19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான ”கொத்மலே” கால்பந்து சுற்றுத் தொடரில் இன்று (செப்.30) இடம்பெற்ற நான்காவதும் இறுதியுமான காலிறுதிப் போட்டியில் கந்தானை டி மசெனொட் கல்லூரி அணியை 4-1 என்ற கோல்கள் கணக்கில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி வெற்றி கொண்டது .

இதன்மூலம் அரையிறுதியில், கொத்மலே சொக்ஸ் நடப்புச் சம்பியன் புனித ஹென்ரியரசர் கல்லூரியை எதிர்கொள்ளும் வாய்ப்பை கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி பெற்றுள்ளது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த குழு மட்டத்திலான முதல் சுற்றுப் போட்டிகளில் குழு ”பி” யில் போட்டியிட்ட கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி, தாம் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று குழு நிலையில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

குழு ”சி” யில் கந்தானை டி மசெனொட் கல்லூரி அணி, தாம் விளையாடிய ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியடைந்தும், ஒரு சமநிலையான முடிவைப் பெற்றும் குழு மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், கொழும்பு சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய நான்காவது காலிறுதிப் போட்டியில், ஆட்டம் ஆரம்பமாகி 3ஆவது நிமிடத்தில் ஸாஹிரா கல்லூரி அணி வீரர் ஆகிப் மிகவும் சிறந்த முறையில் தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

அதே சூட்டோடு அடுத்த நிமிடத்தில் அவ்வணியின் மற்றொரு வீரரரான ரஸா தனது அணிகான இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுக்க,  அரங்கில் இருந்த ஸாஹிரா ரசிகர்களின் அதரவு முழக்கமும் அதிகரித்தது.

எனினும் மறு முனையில் மிகவும் போராடிய டி மசெனொட் கல்லூரி அணிக்கு 15ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைக்க, அதனை அவ்வணியின் வீரர் ப்ரமுதித உதைந்தார். அந்த பந்தை தனது கால்களுக்கு பெற்ற ரஹிம் சிறந்த முறையில் பந்தை கோல் கம்பங்களுக்குள் உதைந்து தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் இரு அணி வீரர்களினதும் போராட்டம் அதிகரித்தது. இரு அணியினரும் பல கோல் வாய்ப்புக்கைளைப் பெற்றனர். எனிறும் சிறந்த நிறைவுகள் இல்லாமையினால் அந்த வாய்ப்புக்களினால் இரு அணிகளும் பயனடையவில்லை.

எனினும் போட்டியின் 29ஆவது நிமிடத்தில் ஸாஹிரா கல்லூரி அணியின் முர்ஷிட் ஒரு கோலைப் பெற்றுக்கொடுக்க, போட்டியில் ஸாஹிரா அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி (3) – (1) டி மசெனொட் கல்லூரி

பின்னர் ஆரம்பமான போட்டியின் இரண்டாவது பாதியிலும் இரு அணியினரும் தமது திறமையை, முதல் பாதியை விட அதிகமாகவே காண்பித்தனர். இந்நிலையில் 54ஆவது நிமிடத்தில் ஸாஹிரா கல்லூரி அணி வீரர் சப்ரான் மற்றொரு கோலைப் பெற அவ்வணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன் பின்னர் இரு அணியினரும் பல கோணர் வாய்ப்புக்களைப் பெற்றும், அதன் மூலம் கோல்களை பெறவில்லை. போட்டியின் இறுதி நிமிடம் வரை இரு அணியினரும் மிகப் பாரிய முயற்சியுடன் விளையாடினர். எனினும் 2ஆவது பாதியில் சப்ரானின் கோல் மாத்திரமே பெறப்பட்ட ஒரு கோலாக இருந்தது.

எனவே ஸாஹிரா அணி மேலதிக 3 கோல்களினால் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தெரிவாகிய நான்காவது அணியாக திகழ்கின்றது.

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி (4) – (1) டி மசெனொட் கல்லூரி

இந்த வெற்றியைத் தொடர்ந்து, நடப்புச் சம்பியன் யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியை ஸாஹிரா கல்லூரி அணி அரையிறுதியில் எதிர்கொள்ளவுள்ளது.

 பெறப்பட்ட கோல்கள் 

ஸாஹிரா கல்லூரி – ஆகிப் (3) , ரஸா (4), முர்ஷிட் (29), சப்ரான் (54)
டி மசெனொட் கல்லூரி – ரஹிம் (15)

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – சப்ரான் சதார் (கொழும்பு ஸாஹிரா கல்லூரி)

ஏற்கனவே இந்த வாரம் இம்பெற்ற முதல் மூன்று காலிறுதிகளிலிருந்தும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணி, வென்னப்புவ புனித ஜோசெப் வாஸ் கல்லூரி அணி மற்றும் புனித ஹென்ரியசர் கல்லூரி அணிகள் தெரிவாகியுள்ளன.  

அரையிறுதியில் மோதவுள்ள அணிகள்

  • புனித பத்திரிசியார் கல்லூரி – புனித ஜோசெப் வாஸ் கல்லூரி
  • புனித ஹென்ரியசர் கல்லூரி – ஸாஹிரா கல்லூரி