148 பந்துகளில் 235 ஓட்டங்களை குவித்த 16 வயது வீரர்

296
Umesh Kurera

நீர்கொழும்பு புனித பேதுரு கல்லூரி அணியின் 16 வயதேயான உமேஷ் லக்சான் குரேரா மிகவும் அதிரடியாக துடுப்பாடி 235 ஓட்டங்களை குவித்து அசத்தியுள்ளார். 19 வயதுக்குட்பட்ட டிவிசன் இரண்டிக்கான சிங்கர் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில், கடந்த வாரம் தழுப்பொதவில் இடம்பெற்ற திஸ்ஸ மத்திய கல்லூரிக்கு எதிரான போட்டியிலேயே இவர் இந்த அதிரடி இரட்டை சதத்தை அடித்தார்.

குறித்த போட்டியில் நீர்கொழும்பு புனித பேதுரு கல்லூரி 7 விக்கெட்டுகளால் தோல்வியை தழுவியது. எனினும் அவ்வணி நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த போது களம் இறங்கிய வலது கை துடுப்பாட்ட வீரரான குரேரா, 20 சிக்ஸர்கள் மற்றும் 22 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 148 பந்துகளில் 235 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் கல்லூரி அணிக்காக விளையாடும் இவர், கல்லூரிக்கும் தாய் நாட்டிற்கும் கீர்த்தியை பெற்று கொடுப்பதையே தனது கனவாக கொண்டுள்ளார். இது குறித்து அவர் Thepapare.com இற்கு பிரத்தியேகமாக வங்கிய பேட்டியில்,என்னுடைய, இந்த முயற்சிகள் குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஒருநாள் இலங்கை அணியை பிரதிநிதித்துவப் படுத்துவேன். இதே போன்று தொடர்ந்தும், அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செய்வேன்” என்று குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் 17 வயதை அடையும் குரேராவுக்கு மேலும் இரண்டு வருடம் முதல் பதினொருவர் கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியும். இந்த இரட்டை சதம் இவருடைய முதலாவது இரட்டை சதமல்ல. குரேரா, கடந்த வருடமும் ரத்தொலுவ ஸ்ரீ பஞ்ஞானந்த மகா வித்தியாலயத்துக்கு எதிரான போட்டியிலும் 200 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலது கை ஓப் சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸின் தலைமையின் கீழ் வியைாடும் புனித பேதுரு கல்லூரி அணி, கடந்த பருவகால டிவிசன் 3 போட்டிகளில் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் இம்முறை டிவிசன் 2இற்கான பருவகால போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கின்றது.

பீரிஸ் தற்போது, இலங்கை ஏ அணியில் பயிற்சி பெற்று வருகின்றார். இந்த அணி எதிர்வரும் நாட்களில் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியுடனான ஒரு தொடரில் விளையாடவுள்ளது.

இலங்கை தேசிய அணியின் புதிய வீரரும் சகலதுறை வீரருமான தசுன் ஷானகவும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நீர்கொழும்பு புனித பேதுரு கல்லூரியில் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.