முதல் நாள் நிறைவில் ஆனந்த மற்றும் புனித ஜோசப் வாஸ் கல்லூரிகள் முன்னிலையில்

211
Ananda vs Isipathana

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமான போட்டிகளின் முதல் நாள் நிறைவின் போது ஆனந்த கல்லூரி மற்றும் புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணிகள் முன்னிலை வகிக்கின்றன.

ஆனந்த கல்லூரி எதிர் இசிபதன கல்லூரி

பாடசாலை கிரிக்கெட்டில் பிரபலமான அணிகள் பலவற்றை உள்ளடக்கிய குழு ‘B’ இன் முக்கியமான போட்டியொன்றில் ஆனந்த கல்லூரி மற்றும் இசிபதன கல்லூரி அணிகள் மோதிக்கொண்டன. எதிர்பார்த்ததைப் போன்றே விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், ஆனந்த கல்லூரியானது முதல் இனிங்ஸில் 3 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றது.

கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் போட்டி இடம்பெற்றதுடன் நாணயச் சுழற்சியில் வென்ற இசிபதன கல்லூரி களத்தடுப்பினைத் தெரிவு செய்தது. ஆனந்த கல்லூரி சார்பாக சஹன் சுரவீர அரைச்சதம் கடந்தார். சஹன் 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் குறைவான ஓட்டங்களுக்கு ஓய்வறை திரும்பினர்.

இதன்படி, 47.2 ஓவர்களில் 163 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆனந்த கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் அசத்திய லஹிரு டில்ஷார 61 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

164 என்ற சுமாரான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி களமிறங்கிய இசிபதன கல்லூரி சார்பிலும் ஒரு துடுப்பாட்ட வீரரே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹேஷான் பெர்னாண்டோ 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த போதிலும், இசிபதன கல்லூரியினால் முதல் இனிங்ஸில் முன்னிலை பெற முடியவில்லை. அசேல சிகர, திலீப ஜயலத் மற்றும் சம்மு அஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த இசிபதன கல்லூரி 160 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 163 (47.2)
சஹன் சுரவீர 65
சஞ்சுல பண்டார 3/22, லஹிரு டில்ஷார 5/61

இசிபதன கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 160 (44.2)
ஹேஷான் பெர்னாண்டோ 53
அசேல சிகர 2/07, திலீப ஜயலத் 2/24, சம்மு அஷான் 2/47


புனித ஜோசப் வாஸ் கல்லூரி எதிர் அநுராதபுர மத்திய கல்லூரி

வென்னப்புவ ஆல்பர்ட் பீரிஸ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியை வென்ற அநுராதபுர மத்திய கல்லூரி எதிரணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய புனித ஜோசப் வாஸ் கல்லூரி 58 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அற்புதமான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட நிபுன் பெரேரா 104 ஓட்டங்களைக் குவித்தார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய திலான் பிரதீப 70 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் ரவிந்த பிரபாஸ்வர 4 விக்கெட்டுகளையும் மற்றும் சவிந்து பண்டார 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து களமிறங்கிய அநுராதபுர மத்திய கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறினர். ஹேஷான் சேனார 24 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள மற்றைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இதன்படி, அநுராதபுர மத்திய கல்லூரி 35.3 ஓவர்களில் 83 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சிலும் தனது கைவரிசையைக் காட்டிய நிபுன் பெரேரா 21 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷெஹார ரணதுங்க 13 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்ததுடன், முதல் இனிங்ஸில் 153 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள புனித ஜோசப் வாஸ் கல்லூரிக்கு, போட்டியை வெற்றி கொள்ள அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 236/8d (58)
நிபுன் பெரேரா 104, திலான் பிரதீப 70
ரவிந்த பிரபாஸ்வர 4/28, சவிந்து பண்டார 2/35

அநுராதபுர மத்திய கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 83 (35.3)
ஹேஷான் சேனார 24
ஷெஹார ரணதுங்க 4/13, நிபுன் பெரேரா 4/21

நாளை வெள்ளிக்கிழமை(30) போட்டிகளின் இரண்டாவது நாளாகும்.