வன்டர்சேயினால் கதிகலங்கிய மேற்கிந்திய தீவுகள் A அணி : இலங்கைக்கு வெற்றி

1573
Jeffrey Vandersay

வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 333 ஓட்டங்களை பெற போராடிய மேற்கிந்திய தீவுகள் A அணியினர் இலங்கை  அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஜெப்ரி வன்டர்சேயின் சுழலில் சிக்கி, 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்றமையினால், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை A அணியினர் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இலங்கை A அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி, கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த போட்டியில் சாமர் புரூக்ஸ் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் A அணியும், லஹிரு திரிமான்ன தலைமையில் இலங்கை A அணியும் களமிறங்கியிருந்தன.

போட்டியின் முதலாம் நாளில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த இலங்கை A அணித்தலைவர் திரிமான்ன முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார். இதன் அடிப்படையில் தங்களது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணியினர், 89.2 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

இதில், இலங்கை A அணி சார்பாக சிறப்பாக ஆடிய சந்துன் வீரக்கொடி 79 ஓட்டங்களையும், குசல் பெரேரா 69 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் A அணி சார்பாக டிலோன் ஜோன்சன் 65 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும், ரஹீம் கொர்ன்வால் 93 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டிகளின் புகைப்படங்கள்

இதன் பின்னர் தங்களது முதாலது இன்னிங்சினை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் A அணியினர், 61.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்களை பெற்றனர். இதனால் இலங்கை A அணியினரை விட 75 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தங்களது முதலாவது இன்னிங்சினை அவ்வணி நிறைவு செய்தது.

துடுப்பாட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் A அணி சார்பாக சிம்ரோன் ஹெடிமைர் 94 ஓட்டங்களையும், அணித்தலைவர் சாமர் புரூக்ஸ் 54 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் இலங்கை A அணி சார்பாக கசுன் மதுசன்க 45 ஓட்டங்களிற்கும், லக்ஷன் சந்தகன் 54 ஓட்டங்களிற்கும் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தனர்.

இதன் பின்னர், தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை A அணியினர் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவின் போது 61 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்று, மேற்கிந்திய தீவுகள் A அணியினரை விட 286 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தனர். களத்தில் ஆட்டமிழக்காமல் ரோசன் சில்வா 29 ஓட்டங்களுடனும், தசுன் சானக்க 7 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.

போட்டியின் இறுதி நாளான இன்று, தங்களது இரண்டாவது இன்னிங்சினை தொடர்ந்த இலங்கை A அணியினர், 74.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்ற போது தங்களது இரண்டாவது இன்னிங்சை நிறைவை செய்து கொள்வதாக அறிவித்தனர்.

துடுப்பாட்டத்தில், இலங்கை A அணி சார்பாக, அசேல குணரத்ன 10 பவுண்டரிகள் உள்ளடங்களாட 69 ஓட்டங்களையும், சந்துன் வீரக்கொடி 7 பவுண்டரிடகளுடன் 48 ஓட்டங்களையும், ரோஷன் சில்வா 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 44 ஓட்டங்களையும் பதிவு செய்திருந்தனர். பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் A அணி சார்பாக ரஹீம் கொர்ன்வால் 87 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இலங்கை A அணி இரண்டாவது இன்னிங்சை நிறைவு செய்ததன் காரணமாக, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 333 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் A அணியினர் இந்தப் போட்டியை சமநிலை ஆக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு அமைவாகவே மேற்கிந்திய தீவுகள் A அணியினரின் ஆரம்ப ஆட்டமும் அமைந்திருந்தது.

மேற்கிந்திய தீவுகள் A அணியின் முதல் 5 விக்கெட்டுக்கள் பறிபோகும் வரை ஒரு நேர்த்தியான ஓட்ட எண்ணிக்கையான 171 ஓட்டங்களை அவர்கள் பெற்றிருந்த போதிலும், 5 ஆவது விக்கெட்டுடன் அவர்களது அணி இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஜெப்ரி வன்டேர்சேயின் சுழலினால் நிலைகுலைய ஆரம்பித்தது.

இதனால் அந்த அணி 194 ஓட்டங்களிற்குள் தங்களது சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. இதனால் அவ்வணி இலங்கை A அணியிடம் 138 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது. மேற்கிந்திய தீவுகள் A அணியின் கடைசி 6 விக்கெட்டுக்களும் வெறும் 23 ஓட்டங்களிற்குள் பறிபோனதும் குறிப்பிடத்தக்கதாகும்.

துடுப்பாட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் A அணித்தலைவர் சாமர் புரூக்ஸ் அதிக பட்சமாக 5 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெய்ரன் பவல் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்ளடங்களாக 44 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மிகவும் சிறப்பாக பந்து வீசிய ஜெப்ரி வன்டர்சேய் 47 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களையும், லக்ஷன் சந்தகன் 61 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியில் பெற்ற வெற்றி காரணமாக இலங்கை A அணி 2-1 என இத்தொடரை வென்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்:

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) – 318/10 (89.2) – சந்துன் வீரக்கொடி 79, குசல் பெரேரா 69, ரோஷன் சில்வா 49, டிலோன் ஜோன்சன் 65/4, ரஹீம் கொர்ன்வால் 93/3

மேற்கிந்திய தீவுகள் A அணி (முதல் இன்னிங்ஸ்) – 243/10 (61.4) – சிம்ரோன் ஹெடிமைர் 94, சாமர் புரூக்ஸ் 54, கசுன் மதுசன்க 45/3, லக்ஷன் சந்தகன் 54/3

இலங்கை A அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 257/6 Dec(74.2) – அசேல குணரத்ன 69, சந்துன் வீரக்கொடி 48, ரோஷன் சில்வா 44, ரஹீம் கொர்ன்வால் 87/4

மேற்கிந்திய தீவுகள் A அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 194/10 (67.2)சாமர் புரூக்ஸ் 46, கெய்ரன் பவல் 44, ஜெப்ரி வன்டர்சேய் 47/6, லக்ஷன் சந்தகன் 61/3

போட்டி முடிவுஇலங்கை A அணி 138 ஓட்டங்களால் வெற்றி

இவ்விரு அணிகளும் பங்குகொள்ளும் ஒரு நாள் தொடர் இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இந்த தொடர் தொடர்பான முழு விபரங்களை அறிய ThePapare.com உடன் இணைந்திருங்கள்.Crawler