விமுக்தியின் பந்து வீச்சினால் திரித்துவக் கல்லூரி போட்டிக்குள் மறுபிரவேசம்

326
Singer U19 Schools Cricket

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமான போட்டிகள் சிலவற்றின் விபரங்கள்.

திரித்துவக் கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் திரித்துவக் கல்லூரியும் புனித பேதுரு கல்லூரியும் மோதிக்கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித பேதுரு கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொண்டது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய லக்ஷிண ரொட்ரிகோ (91) மற்றும் சந்துஷ் குணதிலக (65) ஆகியோர் இரண்டாவது விக்கெட்டிற்காக பாரிய இணைப்பாட்டமொன்றை பகிர்ந்து கொண்டனர்.

எனினும் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கே ஆட்டமிழக்க, புனித பேதுரு கல்லூரி 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் விமுக்தி நெதுமால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த திரித்துவக் கல்லூரி, இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி – 219 (79.2)லக்ஷிண ரொட்ரிகோ 91, சந்துஷ் குணதிலக 65, விமுக்தி நெதுமால் 4/68

திரித்துவக் கல்லூரி – 53/2 (16) – சண்முகநாதன் ஷனோகீத் 27


வெஸ்லி கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

சிங்கர்தொடரின் குழு ‘A’ இற்கான மற்றொரு போட்டியில் வெஸ்லி கல்லூரியை எதிர்த்து புனித பெனடிக்ட் கல்லூரி போட்டியிட்டது. இதில் நாணய சுழற்சியில் வென்ற புனித பெனடிக்ட் கல்லூரி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய வெஸ்லி கல்லூரி 55.2 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக திசுரக்க அக்மீமன அதிகபட்சமாக 34 ஓட்டங்கள் குவித்தார். பந்து வீச்சில் அசத்திய மஹேஷ் தீக்ஷண 38 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி வழங்கி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இவரது பந்து வீச்சை எதிர்கொள்வதில் எதிரணியினர் மிகவும் துன்பப்பட்டனர்.

தொடர்ந்து களமிறங்கிய புனித பெனடிக்ட் கல்லூரி, இன்றைய நாள் ஆட்டம் நிறுத்தப்படும் வேளையில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 85 ஓட்டங்களை பெற்றிருந்தது. தினித்த பஸ்நாயக்க (39*) மற்றும் டிலான் சதுரங்க (27*) ஆகியோர் ஆட்டமிழக்காது களத்திலிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி – 154 (55.2) – திசுரக்க அக்மீமன 34, ஜேசன் டி சில்வா 32,, மஹேஷ் தீக்ஷண 5/38

புனித பெனடிக்ட் கல்லூரி – 85/1 (25)தினித்த பஸ்நாயக்க 39*, டிலான் சதுரங்க 27*


ஜனாதிபதிக் கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி

இத்தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் ஜனாதிபதிக் கல்லூரியும் டி மெசனொட் கல்லூரியும் மோதிக் கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜனாதிபதிக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவ்வணியின் ஹஷான் பிரியதர்ஷன 99 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய மொஹமட் ரிபாஸ் 50 ஓட்டங்கள் குவிக்க, ஜனாதிபதிக் கல்லூரி 263 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. டி மெசனொட் கல்லூரி சார்பாக ஹஷேன் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமது முதலாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய டி மெசனொட் கல்லூரி முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் வேளையில் 4 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களை பெற்றிருந்தது. பந்து வீச்சில் அசத்திய பிரமுக கயாஷான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதிக் கல்லூரி – 263 (70.4)ஹஷான் பிரியதர்ஷன 99, மொஹமட் ரிபாஸ் 50, ஹஷேன் பெர்னாண்டோ 4/27

டி மெசனொட் கல்லூரி – 64/4 (19.2) – பிரமுக கயாஷான் 3/10


ஸாஹிரா கல்லூரி எதிர் தர்மாசோக கல்லூரி

இன்று ஆரம்பமான குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் ஸாஹிரா கல்லூரியை எதிர்த்து தர்மாசோக கல்லூரி போட்டியிட்டது. இதன் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஸாஹிரா கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மொஹமட் ஷமாஸ் 88 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் அசத்திய கவிந்து நதீஷான் 70 ஓட்டங்களை வழங்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய தர்மாசோக கல்லூரி, ஆட்டம் நிறைவடையும் போது விக்கெட் இழப்பேதுமின்றி 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி – 241 (75.5) – மொஹமட் ஷமாஸ் 88, கவிந்து நதீஷான் 6/70

தர்மாசோக கல்லூரி – 9/0 (2)