இலங்கை A அணியின் பந்து வீச்சாளர்களின் அபாரம் காரணமாக தடுமாறிய மேற்கிந்திய தீவுகள் A அணியினர்

1991
Sri Lanka A vs West Indies A

இலங்கை A அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இடையில் இடம்பெற்று வரும் மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்றைய ஆட்ட நேர முடிவின் போது, மேற்கிந்திய தீவுகள் A அணியினர், இலங்கை A அணியினரின் சிறப்பான பந்து வீச்சின் காரணமாக தடுமாற்றத்தை எதிர்கொண்டதுடன், முதல் இன்னிங்ஸில் குறைவான மொத்த ஓட்டங்களை பதிவு செய்திருந்தனர். இதனால் இலங்கை A அணி வலுவான நிலையில் உள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, மேற்கிந்திய தீவுகள் A அணியினர் விளையாடும் நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி, கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகியது. போட்டியின், இரண்டாவது நாள் ஆட்ட நேர நிறைவின் போது மேற்கிந்திய தீவுகள் A அணியினர், 4 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இதன்போது களத்தில் மேற்கிந்திய தீவுகள் A அணித் தலைவர் சாமர் புரூக்ஸ் 43 ஓட்டங்களுடனும் ஜஹ்மர் ஹமில்டன் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

போட்டிகளின் புகைப்படங்கள்

போட்டியின் மூன்றாவது நாளான இன்று தங்களது முதலாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் A அணியினர், இலங்கை A அணியினருக்கு எதிராக சவாலான மொத்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்று அழுத்தம் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தும், இலங்கை A அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், சுழல் பந்து வீச்சாளர்களின் திறமையினால் அந்த அழுத்தம் புஸ்வாணமாக்கப்பட்டது.

இன்றைய நாளில், முதல் விக்கெட்டாக, மதுசன்கவின் பந்தில் மேற்கிந்திய தீவுகள் A அணியின் அணித் தலைவர் சாமர் புரூக்ஸ் வெளியேற, அவருடன் சேர்த்து அவரது அணி உறுப்பினர்களும், அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினர். இதனால், மேற்கிந்திய தீவுகள் A அணியினர், 61.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களை மாத்திரமே தங்களது முதலாவது இன்னிங்ஸிற்காகப் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் A அணி சார்பாக, அதிகபட்சமாக சிம்ரோன் ஹெடிமேர் 94 ஓட்டங்களையும், சாமர் புரூக்ஸ் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை A அணியின் வேகப்பந்து வீச்சாளர் கசுன் மதுசன்க, 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுழல் பந்து வீச்சாளர் லக்ஷன் சந்தகன் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், மேற்கிந்திய தீவுகள் A அணி தங்களது முதலாவது இன்னிங்ஸில் பெற்ற மொத்த ஓட்ட எண்ணிக்கை காரணமாக, அவர்களை விட 75 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த இலங்கை A அணியினர் தங்களது, இரண்டாவது இன்னிங்ஸினை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான குசல் பெரேரா, சந்துன் வீரக்கொடி ஆகியோருடன் ஆரம்பித்தனர்.

ஒரு சிறப்பான ஆரம்பத்துடன் தங்களது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை A அணியின் முதலாவது விக்கெட் 67 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ரஹீம் கொர்ன்வாலின் பந்தில் பறிபோனது, இதனால் குசல் பெரேரா 20 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பி ஏமாற்றினார். இவருடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சந்துன் வீரக்கொடி, 7 பவுண்டரிகள் உள்ளடங்களாக 36 பந்துகளுக்கு 48 ஓட்டங்களைப் பெற்று அடுத்து வெளியேறினார்.

இவர்களைத் தொடர்ந்து ஏனைய வீரர்கள் பெரிதாக ஓட்டம் எதுவும் பெறாமல் வெளியேறியிருப்பினும், அசேல குணரத்ன நிதானமாக ஆடி 10 பவுண்டரிகள் உள்ளடங்களாக 69 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர், லஹிரு திரிமான்ன 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இன்றைய போட்டியிலும் ஏமாற்றினார்.

இதனைத் தொடர்ந்து இன்றைய ஆட்ட நேர முடிவு அறிவிக்கப்பட்ட போது இலங்கை A அணியினர் 61 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்திய தீவுகள் A அணியினரை விட, 286 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளனர். ஆட்ட நேர முடிவின் போது களத்தில், ரோஷன் சில்வா 29 ஓட்டங்களுடனும், தசுன் சானாக்க 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் A அணி சார்பாக ரஹீம் கொர்ன்வால் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் இறுதி நாள் நாளை தொடரும்

போட்டியின் சுருக்கம்:

முதல் இன்னிங்ஸ்

இலங்கை A அணி – 318(89.5) – சந்துன் வீரக்கொடி 79, குசல் பெரேரா 69, டிலோன் ஜோன்சன் 65/4, ரஹீம் கொர்ன்வால் 93/3

மேற்கிந்திய தீவுகள் A அணி – 243(61.4) – சிம்ரோன் ஹெட்டிமர் 94, சாமர் புரூக்ஸ் 54, கசுன் மதுசன்க 45/3, லக்ஷன் சந்தகன் 54/3

இரண்டாவது இன்னிங்ஸ்:

இலங்கை A அணி – 211/5(61) – அசேல குணரத்ன 69, சந்துன் வீரக்கொடி 48, ரஹீம் கொர்ன்வால் 62/4

*இலங்கை A அணி 286 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

Crawler