வெளிநாட்டு வீரர்களுடனான போட்டியை சமப்படுத்தியது இலங்கை கால்பந்து அணி

1359
Sri Lanka National Football Team and Foreigners XI

இலங்கை தேசிய கால்பந்து அணி மற்றும் இலங்கையில் உள்ள வெளிநாட்டு வீரர்களின் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இலங்கை தேசிய கால்பந்து அணியினர் எதிர்வரும் நாட்களில் கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. எனவே, அதற்கு முன்னர் இலங்கையில் உள்ள கால்பந்து கழகங்களில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் 11 பேர் கொண்ட அணியுடன் இலங்கை தேசிய அணி விளையாடியது. இந்தப் போட்டி பொலிஸ் பார்க் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றது.

போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே இலங்கை அணி வீரர்களான சர்வான் ஜோஹர் மற்றும் ஜானரூபன் வினோத் ஆகியோருக்கு கோல்களைப் பெற்றுக்கொள்ளும் இரு வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் அந்த வாய்ப்புகளினால் அவர்கள் பயன் பெறவில்லை.

Photo Album: Sri Lanka National Football Team and Foreigners XI

எனினும், முதல் பாதியில் இலங்கை வீரர்கள் கோல்கள் பெறுவதற்கான ஆர்வம் குறைந்த நிலையில் விளையாடுவதை அவதானிக்க முடியுமாய் இருந்தது. எனினும் இலங்கை அணியின் மத்திய கள வீரர்கள் சற்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக அணித்தலைவர் ரிப்னாஸ் வழமை போன்று தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

போட்டியில் 30 நிமிடங்கள் கடந்த நிலையில் வெளிநாட்டு வீரர்கள் அணியின் அபொன்ஜா ஜிபோலோ தலையால் முட்டி கோல் பெறுவதற்கான முயற்சியொன்றைப் பெற்றார். அதேபோன்று இலங்கை அணித்தலைவர் ரிப்னாஸும் தனது வழமையான முயற்சியான கோலுக்கு தொலைவில் இருந்து உதைத்து கோல் பெறும் முயற்சியொன்றையும் மேற்கொண்டார். எனினும் இரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

போட்டியின் முதல் பாதியில் இரு அணி கோல் காப்பாளர்களுக்கும் எந்தவித அழுத்தங்களும் இருக்கவில்லை.

முதல் பாதி : இலங்கை அணி 00 – 00 வெளிநாட்டவர்கள் அணி

எனினும் பின்னர் ஆரம்பமான இரண்டாவது பாதி, முதல் பாதியை விட மிகவும் சிறந்த ஒரு ஆட்டமாக இருந்தது. இரண்டாவது பாதியில் 49ஆவது நிமிடத்தில் இலங்கை அணிக்கு இலவச உதை ஒன்றுக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை சிறந்த முறையில் பயன்படுத்திய சர்வான் ஜாஹர் கோல் ஒன்றை அடித்து இலங்கை அணியை முன்னிலைப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை அணி தனது பின்கள வீரரகளை பலப்படுத்திக்கொண்டு எதிரணிக்கு கோல் பெற முடியாத விதத்தில் ஆடியது.

அவ்வாறான ஒரு நிலையிலும் போட்டியின் 70ஆவது நிமிடத்தில் வெளிநாட்டவர்கள் அணிக்கான முதல் கோலை ஜிபோலா பெற்றுக் கொடுக்க, போட்டி சமநிலையடைந்தது. இது எஞ்சியிருக்கும் நேரத்தை மேலும் விறுவிறுப்படையச் செய்தது.

அதன் பின்னர், 74ஆவது நிமிடத்தில் போட்டியில் சிறந்த விளையாட்டைக் காட்டி வந்த ஜானரூபன் வினோத் தனது முதலாவது கோலைப் பெற்றுக்கொடுக்க, போட்டியில் இலங்கை அணி முன்னிலை பெற்றது. எனினும் அந்த கோலின் மகிழ்ச்சியை முழுமையாக ருசித்து முடிப்பதற்கு முன்னர், சிறந்த முறையில் தனது திறமையின் மூலம் ஐஸாக் அபா, வெளிநாட்டவர் அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

பின்னர், போட்டியின் வெற்றியாளர்களைத் தீர்மானிப்பதற்காக, தமக்கான மூன்றாவது கோலைப் பெறுவதற்கு இரு அணி வீரர்களும் போராடினர். எனினும் யாருக்கும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முழு நேரம் : இலங்கை அணி 02 – 02 வெளிநாட்டவர்கள் அணி

Thepapare.com இன் சிறந்த வீரர் : ஜானரூபன் வினோத்

போட்டியின் பின்னர் இலங்கை தேசிய அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் ட்டலி ஸ்டீன்வோல் Thepapare.com இடம் கருத்து தெரிவிக்கையில்,

‘இன்றைய போட்டியில் எமது வீரர்களின் திறமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். குறிப்பாக பின்கள வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். போட்டியின்போது ஒருசில தவறுகள் இருந்ததை அவதானித்தோம். எனினும் எதிர்வரும் நாட்களில் அவற்றை சரிசெய்து கொள்ளலாம். நாம், நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் மேலும் ஓரிரு போட்டிகளில் விளையாட உள்ளோம்’ என்று தெரிவித்தார்.

ஓக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இலங்கை தேசிய அணி கம்போடியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. எனினும் அதற்கு முன்னர் இலங்கை அணி வீரர்கள் கடின உழைப்புக்களை மேற்கொள்ள வேண்டிய அதே நேரம், வீரர்களின் சிறந்த உடல் தகுதியும் உறுதி செய்யப்பட வேண்டிய ஒரு தேவை உள்ளது.