இன்று இடம்பெற்ற 24ஆவது சிங்கர் MCA ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், கொமர்ஷல் கிரெடிட் அணியை டக்வத் லுவிஸ் முறைப்படி 23 ஓட்டங்களினால் தோற்கடித்த மாஸ் யுனிச்செலா அணி சம்பியனாக வெற்றிவாகை சூடியது.

அரையிறுதிப் போட்டிகளில், மாஸ் யுனிச்செலா அணி டிமோ அணியையும் கொமர்ஷல் கிரெடிட் அணி ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியையும் தோற்கடித்து இறுதிச் சமருக்குத் தகுதி பெற்றிருந்தன.

மழையின் காரணமாக தாமதித்து ஆரம்பமாகிய இப்போட்டி 32 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. நாணய சுழற்சியில் வென்ற கொமர்ஷல் கிரெடிட் அணித் தலைவர் உபுல் தரங்க எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தார்.

அதன்படி களமிறங்கிய மாஸ் யுனிச்செலா 59 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் அற்புதமாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் சாமர சில்வா, 6ஆவது விக்கெட்டுக்காக சதுர பீரிஸ் உடன் இணைந்து 84 ஓட்டங்களையும், 7ஆவது விக்கெட்டுக்காக திலக்ஷ சுமனசிறி உடன் இணைந்து 67 ஓட்டங்களையும் பகிர்ந்துகொண்டார்.

சாமர சில்வாவின் அபார ஆட்டத்தின் உதவியுடன் மாஸ் யுனிச்செலா அணி 32 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 70 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசிய சாமர சில்வா துரதிர்ஷ்டவசமாக 99 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

கொமர்ஷல் கிரெடிட் அணி சார்பாகப் பந்துவீச்சில் லஹிரு மதுஷங்க மற்றும் கவிந்த சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர். இதன்படி, கொமர்ஷல் கிரெடிட் அணிக்கு 247 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய கொமர்ஷல் கிரெடிட் அணி துரிதமாக துடுப்பெடுத்தாடிய போதிலும், சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. அவ்வணி 22.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

அதன்படி டக்வத் லுவிஸ் முறைப்படி 23 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றிருந்த மாஸ் யுனிச்செலா அணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. கொமர்ஷல் கிரெடிட் அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சாமர கபுகெதர 27 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அசத்திய மாஸ் யுனிச்செலாவின் இஷார அமரசிங்க 17 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சுற்றுத்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக மாஸ் யுனிச்செலாவின் தனுஷ்க குணதிலகவும் சிறந்த பந்துவீச்சாளராக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் விகும் பண்டாரவும் தெரிவு செய்யப்பட்டனர்.

தொடர் நாயகன் விருதை தனுஷ்க குணதிலக வென்றதுடன் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை சாமர சில்வா சுவீகரித்தார்.

போட்டியின் சுருக்கம்

மாஸ் யுனிச்செலா – 246/9 (32) – சாமர சில்வா 99, சதுர பீரிஸ் 33, திலக்ஷ சுமனசிறி 28, கவிந்த சில்வா 2/32, லஹிரு மதுஷங்க 2/57

கொமர்ஷல் கிரெடிட் – 159/6 (22.2) – சாமர கபுகெதர 50, உபுல் தரங்க 46, இஷார அமரசிங்க 2/17

முடிவு – மாஸ் யுனிச்செலா (டக்வர்த் லுவிஸ் முறையில்) 23 ஓட்டங்களினால் வெற்றி.

மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு