17 வயதிற்குட்பட்ட கிரிக்கட் சாம்பியன் செபஸ்டியன் கல்லூரி

260
u17 cricket final

17 வயத்திற்குட்பட்ட பாடசாலை கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் புனித செபஸ்டியன் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரியை 141 ஓட்டங்களால் வென்று மாபெரும் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

முதலாவது அரையிறுதியில் பிரபலமிக்க ஆனந்த கல்லூரியுடன் மோதிய புனித செபாஸ்டியன் கல்லூரி அப்போட்டியில் 17 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

மறுமுனையில் 2ஆம் அரையிறுதியில் மோதிக்கொண்ட தர்ஸ்டன் மற்றும் பீட்டர்ஸ் கல்லூரிகளில், தர்ஸ்டன் கல்லூரி பீட்டர்ஸ் கல்லூரியை 47 ஓட்டங்களால் வென்று இறுதிப்போட்டியில் இடம் பிடித்தது.

அனைவரது எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மூர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித செபஸ்டியன் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

தீர்மானம் சரி என்ற வகையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்டியன் கல்லூரி 50 ஓவர்களும் சிறப்பாக விளையாடியது.

அரையிறுதிப் போட்டியில் அரைச் சதம் அடித்த நுவனிது பெர்னாண்டோ அற்புதமாக துடுப்பெடுத்தாடி 138 ஓட்டங்கள் குவித்து அணிக்குத் தூணாக நின்று அணி சிறந்த ஓட்டத்தை அடைய உதவினார்.

நுவனிது பெர்னாண்டோவிற்கு துணையாக துடுப்பெடுத்தாடிய தருஷ பெர்னாண்டோ மற்றும் பிரவீன் குரே முறையே 42 மற்றும் 39 ஓட்டங்களைக் குவித்தனர்.

நியமிக்கப்பட்ட 50 ஓவர்களில் செபாஸ்டியன் கல்லூரி 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது. தர்ஸ்டன் அணி சார்பாக பந்து வீசிய பந்து வீச்சாளர்கள் பிரகாசிக்கத் தவறினர்.

யேஷான் விக்ரமார்ச்சி 52 ஓட்டங்களை வாரி வழங்கினாலும் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் நிபுன் லக்ஷான் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

262 எனும் சவாலான ஓட்ட இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட தர்ஸ்டன் கல்லூரி களமிறங்கியது. அரையிறுதியைப் போன்று சிறப்பாக துடுப்பெடுத்தாட தர்ஸ்டன் கல்லூரி தவறியது.

ஆரம்பம் முதலே செபஸ்டியன் கல்லூரியின் பந்து வீச்சிற்குத் தடுமாறிய தர்ஸ்டன் கல்லூரி விக்கட்டுகளைத் தாராளமாக இழக்கத் துவங்கியது.

தர்ஸ்டன் கல்லூரி துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த நிமேஷ் பெரேரா 40 ஓட்டங்களைக் குவித்தார். ஏனைய வீரர்கள் முகம் கொடுத்த பந்துகளில் ஓட்டங்களைக் குவிக்க சிரமப்பட தர்ஸ்டன் கல்லூரியின் வெற்றிக்கனவு கலைந்தது.

இறுதியில் 42.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்த தர்ஸ்டன் கல்லூரி 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இறுதிப் போட்டி ஒன்றில் தர்ஸ்டன் அணியின் இத்தகைய மோசமான துடுப்பாட்டம் அவ் அணிக்கு கடும் தோல்வி ஒன்றை பெற்றுக்கொடுத்தது துரதிஷ்டவசமாகும்.

தர்ஸ்டன் அணிக்கு தடையாக அமைந்த செபஸ்டியன் கல்லூரியின் வினுஜ ரணசிங்க 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

சற்று அதிக ஓட்டங்களைக் கொடுத்தாலும் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றிய தருஷ பெர்னாண்டோ செபஸ்டியன் கல்லூரியின் வெற்றிக்கு வழி அமைத்தார்.

துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய சகல துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செபஸ்டியன் கல்லூரி 141 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இறுதிப் போட்டி ஒன்றில் மாபெரும் ஓட்ட வித்தியாசத்தில் வென்று சரித்திரத்தில் இடம்பிடித்தது செபஸ்டியன் கல்லூரி.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி – 262/5 (50)

நுவனிது பெர்னாண்டோ 138, தருஷ பெர்னாண்டோ 42, பிரவீன் குரே 39

யேஷான் விக்ரமார்ச்சி 2/52, நிபுன் லக்ஷான் 2/48

தர்ஸ்டன் கல்லூரி – 121/10 (42.4)

நிமேஷ் பேரேரா 40

விநுஜ ரணசிங்க 3/15, தருஷ பெர்னாண்டோ 2/30