மிலிந்த சிறிவர்தன தலைமையில் களமிறங்கவுள்ள இலங்கை A அணி

2455
Sri Lanka A one-day squad

மேற்கிந்திய தீவுகள் A அணிக்கு எதிராக இடம்பெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிற்கு, இலங்கை தேசிய அணியின் நடுவரிசை துடுப்பாட்ட வீரரான மிலிந்த சிறிவர்தன, இலங்கை A அணியை தலைமை தாங்கி வழிநடாத்தவுள்ளார். இவ்விரண்டு அணிகளும் பங்குகொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டி எதிர்வரும் ஓக்டோபர் 24ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகின்றது.

30 வயதாகும் மிலிந்த சிறிவர்தன இலங்கை தேசிய அணிக்காக இதுவரையில் 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், கடைசியாக ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் சிறந்த முறையில் பிரகாசித்திருந்தார்.

இவருடன் சேர்த்து துணிச்சல் மிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்கவிற்கும் சிம்பாப்வேயில் இடம்பெற இருக்கும் முக்கோண தொடருக்கு முன்னதாக இக்குழாமுடன் இணைந்து விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் 79 மற்றும் 48 ஓட்டங்கள் பெற்று சிறப்பான ஆட்டத்தை நிரூபித்த துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கொடிக்கும் இந்த ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிங்கர் நிறுவனத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடசாலை கிரிக்கட் வீரருக்கான விருதினை வென்ற றிச்மன்ட் கல்லூரி வீரர் சரித் அசலன்கவும் இந்த குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். அவர் மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான டெஸ்ட் போட்டியிலும் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றார். இவருடன் சேர்த்து ஆனந்த கல்லூரியை சேர்ந்த இளம் வீரர் சம்மு அஷானுக்கும் இக்குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டு இலங்கை A அணியில் முதல் முறையாக இணைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியினாலும், பாகிஸ்தான் A அணியினாலும் மோசமாக தோற்கடிக்கப்பட்ட இலங்கை A குழாத்தில் இடம்பெற்ற விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான மினோத் பானுகவிற்கும், இவருடன் சேர்த்து 22 வயதுடைய புனித பேதுரு கல்லூரியின் பழைய மாணவர் லஹிரு மிலிந்தவிற்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை அபிவிருத்தி பதினொருவர் அணிக்காக சிறப்பாக விளையாடி அதிக ஓட்டங்கள் பெற்றதை வைத்தே இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து, செஹான் ஜெயசூரிய, தசுன் சானாக்க ஆகியோரும் 15 பேர் பேர் கொண்ட குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பந்து வீச்சு துறையை முன்னெடுக்க, வேகப்பந்து வீச்சுக்கு சிறந்தவர்களான பினுர பெர்னாந்து, கசுன் ராஜிதவிற்கும் மித வேகப்பந்து வீச்சாளர்களான அனுக் பெர்னாந்து, கேசன் விஜயரத்ன ஆகியோருக்கும் இந்த குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குருனாகல் மலியதேவ கல்லூரியின் பழைய மாணவரான விஜயரத்ன, நடைபெற்று முடிந்த MCA B பிரிவிற்கான தொடரில், எல்.பி பினான்ஸ் அணி சார்பாக அதிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியமையினால், அவருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அபிவிருத்தி பதினொருவர் அணியின் தென்னாபிரிக்க, சிம்பாப்வே தொடர்களில் இவர் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் அவுஸ்திரேலிய அணியினை நிலைகுலையச்செய்து டெஸ்ட் தொடரை கைப்பற்ற உதவிய, இடது கை பந்து வீச்சாளரான அமில அல்போன்ஷோவிற்கும், முதற்தர போட்டிகளில் விளையாடி வரும் 31 வயது நிரம்பிய வலது கை சுழற்பந்து வீச்சாளர் அலங்கார அசன்கவிற்கும் இத்தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2005இல் இருந்து இதுவரை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள் 57 இல் விளையாடிய இவர் 37 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இவர்கள் மூலம் இலங்கை A அணியின் சுழல் பந்து வீச்சு பலம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை A அணி விபரம்

மிலிந்த சிறிவர்தன (அணித்தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, சந்துன் வீரக்கொடி, மினோத் பனூக்க, செஹான் ஜயசூரிய, லஹிரு மிலன்த, சரித் அசலன்க, சம்மு அஷான், அனுக் பெர்னாந்துஅமிலோ அபோன்சோ, அலங்கார அசன்க, கசுன் ராஜித, பினுர பெர்னாந்து, கேசன் விஜயரத்ன

போட்டி நேர அட்டவணை

  • முதலாவது ஒரு நாள் போட்டி ஓக்டோபர் 24ஆம் திகதி, ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானம்
  • இரண்டாவது ஒரு நாள் போட்டி ஒக்டோபர் 27ஆம் திகதி, வெலகதேர சர்வதேச மைதனாம்
  • மூன்றாவது ஒரு நாள் போட்டி- ஒக்டோபர் 30ஆம் திகதி, ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம்

மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு 

Crawler