400வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி : இறுதி வரை போராடிய மேற்கிந்திய தீவுகளுக்கு ஏமாற்றம்

592
West indies vs Pakistan
Photo credits - Cricinfo

பந்து வீச்சாளர்களின் தீவிர போராட்டத்திற்கு பின் பாகிஸ்தான் அணி, தனது 400ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 56 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது.

பாகிஸ்தான் அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியாக, 64 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் இடம்பெற்ற 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் முறையாக விளையாடியது. தமது ஆரம்ப போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ஓட்டங்களால் இந்தியாவிடம் தோல்வியுற்றது.

எனினும், பின்னர் பினிக்ஸ் பறவையை போல் எழுச்சி பெற்ற பாகிஸ்தான் அணி தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாம் போட்டியில் இன்னிங்க்ஸ் மற்றும் 43 ஓட்டங்களால் வெற்றி பெற்று தகுந்த பதிலடி கொடுத்தது. எனினும், இறுதியில் துரதிஷ்டவசமாக 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

இந்நிலையில் டெஸ்ட் வரலாற்றை ஆரம்பித்து 64 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில், தனது முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியை டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் கடந்த 13ஆம் திகதி விளையாடியது. அத்துடன் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் முறை இளஞ்சிவப்பு பந்து பாவிக்கும் போட்டியாகவும் இப்போட்டி அமைந்தது.

இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் அசார் அலியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சதம், இளஞ்சிவப்பு பந்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட முதலாவது சர்வதேச டெஸ்ட் சதமாகப் பதிவு செய்யப்பட்டது. போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் ஆட்டமிழக்காமல் 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, 579 ஓட்டங்களைக் குவித்தது. அதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 357 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பின்னர் 222 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, துடுப்பாட்டத்தில் தடுமாறி, 32 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதனைத் தொடர்ந்து தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி, 4ஆம் நாள் ஆட்ட நேரை முடிவின்போது, 95 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. பரபரப்பான இந்த டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள், 251 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு, மேற்கிந்திய தீவுகள் அணி களம் இறங்கியது. ஐந்தாம் நாள் போட்டியில் மார்லன் சாமுவேல்ஸ் முகம்கொடுத்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ஜெர்மைன் பிளாக்வுட்டும் அரை மணித்தியாலயத்தில் ஆட்டமிழந்து செல்ல, ரோஸ்தான் சேஸ், பிராவோவுடன் இணைந்து கொண்டார். இவர்களிருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்காக 77 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

தனது விக்கெட்டை காத்துக்கொண்டு துடுப்பெடுத்தாடிய பிராவோவுக்கு ஓட்டங்களை குவிப்பதற்கு உதவி செய்த ரோஸ்தான் சேஸ் ஆட்டமிழக்க, மேற்கிந்திய தீவுகள் அணி இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. வெற்றிக்காக போராடிய பிராவோ 249 பந்துகளுக்கு முகங்கொடுத்து 116 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, யாசிர் ஷாவின் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

பிராவோவின் ஆட்டமிழப்போடு பாகிஸ்தானின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் அணியின் துள்ளியமான பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி, இறுதி முன்று விக்கெட்டுக்களையும், இரண்டு ரன் அவுட் உட்பட 26 ஓட்டங்களுக்குள் இழந்து மொத்தமாக 289 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் அவ்வணி 56 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

போட்டியின் ஆட்ட நாயகன் – அசார் அலி

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 579/3 d (155.3) – அசார் அலி 302*, அஸ்லம் 90, பிஷோ 2/125 

மேற்கிந்திய தீவுகள் (முதல் இன்னிங்ஸ்) – 357 (123.5) – பிராவோ 87, சாமுவேல்ஸ் 76, யாசிர் 5/121

பாகிஸ்தான் (இரண்டாம் இன்னிங்ஸ்) 123 (31.5) – அஸ்லம் 44, பிஷோ 8/49

மேற்கிந்திய தீவுகள் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 289 (31.5) – பிராவோ 116, அமீர் 3/63

இரண்டாம் டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை அபுதாபியில் நடைபெறும்.