42ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

339
National games opening ceromany

42ஆவது தேசிய விளையாட்டு விழா நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் முதற்தடவையாக கோலாகலமாக ஆரம்பமாகியது.

இவ்விழாவானது செப்டம்பர் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெற இருக்கின்றது. இந்த போட்டிகளுக்காக பல்வேறு துறைகளை சார்ந்த 2,100 வீர வீராங்கனைகள் போட்டியிட உள்ளனர்.

இதன் ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொண்டார். அவரது தலைமையில் இடம்பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கனேசன், இலங்கையின் முன்னாள் தடகள வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க உட்பட முன்னாள், தற்போதைய வீர வீராங்கனைகள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய இலங்கை தேசிய கொடியை ஏற்றி நாட்டிலுள்ள அனைத்து வீர வீராங்கனைகளையும் இணைக்கும் இவ்விழாவை ஆரம்பித்து வைத்தார். அதன்போது, அமைச்சர் தயாசிறி ஜயசேகர விளையாட்டுதுறை அமைச்சக கொடியையும், அந்தந்த மாகாணங்களுக்குரிய விளையாட்டு அமைச்சர்கள், தமது மாகாணக் கொடிகளையும் ஏற்றினர்.

ஒலிம்பிக் பாரம்பரிய போட்டிகளுக்குரிய உத்தியோகபூர்வ விளக்கினை, வட மாகாணத்தை சேர்ந்த மூத்த விளையாட்டு வீரர்களான திரு. அன்டன் பிள்ளை, திருமதி ஜெயந்தி சோமசேகர டீ சில்வா ஆகியோர் ஏற்றி ஆரம்பித்து வைத்தனர். அத்துடன், வீர வீராங்கனைகளுக்குரிய சத்தியப் பிரமாணத்தை முன்னாள் வீரர், K.M.J. மஞ்சுள குமாரசிங்கவும், நடுவர்களின் சத்திய பிரமாணத்தை மூத்த தொழில்நுட்ப அதிகாரி T.M. தேவேந்தரவும் நிகழ்த்தினார்.

ஆரம்ப உரையை நிகழ்த்திய, பிரதம விருந்தினர் சபாநாயகர்  கரு ஜயசூரிய, இலங்கையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் அனைத்து வீர வீராங்கனைகளுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஆரம்ப இந்நிகழ்வை அடுத்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு துரையப்பா அரங்கில் பல்வேறான விளையாட்டு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. எனவே துரையப்பா அரங்கிலிருந்து, உடனுக்குடன் இப்போட்டிகளின்மு ழுமையான விபரங்களை அறிந்துகொள்ள www.thepapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.