இலங்கைக்கு வலு கொடுத்த குசல் பெரேரா, சந்துன் வீரக்கொடி ஆகியோரின் அரைச்சதம்

3999
Sri Lanka A vs West Indies A
Photo Credits – Priyantha Wickramaarachchi

ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இலங்கை A அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இடையிலான நான்கு நாள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணி வீரர்களின் சிறந்த துடுப்பாட்டம் காரணமாக இலங்கை A அணி வலுவான நிலையை நோக்கி நகர்ந்தது.  

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் A அணி, இலங்கை A அணியுடன் மூன்று உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

எனவே, தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ள நிலையில் இன்று ஆரம்பமாகிய மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான ஒரு போட்டியாக அமைகின்றது. கடந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்ட குசல் ஜனித் பெரேரா அணிக்குள் மீண்டும் அழைக்கப்பட்டார்.

கடந்த போட்டியில் இலங்கை A அணியின் தலைவராக விளையாடிய திமுத் கருணாரத்னவிற்கும், விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவிற்கும் இந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்கள் இந்த போட்டிக்காக இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை A அணித்தலைவர் திரிமான்னெ முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி ஆரம்பம்பத்தில் சிறப்பான ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தியிருந்தது. சந்துன் வீரக்கொடி மற்றும் குசல் பெரேரா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டுக்காக 133 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

சந்துன் வீரக்கொடி  10 பவுண்டரிகள் உள்ளங்களாக 79 ஓட்டங்களையும், இன்றைய போட்டியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த குசல் பெரேரா 11 பவுண்டரிகள் உள்ளடங்களாக  69 ஓட்டங்களையும், இளம் சகலதுறை ஆட்டக்காரர்  சரித் அசலன்க ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி உள்ளடங்களாக 46  ஓட்டங்களையும் விளாசி இருந்தனர்.

இன்றைய போட்டியிலும் லஹிரு திரிமான்னெ 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார்.  பின்னர், மேற்கிந்திய தீவுகள் A அணியின் சுழல் பந்து வீச்சால் இலங்கை A அணி வீரர்களின் துடுப்பாட்டத்தில் ஒரு தளம்பல் நிலை ஏற்பட்டது. இதனால் 80 ஓவர்கள் முடிவில் 272  ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுக்களை இழக்க வேண்டிய நிலை இலங்கை A அணிக்கு ஏற்பட்டது.  

இந்த வேளையில் போட்டியை தொடர்ந்து நடாத்த தகுந்த வெளிச்சம் இன்மையினால் போட்டி சிறிது நேரம் தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்தும் இதேநிலை நீடித்த காரணத்தால் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இன்றைய ஆட்ட நேர முடிவின்போது களத்தில் ஆட்டமிழக்காமல் ரோசனே சில்வா 40 ஓட்டங்களுடனும் லக்ஷான் சந்தகன் ஓட்டம் ஏதும் பெறாமலும் நின்றிருந்தார்கள்.

மேற்கிந்திய தீவுகள் A அணியின் பந்து வீச்சில் கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரஹீம் கொர்ன்வெல் 93 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், டிலோன் ஜோன்சன் 43 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

ஸ்கோர் சுருக்கம்

இலங்கை A அணி: 272/7(80) – சந்துன் வீரக்கொடி 79, குசல் பெரேரா 69, ரஹீம் கொர்ன்வெல் 93/3, டிலோன் ஜோன்சன் 43/2

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.

மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு singer-mca-premier-league-tournament