இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளையில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக தனன்ஜெய டி சில்வா, பெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கினார்கள். பெர்னாண்டோ டக்- அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து வந்த குசல் மெண்டிஸ் (1), சந்திமால் (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் மேத்யூஸ் (40) சிறப்பாக விளையாடி வந்த நிலையில், பந்து தலையில் தாக்கி வெளியேறினார்.

Photo Album – Sri Lanka vs Australia – 4th ODI

மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த தனன்ஜெய டி சில்வா (76) அரைச்சதம் கடந்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்தவர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை எடுத்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் பந்துவீச்சில் ஜான் ஹஸ்டிங்ஸ் 45 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பின்னர் 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர் வார்னர் (19) நிலைக்கவில்லை. மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் பின்ச் (55) 19 பந்துகளில் அரைச்சதம் அடித்தார். கவாஜா ஓட்டம் எதுவும் எடுக்காமல் எல்பிடப்ளியு முறையில் ஆட்டம் இழந்தார்.

டிராவிஸ் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, பெய்லி நிதானமாக ஆடி அரைச்சதம் அடித்தார். இதனால் அவுஸ்திரேலியா 31 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மட்டும் இழந்து 217 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜ் பெய்லி 85 பந்துகளில் 90 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 212/10 (50)
தனஞ்சய டி சில்வா 76, எஞ்சலோ மெதிவ்ஸ் 40, சச்சித் பதிரன 24
ஜோன் ஹேஸ்டிங்ஸ் 45/6, எடம் சம்பா 30/1

அவுஸ்ரேலியா – 217/4 (31)
ஜோர்ஜ் பெயிலி 90*, ஆரோன் பின்ச் 55, டிராவிஸ் ஹெட் 40
சச்சித் பதிரன 37/3

அவுஸ்திரேலிய அணி 6 விக்கட்டுகளால் வெற்றி