நிபுன் பெரேரா அசத்தல்; புனித ஜோசப் வாஸ் கல்லூரிக்கு அபார வெற்றி

168
Joes fight back hard; Petes and Sebs post commanding scores

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று முடிவடைந்த போட்டிகளில், அநுராதபுர மத்திய கல்லூரியை தோற்கடித்து புனித ஜோசப் வாஸ் கல்லூரி வெற்றியை பெற்றுக் கொண்டதுடன்,

ஆனந்த கல்லூரியுடனான போட்டியில் இசிபதன கல்லூரி முதல் இனிங்ஸில் தோல்வியைத் தழுவிக் கொண்டது. இன்று ஆரம்பமான ஏனைய போட்டிகளின் முதல் நாள் நிறைவில், புனித ஜோசப் கல்லூரி, புனித செபஸ்டியன் கல்லூரி, புனித பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் திரித்துவக் கல்லூரி அணிகள் முன்னிலையில் உள்ளன.

புனித ஜோசப் வாஸ் கல்லூரி எதிர் அநுராதபுர மத்திய கல்லூரி

இரண்டாம் நாள் தொடக்கத்தில் தமது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த புனித ஜோசப் வாஸ் கல்லூரி துரிதமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. அற்புதமாக துடுப்பெடுத்தாடிய சந்தருவன் பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களை விளாசினார். இரண்டாவது இனிங்ஸிலும் சிறப்பான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட நிபுன் பெரேரா 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 36.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் புனித ஜோசப் வாஸ் கல்லூரி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

332 என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அநுராதபுர மத்திய கல்லூரி மீண்டுமொருமுறை சொற்ப ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஷெஹார ரணதுங்க மற்றும் நிபுன் பெரேரா தலா 3 விக்கெட்டுகள் சாய்க்க அநுராதபுர மத்திய கல்லூரிக்கு வெறும் 115 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதன்படி புனித ஜோசப் வாஸ் கல்லூரி 216 ஓட்டங்களினால் இலகு வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

முன்னர் முதல் இனிங்ஸிற்காக புனித ஜோசப் வாஸ் கல்லூரி 58 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் நிபுன் பெரேரா 104 ஓட்டங்களையும், திலான் பிரதீப 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் ரவிந்த பிரபாஸ்வர 4 விக்கெட்டுகளையும், சவிந்து பண்டார 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அநுராதபுர மத்திய கல்லூரியினால் முதல் இனிங்ஸில் 83 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. முதல் இனிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ஷெஹார ரணதுங்க மற்றும் நிபுன் பெரேரா தலா 4 விக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டனர். நிபுன் பெரேரா இப்போட்டியில் மொத்தமாக 7 விக்கெட்டுகளையும் 148 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 236/8d (58)
நிபுன் பெரேரா 104, திலான் பிரதீப 70
ரவிந்த பிரபாஸ்வர 4/28, சவிந்து பண்டார 2/35

அநுராதபுர மத்திய கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 83 (35.3)
ஹேஷான் சேனார 24
ஷெஹார ரணதுங்க 4/13, நிபுன் பெரேரா 4/21

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 178/3d (36.5)
சந்தருவன் பெர்னாண்டோ 100*
நிபுன் பெரேரா 44, ரவிந்த பிரபாஸ்வர 2/32

அநுராதபுர மத்திய கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 115 (45)
ஷெஹார ரணதுங்க 3/42, நிபுன் பெரேரா 3/33, சமோத் பெரேரா 2/11


ஆனந்த கல்லூரி எதிர் இசிபதன கல்லூரி

பிரபல அணிகளான ஆனந்த மற்றும் இசிபதன கல்லூரிகளுக்கிடையிலான போட்டி எதிர்பார்த்தது போன்றே விறுவிறுப்பாக நடைபெற்றது. கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டி சமநிலையில் நிறைவுற்றதுடன் முதல் இனிங்ஸ் வெற்றியை 3 ஓட்டங்களினால் ஆனந்த கல்லூரி தனதாக்கிக் கொண்டது.

இரண்டாம் நாள் தொடக்கத்தில் தமது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த ஆனந்த கல்லூரி 8 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. கவிஷ்க சஞ்சுல மற்றும் அசேல சிகர அரைச்சதம் கடந்தனர். துஷான் ஹெட்டிகே மற்றும் சஹன் சுரவீர தலா 33 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொண்டதுடன் இசிபதன கல்லூரி சார்பாக மதுஷிக சந்தருவன் மற்றும் லஹிரு டில்ஷான் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

229 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இசிபதன அணியினரால் ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. பெதும் நிஸ்ஸங்க 54 ஓட்டங்களையும் சஞ்சுல அபேவிக்ரம 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் அசத்திய ஆனந்த கல்லூரியின் அணித் தலைவர் சம்மு அஷான் 32 ஓட்டங்களை வழங்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னர் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி முதல் இனிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் சஹன் சுரவீர 65 ஓட்டங்களையும் பந்து வீச்சில் லஹிரு டில்ஷார 5 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.

இசிபதன கல்லூரி தமது முதல் இனிங்சிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அசேல சிகர, திலீப ஜயலத் மற்றும் சம்மு அஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த, ஹேஷான் பெர்னாண்டோ 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 163 (47.2)
சஹன் சுரவீர 65
சஞ்சுல பண்டார 3/22, லஹிரு டில்ஷார 5/61

இசிபதன கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 160 (44.2)
ஹேஷான் பெர்னாண்டோ 53
அசேல சிகர 2/07, திலீப ஜயலத் 2/24, சம்மு அஷான் 2/47

ஆனந்த கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 225/8d (58)
கவிஷ்க சஞ்சுல 61, அசேல சிகர 50, துஷான் ஹெட்டிகே 33, சஹன் சுரவீர 33
மதுஷிக சந்தருவன் 3/69, லஹிரு டில்ஷான் 3/80

இசிபதன கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 133/7 (38)
பெதும் நிஸ்ஸங்க 54, சஞ்சுல அபேவிக்ரம 49
சம்மு அஷான் 6/32

போட்டி முடிவு: சமநிலையில் முடிவடைந்தது. ஆனந்த கல்லூரி முதல் இனிங்ஸில் 3 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.


 

புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித சேர்வேஷஸ் கல்லூரி

‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் புனித ஜோசப் கல்லூரியும் புனித சேர்வேஷஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன. புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித சேர்வேஷஸ் கல்லூரி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரியினர் சுமாரான ஓட்ட எண்ணிக்கையான 148 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர். ஹரீன் குரே 37 ஓட்டங்களையும், தஷான் பெரேரா 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் அசத்திய சஷிக்க துல்ஷான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு களமிறங்கிய புனித சேர்வேஷஸ் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆரம்பம் முதலே பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். ருச்சிர ஏக்கநாயக்க 3 விக்கெட்டுகளையும், ஜெஹான் டேனியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த, ஆட்ட நேர முடிவின் போது புனித சேர்வேஷஸ் அணியினர் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி – 148 (56.3)
ஹரீன் குரே 37, தஷான் பெரேரா 26, நிபுண சுமனசிங்க 22
சஷிக்க துல்ஷான் 5/56

புனித சேர்வேஷஸ் கல்லூரி – 60/6 (27)
ருச்சிர ஏக்கநாயக்க 3/15, ஜெஹான் டேனியல் 2/35

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி

இன்று இடம்பெற்ற குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியும் கண்டி தர்மராஜ கல்லூரியும் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற புனித செபஸ்டியன் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அருமையாக துடுப்பெடுத்தாடிய நிமேஷ் பண்டார 83 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

நுவனிது  பெர்னாண்டோ மற்றும் பிரஷான் பெர்னாண்டோ தலா 49 ஓட்டங்களையும் விசித அபிலாஷ் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். கிஹான் விதாரண (5/95) மற்றும் ருக்மல் திஸாநாயக்க (3/94) தமக்கிடையே 8 விக்கெட்டுகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து களமிறங்கிய தர்மராஜ கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி – 295 (76.5)
நிமேஷ் பண்டார 83, நுவனிது பெர்னாண்டோ 49, பிரஷான் பெர்னாண்டோ 49, விசித அபிலாஷ் 45, கிஹான் விதாரண 5/95, ருக்மல் திஸாநாயக்க 3/94

தர்மராஜ கல்லூரி – 58/2 (18)

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்


புனித பீட்டர்ஸ் கல்லூரி எதிர் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி

இன்று இடம்பெற்ற குழு ‘A’ இற்கான மற்றுமொரு போட்டியில் புனித பீட்டர்ஸ் கல்லூரியும் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரியும் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற புனித பீட்டர்ஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத்  தீர்மானித்தது.

ஆரம்பம் முதலே சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய புனித பீட்டர்ஸ் கல்லூரி சார்பாக 4 வீரர்கள் அரைச்சதம் கடந்தனர். அதிரடியாக ஆடிய லக்ஷின ரொட்ரிகோ 82 ஓட்டங்களையும், மானெல்க டி சில்வா 71 ஓட்டங்களையும் குவித்தனர். அவர்களுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய ரன்மித் ஜயசேன ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும், அனிஷ்க பெரேரா 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, புனித பீட்டர்ஸ் கல்லூரி 53 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு களமிறங்கிய புனித அந்தோனியார் கல்லூரி ஆட்டமுடிவின் போது 32 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட்டுகளை இழந்து 25 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித பீட்டர்ஸ் கல்லூரி – 339/6d (53)
லக்ஷின ரொட்ரிகோ 82, மானெல்க டி சில்வா 71, ரன்மித் ஜயசேன 69*, அனிஷ்க பெரேரா 58
அரிந்த சதுரங்க 2/63

புனித அந்தோனியார் கல்லூரி 25/5 (32)

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


தர்மபால கல்லூரி எதிர் திரித்துவக் கல்லூரி

இன்று இடம்பெற்ற குழு ‘A’ இற்கான மற்றைய போட்டியில் பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரியும் கண்டி திரித்துவக் கல்லூரியும் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற திரித்துவக் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய தர்மபால கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அவிஷ்க ஹசரிந்த 27 ஓட்டங்களையும், மஹிம வீரகோன் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் அசத்திய ஷண்முகநாதன் ஷனோகீத் 45 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் நாள் ஆட்டம் நிறைவடைய சொற்ப நேரமே எஞ்சியிருந்த நிலையில் களமிறங்கிய திரித்துவக் கல்லூரி 7 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பேதுமின்றி 19 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி – 113 (42)
அவிஷ்க ஹசரிந்த 27, மஹிம வீரகோன் 25, கிஹான் பெரேரா 16
ஷண்முகநாதன் ஷனோகீத் 6/45, விமுக்தி நெதுமால் 2/09

திரித்துவக் கல்லூரி – 19/0 (7)

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.