்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இவ்வாறு தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் உபாதைகளுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது. தேர்வுக் குழுவின் தலைவராக நான் எதிர்பார்ப்பது என்னவென்றால், வீரர்கள் உபாதைகளுக்குள்ளாகும் போது அவரை பிரதியீடு செய்யக்கூடிய திறமையான மாற்று வீரர்கள் இருப்பதையேயாகும்.

வீரர்களின் உடல் தகுதி மேலாண்மை தொடர்பான செயற்திட்டம் ஒன்று உள்ளதா? ஓய்வு காலத்தில் வீரர்கள் உடற் பயிற்சிகளில் ஈடுபடுவதுண்டா?

எமது பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களினால் வீரர்களுக்கு பிரத்யேகமான உடற்பயிற்சி அட்டவணை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு காலத்தில் தங்களது இயல்பான அட்டவணைக்கு ஏற்ப உடற் பயிற்சிகளில் ஈடுபடலாம். தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் என்ற வகையில் உடற்பயிற்சி செய்தல் மற்றும் உடல் தகுதியை பேணுதல் என்பன முக்கிய அம்சங்களாகும். ஆயினும், துரதிர்ஷ்டவசமாக சில உபாதைகள் ஏற்படுகின்றன.

இலங்கை அணியை பொறுத்த வரையில் தற்போது ஒரு மறுசீரமைப்பு கட்டமாகவே காணப்படுகின்றது. எதிர்காலத்திற்கான உங்களது திட்டங்களுக்கு அமைய, அணியில் இளம் வீரர்களை உள்ளடக்க எதிர்பார்த்துள்ளீர்களா? அல்லது இளம் வீரர்களுடன் அனுபவமிக்க வீரர்களையும் கொண்ட ஒரு அணியை தயார் செய்ய எண்ணியுள்ளீர்களா?

உண்மையில் எமக்கு இவ்விரண்டு வகையான வீரர்களும் அவசியம். போட்டிகளின் போது ஏற்படும் நெருக்கடியான சூழ்நிலைகளை வெற்றிகரமாக கடக்க ஓரிரு அனுபவ வீரர்கள் அணியில் இருக்க வேண்டியது முக்கியமானதாகும். குசல் மென்டிஸ், லக்ஷான் சந்தகன், தனஞ்சய டி சில்வா, ரொஷேன் சில்வா போன்ற இளம் வீரர்கள் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அணிக்குள் நுழைவதை விட திறமையை வெளிப்படுத்தி இடத்தை தக்கவைத்துக் கொள்வதே கடினமானது. இவ்வீரர்கள் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள் என நம்புகின்றேன்.

லசித் மலிங்கவின் உபாதை தற்போது குணமாகியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அது உண்மையென்றால் அவரை அணியில் உள்ளவாங்க நீங்கள் தயாரா? தான் குணமடைந்து விட்டதாக லசித் மலிங்க உங்களுக்கு அறிவித்தாரா?

என்னிடம் பலர் இக்கேள்வியை கேட்டனர். தெரிவுக்குழுவின் தலைவர் என்ற வகையில், அவர் இலங்கை அணியில் மீண்டும் விளையாடுவதை நானும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். உபாதைகளுக்கு உள்ளான வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவதாயின் அதற்காக மருத்துவர்களினால் நடாத்தப்படும் பரிசோதனையில் தமது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பதை லசித் மலிங்க நன்கறிவார். அவ்வாறு அவர் தான் குணமடைந்து விட்டதை அறிவிக்கும் பட்சத்தில், அவரை அணிக்குள் வரவேற்க நாம் தயாராக உள்ளோம்.

அவருடன் எமக்கு எவ்வித முறுகல் நிலையும் இல்லை. பொய் வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஊடகங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் வெளிப்படையாகவே செயல்படுகின்றோம். எம்மிடம் ஒளிவு மறைவு கிடையாது. லசித் மலிங்க எமக்கு முக்கியமான ஒரு வீரர். அவர் அணிக்குத் திரும்பினால், நானே அதிகம் மகிழ்ச்சியடைவேன்.

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கான ஆயத்தங்கள் எவ்வாறு உள்ளன? அத்துடன் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண தொடரிற்கான ஆயத்தங்கள் பற்றியும் கூற முடியுமா?

ஆம் சம்பியன்ஸ் கிண்ணமும் முக்கியமான ஒரு தொடர். புதிதாக உள்ளடக்கப்பட்ட இளம் வீரர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்க வேண்டும். இத்தொடரிற்கு அவர்களை நன்கு தயார்படுத்த வேண்டும்.

இறுதியாக, உங்களது இப்பொறுப்பு பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்திருப்பதை எண்ணி மகிழ்வடைகின்றேன். நான் இன்று இந்நிலைக்கு வருவதற்கு காரணம் கிரிக்கெட்டே ஆகும். அதனால் இலங்கையில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு என்னால் இயன்றளவு சேவையை வழங்க நான் தயாராக உள்ளேன். நான் இன்னொரு விடயத்தை கூறிக் கொள்ள விரும்புகிறேன். கிரிக்கெட் வீரர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதன்மூலமே தமது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்ட கூடியதாக இருக்கும்.